ஆவணி மாத நட்சத்திரப் பலன்கள்  - (செப்டம்பர் 18ம் தேதி வரை)  திருவோணம் முதல் ரேவதி நட்சத்திரம் வரை

ஆவணி மாத நட்சத்திரப் பலன்கள்  - (செப்டம்பர் 18ம் தேதி வரை)  திருவோணம் முதல் ரேவதி நட்சத்திரம் வரை
Updated on
6 min read

ஜோதிடர் ஜெயம் சரவணன்

திருவோணம் நட்சத்திரம்


வாய்ப்புகளும் தனவரவும் திருப்தியாக இருக்கும் மாதம் இது.


வேலையில் எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் சுமூகமாக இருக்கும். உயர்அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படும்.


வங்கிப்பணியில் இருப்பவர்களுக்கு மன அழுத்தங்கள் குறையும். சுயதொழில் செய்பவர்கள், கட்டுமானத் தொழில் செய்பவர்கள், வியாபாரிகள் அனைவரும் கடந்த சில மாதங்களாக இருந்த பலவிதமான பிரச்சினைகளிலிருந்து வெளிவருவார்கள்.


மனதை வருத்திய வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். பூர்வீகச் சொத்து பிரச்சினைகளை நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்ப்பீர்கள். அயல்நாட்டில் கல்வி பயில விரும்பியவர்களுக்கு இப்போது அந்த வாய்ப்பும், அரசு உதவித்தொகையும்( ஸ்காலர்ஷிப்) கிடைக்கும். ஒருசிலருக்கு பகுதி நேர வேலை வாய்ப்பு கிடைக்கும்.


பெண்களுக்கு - மனதில் அமைதி நிலவும். எதிர்பாராத பதவிஉயர்வு, குடும்பத்தோடு சுற்றுலா செல்வது, குலதெய்வக் கோயிலுக்குச் செல்வது என இந்த மாதம் நல்ல சம்பவங்களும் நற்பலன்களும் தரக்கூடியதாகவே உள்ளது.
மாணவர்களுக்கு - நல்ல முன்னேற்றம் ஏற்படும் மாதம் இது.கல்வி உதவித்தொகை கிடைக்கும். உயர்கல்விக்காக அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.


கலைஞர்களுக்கு - திரைத்துறையினருக்கு ஏமாற்றங்களைக் கடந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஊடகத்துறையினர் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தினால் புகழ் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.


பொதுப் பலன் : முதுகுத் தண்டுவடம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஒருசிலருக்கு வரும். சொரியாஸிஸ், வெரிகோஸிஸ் என்னும் நரம்புச் சுருட்டு நோய் பிரச்சினை வரவும் வாய்ப்பு உள்ளது.


வணங்க வேண்டிய தெய்வம் - தேனி குச்சனூர் சுயம்பு சனி பகவானை வணங்கி வாருங்கள். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரரையும் சுற்றி, வணங்கி வாருங்கள். காகத்துக்கு உணவிடுங்கள். முன்னோரை நினைத்து உணவுப் பொட்டலம் வழங்குங்கள். உங்களிடம் இருந்த தீய சக்தி விலகி ஓடும். நல்ல அதிர்வுகள் மூலம், நல்லன எல்லாம் நடந்தேறும்.


சந்திராஷ்டம தினம்- ஆவணி 14 (ஆகஸ்ட் 31)

*********************************************


அவிட்டம் நட்சத்திரம்


நீங்கள் வாழ்வில் உயரும் மாதம் இது.


அரசு வேலைதான் வேண்டும் என அடமாக இருப்பவர்களுக்கு இந்த மாதம் அந்த வாய்ப்பு உண்டு, அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சி பதவி, அரசு பதவி கிடைக்கும். மருத்துவராக இருப்பவர்களுக்கு ஓய்வு இல்லாமல் உழைக்க வேண்டி வரும். மருத்துவத்துறை சார்ந்தவர்களும் இந்த மாதம் நிறைய நன்மைகளை அடைவார்கள்.


பொருளாதர வளர்ச்சி உட்பட. வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு எதிர்பாராமல் கிடைக்கும். காவல்துறையினருக்கும் பதவி உயர்வு கிடைக்கும். தனியார் பாதுகாப்பு மையம் நடத்துபவர்கள், துப்பறியும் நிறுவனங்கள் நடத்துபவர்கல் முதலானோருக்கு இந்த மாதம் நிறைய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.


சொந்தத் தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், உற்பத்தித் தொழில் செய்பவர்கள், சமையல்துறையினருக்கு இந்த பலவிதமான கான்டிராக்டுகள் கிடைத்து மனமகிழ்ச்சியை உண்டுபண்ணும்.


பெண்களுக்கு - வேலையில் பதவி உயர்வும், சொந்தவீடு வாங்கும் கனவும், ஆபரணங்கள் வாங்கும் எண்ணமும் ஈடேறும்.


மாணவர்களுக்கு - மருத்துவக் கல்வியில் சேர வாய்ப்பு கிடைக்கும். ரசாயன, பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட கல்வியில் சேரவும் வாய்ப்பு உண்டு. ஒருசிலர் புதைபொருள் ஆராய்ச்சி படிப்பில் விரும்பிச் சேருவார்கள்.தூதரகம் சம்பந்தபட்ட கல்வி வாய்ப்பும் உண்டு.


கலைஞர்களுக்கு - புதுப்புது ஒப்பந்தங்கள் ஏற்படும். அரசு சார்பில் நல்லெண்ண தூதர் வாய்ப்பும் கிடைக்கும்.


பொதுப் பலன் : உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வரலாம். பலவீனபடுத்தும் காய்ச்சல் முதலான உடல் உபாதைகள் வரவும் வாய்ப்பு உண்டு.


வணங்க வேண்டிய தெய்வம் - திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்யுங்கள். வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்களை ஏற்படுத்தித் தருவான் கந்தவேலன்.


சந்திராஷ்டம தினம்- ஆவணி 15 (செப்டம்பர் 1)

*****************************

சதயம் நட்சத்திரம்


உங்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கிற மாதம் இது.


பதவி மாற்றத்தையும் செய்து இடமாற்றமும் செய்துவிட்டார்களே என கவலையில் இருந்தீர்கள்தானே... இந்தப் பதவியும் இடமாற்றமும் உங்கள் திறமையை வெளிப்படுவதற்குத்தான் என்பதை நிரூபித்து காட்டும் தருணம் இது.


இழந்த பதவியைத் திரும்பப் பெறுவீர்கள் அல்லது இதைவிட சிறந்த நிறுவனத்தில் வேலை கிடைத்து நல்ல பதவியில் சேர வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உள்ள எதிரிகள் காணாமல் போவார்கள் அல்லது உங்களிடம் சரணாகதி்அடைவார்கள்.


தொழிலில் இருந்த மந்தநிலை மாறி, திடீர் சுறுசுறுப்பு, வேகம் என மளமளவென உயருவீர்கள். நின்று போன பாக்கிகள் எல்லாம் உங்களின்அதிரடி நடவடிக்கையால் வசூலாகும். புதிய தொழில் தொடங்கும் பேச்சுவார்த்தைகள் அதற்கான செயல்வடிவம் முதலானவை இந்த மாதம் நடக்கும்.அரசு உதவியோடு ஏற்றுமதி இறக்குமதி தொழில் இன்னும் சிறப்பாகும். சுரங்கத்தொழில் செய்பவர்கள் அல்லது அதில் பணியாற்றபவர்களுக்கு நல்ல லாபம் லாபத்தில் பங்கு கிடைக்கும்,


கூட்டுத்தொழில் செய்பவர்கள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். ஹார்டுவேர்ஸ் கடை மின்சாதன பொருட்கள் கடை, கட்டுமான பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் மேலும் ஒரு கிளை அல்லது புதிய வியாபாரத்தில் ஈடுபடுதல் நடந்தேறும். தரகுத்தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும், காய்கறி வியாபாரிகள் நல்ல லாபம் பார்ப்பார்கள்.


பெண்களுக்கு - நீங்கள் நினைத்தது எல்லாம் நிறைவேறும் மாதம். உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும் வேளை வந்துவிட்டது. அதில் முழுகவனம் செலுத்தி மனநிறைவு காண்பீர்கள்.


மாணவர்களுக்கு - எந்தத் தடையும் இல்லை. நல்ல வாய்ப்புகளும் நல்ல வழிகாட்டல்களும் கிடைக்கும். நண்பர்கள் உதவியோடு கல்வியில் சாதிப்பீர்கள்.


கலைஞர்களுக்கு - ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் “சிறப்பு.”


பொது பலன் : உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சினை,ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற பிரச்சினைகள் வரலாம்.


வணங்க வேண்டிய தெய்வம் - திருச்சி திருவானைக்கா ஜம்புகேஸ்வரரை வணங்குங்கள். அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று, வில்வம் சார்த்தி வழிபடுங்கள். இன்னும் பலத்துடனும் உரத்துடனும் திகழ்வீர்கள். காரியம் வீரியமாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.


சந்திராஷ்டம தினம்- ஆவணி 16 ( செப்டம்பர் -2)

*********************************************

பூரட்டாதி நட்சத்திரம்


பயம் விலகி நிம்மதி பிறக்கும் மாதம் இது.


மாதத்தின் முதல் பத்து நாட்கள் நல்ல பலன்களும் அடுத்த இருபது நாட்கள் மனக் கவலையும் மாறி மாறி அனுபவிப்பீர்கள். பதவி, பட்டங்கள் தேடிவரும். உத்தியோத்தில் எந்த பிரச்சினையும் வராது. மனதில் தேவையற்ற பயம் இருக்கும்.


நோய் பற்றிய கவலை இருக்கும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றி நினைத்து அதிகம் கவலைப்படுவீர்கள். குலதெய்வக் கோயிலுக்கு சென்றுவருவீர்கள். அல்லது குலதெய்வம் தெரியாதவர்கள் எது என் குலதெய்வம் என அறிய முயற்சிப்பீர்கள். நல்ல வழிகாட்டுதல் மூலமாக குலதெய்வம் எது என அறிந்து கொள்வீர்கள்.


சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழில் சீராக இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இப்போது குடியுரிமை கிடைக்கும். மருத்துவப் பணியில் இருப்பவருக்கு மேலும் ஒரு மருத்துவமனையில் பகுதிநேர சேவை செய்ய வாய்ப்பு உண்டாகும். தச்சுத்தொழில், அச்சகத்தொழில், மரக்கடைத்தொழில் செய்பவர்கள் பல மடங்கு லாபம் ஈட்டுவார்கள்.


பெண்களுக்கு - தேவையற்ற மனக்குழப்பத்தை விடுங்கள். கவலைப்படுவதால் ஒன்றும் ஆகாது என்பதை உணருங்கள். செயல்படுவது மட்டுமே நல்லது நடக்க வைக்கும் என்பதை உணருங்கள்.


மாணவர்களுக்கு - அதிக சிரத்தை எடுத்தால் இன்னும் சிறப்பைப் பெறலாம் என்பதை உணர்ந்துகொள்வீர்கள். முடியுமா என திகைக்காமல் முடியும் என்று திடமாக நம்புங்கள், வெற்றி நிச்சயம்.


கலைஞர்களுக்கு - நண்பர்கள், பழகியவர்கள் என எல்லோரின் ஆதரவும் கிடைக்கும். மனஉறுதி இன்னும் பலப்படும் நேரமிது.
பொதுப் பலன் : ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறித்து சோதித்துக்கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறையும் வாய்ப்புள்ளது.


வணங்க வேண்டிய தெய்வம் - சிதம்பரம் சென்று தில்லைக்காளியை ஒருமுறை தரிசனம் செய்யுங்கள். மன இறுக்கம் நீங்கும். அருகில் உள்ள காளியம்மன் முதலான அம்மன் கோயிலுக்குச் சென்று வணங்குங்கள். செயலில் வேகம் கூடும். காரியத்தில் தெளிவு பிறக்கும்.


சந்திராஷ்டம தினம்- ஆவணி -17 (செப்டம்பர்-3)

***************************************

உத்திரட்டாதி நட்சத்திரம்


எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என்று வெற்றிகள் குவியும் மாதம் இது.


கற்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பது போல நீங்கள் ஈடுபடுகின்ற செயல் யாவும் வெற்றி உண்டாகும். உத்தியோத்தில் எதிர்பாராத பதவி உயர்வும் கூடுதல் பொறுப்பும் கிடைக்கும்.


சொந்தத் தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். லாபம் பல மடங்கு வரும். புதிய தொழில் தொடங்குதல், கிளை நிறுவனங்கள் ஆரம்பித்தல் என இந்த மாதம் பரபரப்பாக இருப்பீர்கள். உணவகத்தொழில் (ஹோட்டல்) செய்பவர்கள், கேட்டரிங் எனும் சமையல் கான்ட்ராக்டர்ளுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக இருக்கும்.


வங்கியில் கடன் மிக எளிதாகக் கிடைக்கும். திருமணம் தாமதமானவர்களுக்கு இந்த மாதம் திருமணம் உறுதியாகும். புத்திரபாக்யம் தாமதமானவர்களுக்கும் இரண்டாவது குழந்தை எதிர்பார்ப்பவர்களுக்கும் இந்த மாதம் நல்ல தகவல் உறுதியாகும்.விவாகரத்து வழக்கு போட்டவர்கள் இப்போது சமாதானம் அடைந்து சேர்ந்து வாழவும் வழிவகைகள் உண்டாகும்.


பெண்களுக்கு - மனமகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. உத்தியோகத்தில் இடமாற்றம் அதாவது வேறு நிறுவனங்களுக்கு மாறுவது நிகழும். வெளிநாட்டில் இருக்கும் கணவரோடு சேர்ந்து வாழவும் வழிபிறக்கும்.


மாணவர்களுக்கு - கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சிக் கல்வியில் இருப்பவர்கள் இப்போது ஆராய்ச்சிகளை முடித்து பட்டம் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.


கலைஞர்களுக்கு - அற்புதமான நேரம் இது. சரியாக பயன்படுத்தினால் மிகப்பெரிய வெற்றி நிச்சயம். பலவித வாய்ப்புகள் தானாகவே வரும். எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். பரிசுகள் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.


பொது பலன் : நீண்டகால நோய்க்கு மாற்று மருத்துவர் அல்லது மாற்று மருத்துவ முறையினால் நோய் நீங்கும். கவலைப்படும் அளவுக்கு இருந்த நோய் பயம் ஒன்றும் இல்லாமல் போய் மன நிம்மதி தரும்.


வணங்க வேண்டிய தெய்வம் - மதுரை மீனாட்சி அம்மனை வணங்கி வாருங்கள். ஒருமுறை தரிசனம் செய்யுங்கள். அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். காரியத் தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும்.


சந்திராஷ்டம தினம் - ஆவணி 18 (செப்டம்பர் 4)

********************************

ரேவதி நட்சத்திரம்


நிம்மதியும் சந்தோஷமும் தேடி வரும் மாதம் இது.


நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம், இந்த மாதம் நல்ல முடிவை எட்டும். கடன் சுமை குறையும். ஒரு கடனை அடைத்து புதியதாக வேறொரு கடன் வாங்குவீர்கள். அதுவும் நல்ல விஷயத்துக்கே பயன்படும்.


உத்தியோகத்தில் நல்லதே நடக்கும். அயல்நாடு செல்லும் முயற்சி வெற்றியடையும். பாதியில் நின்ற வீடு கட்டும் வேலை இப்போது நிறைவடையும். இருக்கும் வீட்டைவிட வசதியான வீடு வாங்கி குடியேறுவீர்கள்.


தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் நடத்தும் இடத்தை விரிவுபடுத்துவீர்கள், வெளிநாட்டுத் தொடர்பால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். திருமண ஏற்பாடுகள் தீவிரமாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.


முதல் திருமணத்தை இழந்தவர்களுக்கு இப்போது இரண்டாவது திருமணம் நடக்கும். பத்திரம் எழுதுபவர்கள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள், புத்தகப் பதிப்பாளர்கள் கதை எழுதுபவர்கள் ஆகியோருக்கு பொன்னான நேரம் இது. சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


பூர்வீகச் சொத்து பிரச்சினை இப்போது முடிவுக்கு வரும். நீண்டகாலமாக விற்க முடியாத சொத்து இப்போது விற்பனையாகி உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.


பெண்களுக்கு - சிறப்பான மாதம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நல்ல வேலை கிடைக்கும், வங்கிப்பணி கிடைக்கவும் வாய்ப்புள்ளது.


மாணவர்களுக்கு - அனைத்திலும் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள். படிப்பில் அதிக நாட்டம் உண்டாகும். மதிப்பெண்களும், உயர்கல்வி வாய்ப்பும் கிடைக்கும்.


கலைஞர்களுக்கு - அருமையான நேரம் இது. எந்த வாய்ப்பையும் நிராகரிக்காதீர்கள். நீங்கள் பிரகாசிக்கின்ற நேரம் இது என்பதால், ஓய்வில்லாமல் உழைத்தால் வெற்றி நிச்சயம்.


பொதுப் பலன் : வயிற்றில் வலி, முதுகுத் தண்டுவட வலி, பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சினை என வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.


வணங்க வேண்டிய தெய்வம் - திருத்தணியில் உறைந்திருக்கும் தணிகைவேலனை தரிசனம் செய்யுங்கள். கூடுதல் நன்மைகள் ஏற்படும். அருகில் உள்ள செவ்வாய், வெள்ளிகளில் சென்று தரிசியுங்கள்.


சந்திராஷ்டம தினம்- ஆவணி 19 (செப்டம்பர் -5)

***************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in