Published : 13 Sep 2019 10:57 AM
Last Updated : 13 Sep 2019 10:57 AM

புரட்டாசி மாத நட்சத்திரப் பலன்கள்:   அஸ்வினி முதல் மிருகசீரிடம் வரை (செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17ம் தேதி வரை) 

ஜோதிடர் ஜெயம் சரவணன்


அன்பார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்.


இந்த புரட்டாசி மாதம் (செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17 வரை) கிரகங்களின் நகர்வு மற்றும் கிரகங்கள் நின்ற நட்சத்திரங்கள் முதலானவற்றைக் கணக்கில் கொண்டு, இந்த நட்சத்திரப் பலனானது கணிக்கப்படுகிறது.


இந்தப் பலன்கள் ஒருசிலருக்கு சரிவர பொருந்தாமல் இருக்குமானால் அது ஜோதிடத்தின் தவறில்லை. ஜோதிடப் பலனின் குறையுமில்லை. உங்கள் சுய ஜாதகத்தில் இருக்கும் கிரக நிலைகள், நடப்பில் இருக்கின்ற திசாபுத்தி ஆகியவை கணக்கில் வரும்போதுதான் மிகத் துல்லியமாக பலன்கள் வெளிப்படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.


புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்திற்கான முக்கிய விசேஷங்களைப் பார்ப்போம்.


செப்டம்பர் -18 துலாம் ராசியில் சூரியன்,
செப்டம்பர் -25 - துலாம் ராசியில் புதன்,
செப்- 26- கன்னி ராசியில் செவ்வாய்,
அக்டோபர் -5 துலாம் ராசியில் சுக்கிரன்.


பண்டிகைகள் :
புரட்டாசி -19 (அக்டோபர் -6) துர்காஷ்டமி,

புரட்டாசி -20 (அக்டோபர் -7) சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை.

புரட்டாசி -21 (அக்டோபர் -8) விஜயதசமி

பௌர்ணமி - புரட்டாசி -26 (அக்டோபர்-13)
அமாவாசை- புரட்டாசி- 11 ( செப்டம்பர் -28)


இந்த அமாவாசையானது “மகாளய அமாவாசை” எனப்படும். இறந்து போன முன்னோர்களுக்கு தர்ப்பணம் தரவேண்டிய நாள். இது தந்தை இல்லாதவர்கள் மட்டுமே செய்யவேண்டிய காரியம். தந்தை இருப்பவர்களுக்கு இது பொருந்தாது.

தந்தை இறந்த திதி அறியாதவர்கள் அல்லது வருடாவருடம் தர்ப்பணம் தர மறந்தவர்கள் இந்த மகாளய அமாவாசையன்று தர்ப்பணம் தருவது மிக மிக முக்கியம். இது முன்னோர் சாந்தி என்பது மட்டுமல்லாமல் பித்ரு தோஷத்தையும் நீக்கி உங்கள் வாழ்வையும் வளமாக்கி நிம்மதியையும் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். .


இந்த புரட்டாசி மாதம் என்பது “உபய மாதம்” எனப்படும். எனவே, சுப காரியங்கள் செய்வது நடைமுறையில் இல்லை. மிக முக்கியமாக கிரகப்பிரவேசம், வீடு மாறுதல் முதலானவற்றைச் செய்யக்கூடாது. மேலும் இந்த மாதம் திருமணத்திற்கான சுப முகூர்த்தம் எதுவும் இல்லை.

இனி... புரட்டாசி மாதத்தின் நட்சத்திரப் பலன்கள்....

அஸ்வினி நட்சத்திரம்-
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வீட்டுக்கடன் இப்போது கிடைக்கும். வீடுவாங்குவதும், வீட்டைப் புதுப்பிக்கும் வேலையும் இப்போது நடக்கும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.


திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயம் ஆகும்.தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.


தொழில் சம்பந்தமான வங்கி உள்ளிட்ட வழக்குகள் இப்போது பைசல் ஆகும். வருமானவரி சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வெளிநாட்டுத் தொடர்புகள் நன்மை தரும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் நட்பும் நெருக்கமும் பல நன்மைகளைத் தரும்.


பெண்களுக்கு- அரசுப் பணி அல்லது தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது,


மனதுக்கு விரும்பிய மணவாழ்க்கை அமையும். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கும் மருத்துவத்தின் துணையோடு குழந்தை பெற விரும்பியவர்களுக்கும் இப்போது இயற்கையாகவே குழந்தை பாக்கியம் கிடைக்கும் சூழல் கனிந்துள்ளது.

மாணவர்களுக்கு- நினைவாற்றல் அதிகரிக்கும். தேர்வுகளில் வெற்றி, கூடுதல் மதிப்பெண்கள் பெறுவீர்கள். விரும்பிய கல்வி கிடைக்கும். மாணவர்களுக்கு மன நிறைவான மாதம் இது.

கலைஞர்களுக்கு- பொன்னான வாய்ப்புகள் வாயில் கதவை தட்டும். நீண்ட நாளாகக் காத்திருந்த வாய்ப்பு தேடி வரும். எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராதது கூட கிடைக்கும். திக்குமுக்காடிப்போவீர்கள்.

பொதுப்பலன்- ரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்கள் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்ளுங்கள், அதேபோல, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களும் கவனமாக இருக்கவேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம்- சிவனாருக்கு வில்வம் வைத்து வழிபடுங்கள். பிரதோஷ வழிபாடும் நன்மை தரும்.

சந்திராஷ்டம தினம்- புரட்டாசி -15 (அக்டோபர்-2)

************************************************


பரணி நட்சத்திரம்-


முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும் மாதம் இது.


காலம் நேரம் பார்க்காமல் உழைத்த உழைப்பிற்கு இப்போது அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் இருக்கும். உங்களின் கருத்துக்கு மதிப்பு கூடும். பாராட்டு மழையில் நனைவீர்கள்.


இடமாற்றம் விரும்பியபடி இருக்கும்.தொழில் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும். புதிய தொழில் தொடங்கும் முனைப்பு சரியான பாதையில் செல்லும். புதிதாக வியாபாரம் செய்ய முயற்சிப்பவர்களுக்கு தகுந்த இடம் அமையும்.


வங்கிக் கடன்,தொழில் கடன் இப்போது மிக எளிதாகக் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி கிடைக்கும்.


பெண்களுக்கு - குடும்பத்தில் நீங்கள் எதிர்பார்த்த சுப காரியங்கள் நடைபெறும். ஆபரணங்கள் பரிசாக கிடைக்கும். ஆச்சர்யப்படுத்தும். உத்தியோகத்தில் மதிப்பு மரியதை கூடும். ஊதிய உயர்வு உண்டு.

மாணவர்களுக்கு- கற்றுக்கொள்வதற்கான நல்லநல்ல வாய்ப்புகள் தேடிவரும். புதியதாக எதையாவது கற்றுக்கொள்ளும் ஆர்வம் உண்டாகும். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.

கலைஞர்களுக்கு- எல்லா வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள். நம்மால் முடியுமா என்ற பயத்தையும் குழப்பத்தையும் விடுங்கள். உங்களால் முடியும் என்ற நம்பிக்கையை உங்கள் மேல் நீங்கள் வையுங்கள். வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.

பொதுப்பலன்கள்- அதிர்ஷ்டம் மட்டுமல்ல வாய்ப்புகளும் ஒருமுறைதான் கதவைத் தட்டும் என்பதை மனதில் வையுங்கள். உஷ்ணம் சம்பந்தமான பிரச்சினைகள் வரும். கொப்புளம் கட்டி போன்றவை வருவதற்கான வாய்ப்பு உண்டு.


வணங்கவேண்டிய தெய்வம்- தினமும் சூரியோதயத்தில் சூரிய பகவானை வழிபடுங்கள். ஆதித்யஹிருதயம் படிப்பதும் கேட்பதும் நல்ல பலன்களைத் தரும்.

சந்திராஷ்டம தினம்- புரட்டாசி -16 (அக்டோபர் -3)

**********************************************


கார்த்திகை நட்சத்திரம்-


இந்த மாதம் முழுவதும் உற்சாகமாய் இருப்பீர்கள்.


கவலைகள் காணாமல் போகும். எடுத்த வேலைகள் அனைத்தையும் சுணக்கம் இல்லாமல் முடிப்பீர்கள். அரசாங்க ஆதரவு கிடைக்கும்.
வீடு வாங்கும் எண்ணம் இப்போது நிறைவேறும். நின்று போன வீட்டு வேலைகளை இப்போது முடிப்பீர்கள். வேலைக்குச் செல்வோருக்கு பதவி உயர்வு அல்லது இடமாற்றத்துடன் சம்பள உயர்வு கிடைக்கும்.


அயல் நாட்டில் வேலை இந்த மாதம் ( புரட்டாசி ) 15 தேதிக்குள் உறுதியாகும். படித்துக் கொண்டே வேலை தேடுவோருக்கும் வேலை கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நிதானமான வளர்ச்சி உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேறு தொழில் செய்வதற்கான சிந்தனை உருவாகும். அதை செயலாக்குகிற ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள்.


ஆன்மிகப் பயணம், நேர்த்திக்கடன் செலுத்துவது என இந்த மாதம் இறை சிந்தனையாகவே இருக்கும்.

பெண்களுக்கு- அடகு நகைகளை மீட்கும் வழி வகைகள் கிடைக்கும். திருமணம் உறுதியாகும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். எதிர்பார்த்த வேலை வாய்ப்பு இந்த மாதம் உறுதியாகும்.

மாணவர்களுக்கு- பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்களாக இருந்தால் அலட்சியம் வேண்டாம். உயர்கல்வி மாணவர்கள் அற்புதமான வாய்ப்புகளும், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களும் பெறுவீர்கள்.

கலைஞர்களுக்கு- வசதி வாய்ப்புகள். பணவரவு என எல்லாமே எதிர்பார்த்தது எதிர்பார்த்த மாதிரியே கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் தேடிவரும்.

பொதுப்பலன்- உணவு விஷயத்தில் கவனம் தேவை. ஒருசிலருக்கு டான்சில்ஸ், மூச்சிரைப்பு (வீசிங்) பிரச்சினை தலைதூக்கும். சளி மற்றும் இருமல் தொல்லை இருக்கும்.


வணங்க வேண்டிய தெய்வம்- விஷ்ணு துர்கை வழிபாடு ஆரோக்கிய பிரச்சினைகளில் இருந்து விடுபடச் செய்யும். மன நிம்மதியைப் பெறுவீர்கள். .


சந்திராஷ்டம தினம்- புரட்டாசி -17 (செப்டம்பர் -4)

****************************************


ரோகிணி நட்சத்திரம்-


இந்த மாதம் முயற்சிகளில் கடைசிவரை போராடி முடிவில் வெற்றியை ருசிப்பீர்கள்.


போராட்டம் இருந்தாலும் முடிவு வெற்றி என்பதால் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும், விடுமுறையில் சென்றவரின் வேலையையும் நீங்களே செய்யவேண்டிவரும்.


தொழிலில் வருமானம் அதிகரித்தாலும் திடீர் செலவுகள் திக்குமுக்காட வைக்கும். வீட்டின் மராமத்து செலவுகள் அதிகரிக்கும். திருமணம், குழந்தைப்பேறு என சுபச் செலவுகள் இருக்கும். திருமணம் நிச்சயம் ஆகும்,குடும்பத்தில் வீண் சண்டை சச்சரவுகள் அதிகமாகும்.

பெண்களுக்கு- செலவுகள் அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக அழகு சாதனப்பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். ஒருசிலருக்கு பணம், நகை காணாமல் போவது, மறதியில் தொலைப்பது என இருக்கும். எனவே எதிலும் கவனம் தேவை.

மாணவர்களுக்கு- ஆடம்பரங்கள், கேளிக்கைகளைக் கைவிடுவது கல்வியில் முன்னேற்றம் தரும்.

கலைஞர்களுக்கு- அதிர்ஷ்டம் உங்கள் வாசலில் காத்துக் கொண்டிருக்கிறது அதை அரவணைத்து உங்கள் இல்லத்திற்குள் அழைத்துச்செல்லுங்கள். எல்லா வாய்ப்புகளும் உங்களுக்கு லாபகரமாகவே அமையும்.

பொதுப்பலன்- ஆண்களே... பெண்களிடம் பேசும்போதும் பழகும்போதும் எச்சரிக்கை உணர்வுடன் இருங்கள். இல்லையென்றால் அவமானம் ஏற்படும்.


பெண்களே ஆண்களின் வார்த்தைகளில் நம்பி ஏமாந்துவிடாதீர்கள். கவனம் தேவை. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். சிலருக்கு அடிவயிற்றில் பிரச்சினை வரும். பெண்கள் கர்ப்பப்பை பிரச்சினை, மாதவிடாய் பிரச்சினை முதலானவை சற்று அதிகமாக இருக்கும். தக்க மருத்துவ ஆலோசனை பெற்று கடைபிடியுங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்- திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் ஜீவ சமாதி திருக்கோயிலுக்குச் சென்று அங்கே ஒரு பத்துநிமிடம் கண்மூடி தியானம் செய்யுங்கள். அவர் இயற்றிய சண்முக கவசம் படியுங்கள். எல்லா காரியங்களும் வீரியமாகும். வெற்றி நிச்சயம்.

சந்திராஷ்டம தினம்- புரட்டாசி-18 (செப்டம்பர் -5)

*************************************************


மிருகசீரிடம் நட்சத்திரம்-


எதிலும் கவனமாக இருக்கவேண்டிய மாதம் இது.


எல்லா திட்டங்களும் வரையறுத்து எல்லாம் சுமூகமாக போய்கொண்டிருக்கிறதே என்று மனம் மகிழும் நேரத்தில் ஏமாற்றம் தந்து வெறுப்பின் உச்சம் வாட்டி எடுக்கும். மனம் தளராமல் போராடினால் வெற்றியின் அருகில் செல்லலாம்.


உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள். சொந்தத் தொழில் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் கவனமாகவும் எச்சரிக்கையோடும் இருக்கவேண்டும். யாரையும் எதற்காகவும் நம்பவேண்டாம். காசோலைகளை கொடுக்கும் போது சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கையாளுங்கள்.


பூர்வீகச் சொத்து விஷயத்தில் அவசரம் காட்டாதீர்கள். அயல்நாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். அதேசமயம் சரியான அனுபவம் வாய்ந்த ஏஜெண்டுகளை மட்டுமே நம்புங்கள்.

பெண்களுக்கு- மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். வெளிநபர்களை நம்பவேண்டாம். போலியான நிறுவனங்களிலிருந்து வரும் வேலை வாய்ப்பை ஏற்க வேண்டாம். பணம் நகைகளை கையாளும்போது கவனம் தேவை. .

மாணவர்களுக்கு- தேர்வில் தோல்வி இல்லை. அதேசமயம் மதிப்பெண் எதிர்பார்த்தது போல் கிடைக்காது. கவனத்தை அதிகப்படுத்தி, ஆழ்ந்து படித்தால்தான் பெரிய வெற்றி கிடைக்கும்.

கலைஞர்களுக்கு- பொன்னான வாய்ப்புகளும் எதிர்பாராத நபரிடமிருந்தும் அருமையான வாய்ப்புகள் தேடிவரும். இசைக்கலைஞராக இருப்பவர்களுக்கு பலவித ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பொதுப்பலன்- ஏமாற்றங்கள் அனைவருக்கும் பொதுவானதுதான். அதற்காக மனம் தளராதீர்கள். மன உளைச்சல் வாட்டி வதைக்கும். தெய்வ நம்பிக்கையும் தியானமும் மனம் ஒருநிலைபெற வைக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம்- கும்பகோணம் அருகில் கதிராமங்கலம் வனதுர்கை ஆலயம் சென்று வாருங்கள். வெற்றிகள் உங்களைத் தேடிவரும். செல்ல முடியாதவர்கள் அருகில் உள்ள ஆலயத்தில் இருக்கும் துர்கையம்மனை வணங்குங்கள். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகுகாலத்தில் வணங்குவது கூடுதல் பலம் தரும்.

சந்திராஷ்டம தினம் - புரட்டாசி- 19 (செப்டம்பர் -6)

*********************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x