

- ஜோதிடர் ஜெயம் சரவணன்
அஸ்வினி -
இதுவரை இருந்த மன அழுத்தங்கள் படிப்படியாகக் குறையும். தடைபட்டிருந்த காரியங்கள் முன்னேற்றப் பாதைக்கு செல்லும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேரும் சூழல் உருவாகும். இதுதொடர்பான விவாகரத்து வழக்குகள் ஏதேனும் இருந்தால் அதை திரும்பப் பெற்று சேர்ந்து வாழ வழிவகைகள் உண்டாகும்
உத்தியோகம் - பணிச்சுமை குறையும். அலுவலகத்தில் இப்போது உங்களைப் புரிந்து கொள்வார்கள். உயரதிகாரியின் கோபம் குறையும். தேவையற்ற இடமாற்றம் ரத்தாகும். வீடு மாற்றம் வாகன மாற்றம் போன்றவை நடக்கும். உங்கள் கருத்துக்கு அலுவலகத்தில் அங்கீகாரம் கிடைக்கும். கிடப்பில் போடப்பட்ட பதவி உயர்வு சம்பந்தமான விஷயங்கள் இப்போது பரிசீலிக்கப்படும். உங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும். மொத்தத்தில் சாதகமான பலன்களையே தரக்கூடிய வாரமாக உள்ளது.
தொழில் - தொழிலில் இருந்த தடைகள் எல்லாம் மெல்ல மெல்ல விலகும். தொழில் வளர்ச்சிப் பாதை நோக்கி செல்லும். அரசு வழியில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். வழக்குகள் சாதகமாகும். போட்டி நிறுவனங்களுக்கு சமமாக நீங்களும் போட்டியிடுவீர்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு நல்லகாலம் ஆரம்பித்து விட்டது. வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பார்ப்பார்கள். புதிதாகத் தொழில் தொடங்கும் ஆர்வலர்கள் அதற்கான ஆரம்பகட்ட வேலைகளைப் பார்ப்பார்கள். மொத்தத்தில் தொழில் நன்றாக இருக்கிறது.
பெண்களுக்கு - மனதில் இருந்த குழப்பங்கள் தீரும். மனம் தெளிவடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சுமுகமாகும். வேலைக்கு காத்திருப்போர் வேலை கிடைக்கப் பெறுவார்கள். ஏற்கனவே வேலையில் இருப்போருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாகவே இருக்கும்.
மாணவர்களுக்கு - படிப்பில் இருந்த அச்சம் விலகும். தன்னம்பிக்கை பிறக்கும். மனக்கட்டுப்பாடு அதிகரிக்கும்.
கலைஞர்களுக்கு - நம்பிக்கை தரும் விதத்தில் பேச்சுவார்த்தைகள் நடக்கும். உறவினர் ஒருவரின் உதவியால் நன்மைகள் நடக்கும்.
பொதுப்பலன் - திருமணம் நடக்கும். விவாகரத்து ஆனவர்களுக்கு மறுமணம் அமையும். இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உருவாகும். வீடு வாங்குதல், வீடு கட்டுதல் போன்றவை நடக்கும். பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. தாயார் உடல் நலம் சீராகும். அதேசமயம் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும்.
இந்த வாரம் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, ஞாயிறு இந்த ஐந்து நாட்களும் பணவரவு, சொத்து சேர்க்கை மற்றும் நல்ல பலன்கள் நடக்கும். திங்கள் மற்றும் சனி இந்த இரண்டு நாட்களும் பெரிய நன்மைகள் ஏதும் நடக்காது. அப்படி ஏதேனும் நடந்தால் உங்களுக்கு எந்த லாபமும் கிடைக்காது. சிந்தித்து செயல்படுங்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீமுருகப் பெருமானுக்கு செவ்வரளி மலர் சூட்டி, நல்லெண்ணெய் பம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் பெருகும். தடைகள் அகலும்.
*************************************************
பரணி -
இதுவரை காத்திருந்ததற்கு நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது. மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் மீண்டும் தொடங்கும். எதிர்பாராத வகையில் பெரும் தொகை கிடைக்கும். வங்கிகளில் கடன் கேட்டு விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டு பரிசீலனைக்கு வரும்.
உத்தியோகம் - பணியில் இருந்த மந்தநிலை மாறும். சோம்பல் விலகும். உற்சாகமாக பணியாற்றுவீர்கள். சக ஊழியர் உதவியோடு வேலைகளை முடிப்பீர்கள். அலுவல் விஷயமாக வெளியூர் சென்று வருவீர்கள். அலுவலகத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்படுவீர்கள். விற்பனைப் பிரதிநிதிகள் உங்களின் மாதாந்திர டார்கெட்டை எட்டுவீர்கள். போக்குவரத்து ஊழியர்கள் கூடுதல் வருமானம் பார்ப்பார்கள். கட்டுமானத் தொழிலாளர்கள் ஊக்கத்தொகை பெறுவார்கள். அதாவது கூடுதல் பணி நேரம் செய்து அதற்கான ஊதியத்தை இருமடங்காக பெறுவீர்கள்.
தொழில் - தொழிலில் இருந்த தடைகள் அகலும். வளர்ச்சிக்கான வழி கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். அரசு தொடர்பான வழக்குகள் சாதகமாகும். அரசோடு இணக்கம் ஏற்படும். வருமானவரி பிரச்சினைகள் சுமூகமாக தீரும். உங்கள் நிறுவனத்தின் மீதான தவறான பார்வை நீங்கும். போட்டி நிறுவனங்கள் போட்டியிலிருந்து விலகும். எதிர்தரப்பு நிறுவனத்திலிருந்து முக்கியமான ஒரு நபர் உங்கள் நிறுவனத்தில் வந்து இணைவார். அவரால் பலவிதமான ஒப்பந்தங்கள் உண்டாகும். அயல்நாட்டு நிறுவனத்தோடு தொழில் ஒப்பந்தம் ஏற்படும். சிறு மற்றும் குறு தொழில் அதிபர்கள் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிப்பார்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலமாக மேலும் உற்சாகமாக பணிபுரிவார்கள்.
பெண்களுக்கு - மனதில் மகிழ்ச்சி தாண்டவமாடும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மருத்துவ உதவியுடன் இப்போது குழந்தை உண்டாகும். வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பணியிட மாறுதல் கிடைக்கும்.
மாணவர்களுக்கு - நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். தேர்ச்சி விகிதம் ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி பெறும்.
கலைஞர்களுக்கு - நிறைய பேச்சுவார்த்தைகள் நடந்து ஒரு சில ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெரும் வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. வெளிநாட்டிலிருந்து உதவி கிடைக்கும்.
பொதுபலன் - மனதில் இருந்த பாரம் இறங்கும். மனம் தெளிவடையும். சிந்தனை சீராகும். அறிவு கூர்மையாகும். மொத்தத்தில் முடங்கிக்கிடந்த மனமும் அறிவும் இனி தெளிவாக மாறும். அவசரப்பட்டு எடுத்த முடிவுகளால் இருந்த பிரச்சினைகள் எல்லாம் இப்போது ஒவ்வொன்றாக தீரும். சொந்த வீடு கனவு நிறைவேறும். வாகனத்தை மாற்றும் சிந்தனை மேலோங்கி இந்த வாரம் வாகன மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கணவரை இழந்த பெண்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும்.
இந்த வாரம் திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி இந்த ஐந்து நாட்களும் நற்பலன்களும், பண வரவும், மனமகிழ்ச்சியும் ஏற்படும்.
செவ்வாய் மற்றும் ஞாயிறு சரியில்லாத நாட்கள். பயணங்கள் தவிர்க்க வேண்டும், புதிய முயற்சிகளில் ஈடுபடக் கூடாது.
வணங்க வேண்டிய தெய்வம் - நவக்கிரகத்தில் இருக்கும் ராகு பகவானுக்கும் கேது பகவானுக்கும் வஸ்திரம் சார்த்தி தீபமேற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். தடைகள் அகலும். மனதில் நம்பிக்கை பிறக்கும்.
****************************************************
கார்த்திகை -
மனதில் தைரியம் அதிகமாகி சட்டென்று ஒரு வெறுமை ஏற்படும். மனக்குழப்பங்கள் மாறி மாறி வரும். நிலையான முடிவை எடுக்கமுடியாமல் திணறுவீர்கள். ஆனாலும் நன்மைகள் குறையாது. வருமானம் தடையில்லாமல் வரும். லாபத்தில் பங்கு தர வேண்டியது வரும். திருமண முயற்சிகள் வெற்றி பெறும். வீடு மாற்றம் ஏற்படும். சொந்த வீடு வாங்கும் முயற்சியும் நடக்கும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் உண்டு.
உத்தியோகம் - வேலையில் சற்று அலட்சியம் ஏற்படும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனோபாவம் ஏற்படும். ஆடம்பரச் செலவுகள் உண்டு. அதன் காரணமாக பணத்தட்டுப்பாடு கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். அலுவலகத்திலேயே கடன் வாங்குவீர்கள். உங்களின் அலட்சியத்தின் காரணமாக ஒருசிலர் விளக்கக் கடிதம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பொதுவாக, சிறிய கடைகளில் பணிபுரிவோர் முதல் பெரிய அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் வரை அலட்சியத்தையும் சோம்பலையும் கைவிட்டால் பிரச்சினைகள் ஏதும் வராது.
தொழில் - முதலில் மனதில் இருக்கும் பயத்தை அகற்றுங்கள். எதையும் துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். உங்கள் பயத்தை வெளிக்காட்டினால் எதிரிகள் உங்களை எளிதாக வீழ்த்தி விடுவார்கள். எனவே எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். பிரச்சினைகள், வழக்குகள் ஏதும் இருந்தால் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். நீதிமன்றத்திலேயே நியாயம் கிடைக்கட்டும் என நினைத்தால் அதுவே பெரிய மன பாரமாகவும் பிரச்சினையாகவும் மாறும். தொழிலில் விட்டுக்கொடுத்துச் செல்வதும் மற்றவர்களோடு அனுசரித்துச் செல்வதும் நன்மை தரும்.
பெண்களுக்கு - மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். உங்களுக்கான கடன்கள் தீரும். அல்லது அதற்கான வழி வகைகள் கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகன்று ஒற்றுமை ஏற்படும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். வீடு கட்ட உங்கள் பெயரில் வங்கிக் கடன் எதிர்பார்த்திருந்தால் இப்பொழுது கிடைக்கும். வீட்டைக் கட்டிவிட்டு கடைசி கட்ட பணிகளுக்கு பணம் இல்லாமல் தவித்தவர்களுக்கு பண உதவி கிடைக்கும், அதுவும் சகோதர வழியில் கிடைக்கும்.
மாணவர்களுக்கு - கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவுவார்கள். தேர்வில் மதிப்பெண்கள் மன நிறைவைத் தரும்.
கலைஞர்களுக்கு - நல்ல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நண்பர்கள் பெருமளவில் உதவுவார்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வெளிநாடுகளிலிருந்து உதவிகள் கிடைக்கும். மாற்று இனத்தவர் உதவிகள் கிடைக்கும்.
பொதுப்பலன் - அலட்சியத்தையும், சோம்பலையும் கைவிட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் . ஒருசிலருக்கு கழுத்துவலி மற்றும் சுவாச பிரச்சினைஉண்டாகும். சரியான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
இந்த வாரம் செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு இந்த ஐந்து நாட்களும் நல்ல பலன்கள் நடக்கும். நினைத்தது நிறைவேறும். கவலைகள் தீர்க்கக் கூடிய அளவில் சாதகமான பலன்கள் நடக்கும். உங்கள் முயற்சிகளுக்கு இந்த நாட்களை பயன்படுத்துங்கள்.
திங்கள் மற்றும் புதன் இந்த இரண்டு நாட்களும் புதிய முயற்சிகள் செய்ய வேண்டாம். பயணங்கள் செல்ல வேண்டாம். பேச்சுவார்த்தைகள் நடத்தாதீர்கள். திருமணம் உள்ளிட்ட எந்த பேச்சுவார்த்தையும் செய்யவேண்டாம்.
வணங்கவேண்டிய தெய்வம் - ஸ்ரீதட்சிணாமூர்த்தி குரு பகவானுக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து நெய் தீபமேற்றி வழிபடுங்கள். தடைகள் அகலும். முயற்சிகள் வெற்றி பெறும். மன நிம்மதி கிடைக்கும்.
**********************************************************
ரோகிணி -
உங்களின் முக்கிய தேவைகள் அனைத்தும் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். குடும்பத்தில் சிறு சிறு சங்கடங்கள் வருத்தங்கள் உண்டாகும். ஆனால் அனைத்தையும் சமாளித்து குடும்பத்தினரை மகிழ்ச்சி படுத்துவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். முக்கிய நபரின் சந்திப்பும் அவரிடமிருந்து அன்புப் பரிசும் பெறுவீர்கள். பெரிய பட்ஜெட் போட்டு சாமர்த்தியமாக சிறிய அளவிலேயே முடிப்பீர்கள். கோபத்தையும் உணர்ச்சிவசப்படுவதையும் குறைத்துக் கொள்ளுங்கள். உணவில் கட்டுப்பாடு அவசியம். வீடு மாறுதல் உண்டாகும். நீண்ட நாட்களாக விற்க நினைத்த சொத்து இந்த வாரம் பேசி முடிப்பீர்கள். வங்கிக் கடனோ தனி நபரிடம் கடனோ இந்த வாரம் கிடைக்கும். வைராக்கியம் ஒன்றை சபதமாக எடுப்பீர்கள்.
உத்தியோகம் - பணியிடத்தில் பெரிய பிரச்சினைகளோ மாறுதல்களோ இல்லை. வழக்கமான செயல்பாடுகள் மட்டுமே இருக்கும். உடல் உழைப்பு தொழிலாளர்கள் கடின உழைப்பைக் காட்ட வேண்டி வரும். அலைச்சல் மிக்க ஊழியர்கள் வழக்கத்தை விட அதிக அலைச்சல் உண்டாகும். ஆனால் அலைச்சலுக்குண்டான ஆதாயம் கிடைக்கும்.
தொழில் - மந்தமாக இருந்து, விரக்தியைத் தந்து கொண்டிருந்த தொழில் இப்போது மெல்ல வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும். நம்பிக்கையை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக வராத தொகை கொஞ்சம் கொஞ்சமாக வசூலாகும். தொழிலுக்கான கடன் வாங்கும் முயற்சிகள் நம்பிக்கை தரும். சிறு வியாபாரிகள், உணவகம் நடத்துபவர்கள், சமையல் கான்ட்ராக்டர்கள் லாபகரமாக ஒப்பந்தம் போடுவார்கள். ஆபரணங்கள், கவரிங் கடை நடத்துபவர்கள், பெண்கள் அழகு சாதனப் பொருட்கள் விற்பவர்கள் நல்ல லாபம் பார்ப்பார்கள்.
பெண்களுக்கு - எந்த குறையும் இருக்காது. கையில் பணம் புழங்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுக்கள் நடக்கும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். சுய தொழில் தொடங்க திட்டமிடுவீர்கள்.
மாணவர்களுக்கு - கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. மொழிப் பாடங்கள் படிக்க ஆர்வம் ஏற்படும்.
கலைஞர்களுக்கு - திருப்தியான வாரம்,மனநிறைவு ஏற்படும். ஒப்பந்தம் ஒன்று இறுதியாகும். முன் பணம் பெறுவீர்கள்.
பொதுப் பலன் - சோதனைகள் இருந்தாலும் சாதனைகள் புரிவீர்கள். தாமதமாக கிடைத்தாலும் வெற்றி வெற்றிதான் .திருமண பேச்சுவார்த்தைகள் திருப்தி தரும். புத்திர பாக்கியம் உண்டாகும். வெளி நபர் உதவி கிடைக்கும். அயல் நாடு செல்லும் முயற்சி வெற்றி தரும்.
இந்த வாரம் திங்கள், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு, இந்த ஐந்து நாட்களும் நல்ல பலன் தரும். பணவரவு, பயணங்களால் லாபம், சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். செவ்வாய் மற்றும் வியாழன் சாதகமாக இல்லை.
வணங்க வேண்டிய தெய்வம் - சிவாலயத்தில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்யுங்கள். காரியம் வீரியமாகும். தடைகள் தவிடுபொடியாகும்.
******************************************************************************
மிருகசீரிடம் -
சோதனைகள் இருந்தாலும் விடாமல் முயற்சி செய்வீர்கள்.
எந்த ஒரு காரியமும் போராடித்தான் பெற வேண்டி வரும். யாரை நம்பினீர்களோ அவர் கைவிரிப்பார். முகமறியா நபரால் உதவி கிடைக்கும். வர வேண்டிய பணம் தாமதமாகும். எதிர்பார்த்த கடனும் தாமதமாகலாம். மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். விபரீத சிந்தனைகள் தோன்றும். யாரை நம்புவது என தெரியாமல் குழம்புவீர்கள். தாயாரின் உடல் நலம் கவலை தரும். வழக்குகள் கவலை உண்டாக்கும். இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் ஆபத்பாந்தவனாக ஒருவர் வந்து உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்.
உத்தியோகம் - சக ஊழியரே எதிராக இருப்பார். சிறிய தவறு கூட பூதாகரம் ஆக்கப்படும். வேலையை ராஜினாமா செய்யலாமா என்ற சிந்தனை வரும். அவசரப்பட வேண்டாம். ஒரே முறையில் முடிக்க வேண்டிய வேலை பல முறை இழுத்தடிக்கும். இடமாற்றம் ஏற்படும். இலக்கு வைத்து பணிபுரிபவர்கள் அதாவது விற்பனை பிரதிநிதிகள் இலக்கை எட்ட முடியாமல் திணறுவார்கள். உயரதிகாரியின் கேள்விக்கு ஆளாவார்கள். கட்டுமானத் தொழிலாளர்கள் , தச்சர், மின் பணி, பிளம்பர் போன்ற சேவை பணிபுரிவோர் வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் சங்கடத்திற்கு ஆளாவார்கள்.
தொழில் - போட்டி நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் திணறுவீர்கள். திடீர் ஏற்றமும் திடீர் இறக்கமும் மாறி மாறி வரும். ஏன் இப்படி என புரியாமல் திகைப்பு உண்டாகும். ஒரே ஆறுதல்.... எப்போதோ செய்த உதவி காரணமாக உதவி பெற்ற நபரால் கைதூக்கி விடப்படுவீர்கள். அகலக் கால் வைக்கும் எண்ணத்தை தள்ளி வையுங்கள். ஆனால் வியாபார நிறுவனம் நடத்துபவர்களுக்கு எந்த குறையும் வராது. லாபம் அதிகமாக இருக்கும். கமிஷன் தரகு தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் நல்ல வாய்ப்புகளும் லாபங்களும் அடைவார்கள்.
பெண்களுக்கு - அமைதி ஆனந்தம் தரும். தேவையற்ற சூழலில் பேசாமல் இருப்பதும், மற்றவர்களுக்குக் கருத்துக்களை தருவதும்,ஆலோசனை வழங்குவதும் நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லை எனில் அதுவே பிரச்சினையாகி விடும். பணியிடத்தில் அமைதியாக இருங்கள். உங்கள் வேலை எதுவோ அதில் கவனமாக இருங்கள். மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள். சகோதர உறவுகளிடம் தர்க்கம் செய்யாதீர்கள்.
மாணவர்களுக்கு - உயர் கல்வி கற்பவர்கள் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கலைஞர்களுக்கு _ அதிர்ஷ்ட வாய்ப்புகள் காத்திருக்கிறது. நண்பரின் பரிந்துரையில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து இடுவீர்கள்.
பொதுப் பலன் - வரவுக்கு தக்க செலவு செய்யுங்கள். இப்போது ஏதும் கடன் வாங்கினால் திரும்ப அடைக்க முடியாத சூழல் உருவாகும். மன அழுத்தம் உண்டாகும். ரத்த அழுத்தம் சீராக வைத்துக் கொள்ளுங்கள். முதுகு வலி, தண்டுவட பிரச்சினை வர வாய்ப்புள்ளது.
இந்த வாரம் பிரச்சினைகளிலிருந்து வெளிவரவும்,இலக்கை அடையவும் செவ்வாய் வியாழன் சனி ஞாயிறு இந்த நான்கு நாட்களை பயன்படுத்துங்கள் .முடியாத காரியமும் வெற்றியாகும்.
திங்கள், புதன், வெள்ளி இந்த மூன்று நாட்களும் சாதகமற்ற நாட்கள். எந்த நற்பலன்களும் நடப்பதில் சிரமம் உண்டாகும்.
வணங்க வேண்டிய தெய்வம் - துர்கை அம்மனுக்கு சந்தனக் காப்பு செய்து செவ்வரளி மலரால் அர்ச்சித்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். தடைகள் எல்லாம் தவிடுபொடியாகும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |