Published : 30 Aug 2019 11:50 AM
Last Updated : 30 Aug 2019 11:50 AM

செப்டம்பர் மாத ராசிபலன்கள் - துலாம் முதல் மீனம் வரை

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)


சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே.


இந்த மாதம் எதிலும் மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. திடீர் உடல்நல பாதிப்பு உண்டாகலாம். மனம் நிலை கொள்ளாமல் தவிக்கும் நிலை வரலாம். பணவரத்து இருக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும்.

தாமதமான போக்கு காணப்பட்டாலும் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கலாம். வெளியூர் பயணங்கள் மனதுக்கு சந்தோஷத்தைத் தருவதாக இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்து குறைவு இருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாகப் பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும். சாதுர்யமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.


குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கைத் துணையின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டி இருக்கும். மற்றவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை விட்டுவிட்டு இதமாகப் பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.


பெண்களுக்கு கவுரவம் மற்றும் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரியத் தாமதம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.


அரசியலில் உள்ளவர்களுக்கு மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொண்டர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.


கலைத்துறையினருக்கு மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். கலைத்துறையினருக்கு தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.


மாணவர்களுக்கு கவனமாக படிப்பது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும். கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது வெற்றிக்கு உதவும்.


பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சினை தீரும். பணவரவு அதிகரிக்கும்.


சந்திராஷ்டம தினங்கள்: 20, 21,
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 29, 30

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)


செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே.


இந்த மாதம் மனோதைரியம் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளைப் பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.
எப்போதும் பரபரப்பாக காணப்படுவீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். காரியத் தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாகப் பழகுவது அவசியம்.


தொழில் வியாபாரம் முன்னேற்றமடையும். போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். கடன் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்துத் தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். அலைச்சல் அதிகரிக்கும். கூடுதல் பணிச்சுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரலாம்.


குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலைத் தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.


பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகள் பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம்.


கலைத்துறையினர் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். பண வரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும்.


அரசியலில் உள்ளவர்களுக்கு சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். திறமை வெளிப்படும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். கவனத்தை சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.


பரிகாரம்: முருகனுக்கு பரிகார பூஜை செய்வதும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களைப் போக்கி மனதில் நிம்மதியைத் தரும்.


சந்திராஷ்டம தினங்கள்: 22, 23,
அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)


தேவகுரு குருபகவானை ராசிநாதனாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே.


இந்த மாதம் எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சினைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லாவசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.


எங்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்கள் நீங்கள். நன்மைக்காக போராடத் தயங்காதவர். அவை இந்த மாதமும் தொடரும். மனக்கலக்கம் உண்டாகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரத்து, எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை.
தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும்.


உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.


குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். அன்பு அதிகரிக்கும். மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சு சாதுர்யத்தாலும் இனிமையான பேச்சாலும் எளிதில் காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.


பெண்களுக்கு எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும்.


கலைத்துறையினர் கோபத்தைக் குறைத்து நிதானமாகப் பேசுவது பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது.


அரசியலில் உள்ளவர்களுக்கு வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தொண்டர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது நன்மை தரும். எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும். உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.


மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும். கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும்.


பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்குங்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.


சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6, 7

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)


சனிபகவானை ராசிநாதனாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே.


இந்த மாதம் மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். ஆனால் மற்றவர்களிடம் பழகும்போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம், அந்தஸ்து அதிகரிக்கும். மற்றவர்களின் நலனுக்காக தன் நலனை பாராமல் உழைப்பீர்கள்.


எதிர்பார்த்த படி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். எனினும் நன்மை உண்டாகும். பணவரத்து இருக்கும். வாகன யோகம் உண்டு. பெரியோர்களின் உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ பயமோ ஏற்படாது.


தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும்.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் கொடுத்த வேலைகளைக் கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.


குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சினைகள் சாதகமாக முடியும். கணவன் மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும். எவரிடம் பேசும்போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும்.


பெண்கள் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.


கலைத்துறையினருக்கு செலவுகள் ஏற்படும். பயண சுகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பது தாமதப்படும். வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கவனம் தேவை. கிடைக்கும் வாய்ப்புகளுக்காக அயராது உழைத்தால் வெற்றி நிச்சயம்.


அரசியலில் உள்ளவர்களுக்கு தேவையான பணஉதவி கிடைக்கலாம். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். மேலிடத்தில் வரும் உத்தரவுகளை தாமதிக்காமல் செய்து முடிப்பது உங்களுக்கு நன்மை தரும்.
மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.


பரிகாரம்: விநாயகப் பெருமானை தீபம் ஏற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்கியம் கூடும்.


சந்திராஷ்டம தினங்கள்: 26, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9,

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)


ஆயுள்காரகன் சனி பகவானை ராசிநாதனாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே.


இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். அதேநேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். துணிச்சல் உண்டாகும். அதனால் எதைப் பற்றியும் முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். தன்னைத்தானே உயர்த்திக் கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடுவீர்கள். மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.


தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் இருந்த மெத்தனப் போக்கு மாறும்.

வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.


குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள்.


பெண்கள் துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.


கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை குறையும். வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். நீங்கள் திட்டமிட்டபடி உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.


அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.


மாணவர்கள் மிகவும் கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. கல்வியைப் பற்றிய கவலை நீங்கும். திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.


பரிகாரம்: முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும்.


சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11,

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)


குரு பகவானை ராசிநாதனாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே.


இந்த மாதம் வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளலாம். கவனமாக இருப்பது நல்லது. திடீர் கோபம் ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகளும் உண்டாகும். ஆன்மிக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடைகளை சந்திப்பீர்கள். கவனம் தேவை. வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம்.


தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்யாவிட்டால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம்.

லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.


குடும்பத்தில் இருப்பவர்களுடன் சின்னச்சின்ன சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பின் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் பேசும்போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும்.


பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது. நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை.


கலைத்துறையினருக்கு வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். உங்களுக்கு இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.


அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். எதிர்பார்த்த இடங்களில் வெற்றியை அடைய முடியும். எடுத்தகாரியத்தை எளிதில் முடிக்கக் கூடிய சந்தர்ப்பம் வாய்க்கும்.


மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.


பரிகாரம்: தினமும் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வலம் வருவது வளமான வாழ்க்கையைத் தரும்.


சந்திராஷ்டம தினங்கள்: 3, 4
அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13, 14

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x