

ஜோதிடர் ஜெயம் சரவணன்
பூரம் நட்சத்திரம்
சிறப்பான மாதம் இது.
வீடு வாங்கும் யோகம் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடந்தேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகச்சூழல் நிம்மதியாகவே இருக்கும். ஒருசிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்,
வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
கமிஷன் (தரகு) தொழிலில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டவாய்ப்புகள் கிடைக்கும்.விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகளும் சாதனைகளும் உண்டாகும். அரசு வழி ஆதரவு, அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
பெண்களுக்கு - சகோதர ஆதரவு பெருகும். ஒருசிலருக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு கிடைக்கும். அதில் மன நிறைவும் பொருளாதார நிறைவும் பெறுவீர்கள். கர்ப்பப்பை பிரச்சினை வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. அறுவை சிகிச்சை தேவைப்படும். ஆனால் பயம் தேவையில்லை.
மாணவர்களுக்கு- அருமையான மாதம் இது. அறிவுத்திறன் வெளிப்படும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். தற்காப்புக் கலை கற்கவும், உடற்பயிற்சி செய்வதில் ஆர்வமும் உண்டாகும்.
கலைஞர்களுக்கு - அரசின் முழு ஆதரவு கிடைக்கும். விருதுகள் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. . அரசு நிதி உதவி கிடைக்கும். திரைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
பொது பலன்கள் : சிறுநீரகக் கல் போன்ற அடிவயிற்றுப் பிரச்சினைகள் வருவதற்கும், நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் அறிகுறி வருவதற்கும் வாய்ப்பு உண்டு.
வணங்க வேண்டிய தெய்வம்- திருவரங்கம் ரங்கநாதரை ஒரு வெள்ளிக்கிழமையன்று தரிசனம் செய்யுங்கள். நோய் பிரச்சினை வராமல் காப்பார்.
சந்திராஷ்டம தினம்-ஆவணி -29 (செப்டம்பர் 15)
****************************************
உத்திரம் நட்சத்திரம்
இந்த ஆவணி மாதம் மன நிறைவும் சுப செலவுகளும் அலைச்சலும் கலந்த மாதம்.
வெளியூர் பயணங்கள் அதிகமிருக்கும். அந்த பயணங்களால் ஆதாயம் இருக்கும். அதேசமயம் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளும் ஏற்படும். எனவே மருத்துவச் செலவுகளும் உண்டு. தேவைக்கு ஏற்ற வருமானமும் உண்டு.
வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் அல்லது துறை மாற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வளர்ச்சியும் உண்டு தளர்ச்சியும் உண்டு. நீண்ட நாள் வசூலாகாத பணம் திடீரென வசூலாகும்.
விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான மாதம் இது. ஏதாவது ஒரு பதக்கம் வெல்லும் வாய்ப்பு உண்டு, தரகுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் நன்றாக இருக்கும். கட்டுமானத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சியும் மனநிறைவும் உண்டாகும். தகவல் தொழில்நுட்பத் துறையினர் இப்போது வேறு ஏதாவது நிறுவனத்திற்கு மாற நினைத்தால் இந்த மாதமே அதற்கான முயற்சியில் இறங்கலாம்.
பெண்களுக்கு - ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவை சாப்பிடுங்கள். வெளி உணவை (ஹோட்டல் உணவு) தவிர்த்துவிடுங்கள். சேமிப்புகள் கரையும் நேரம் இது. எனவே எதையும் திட்டமிட்டு செலவு செய்யுங்கள்.
மாணவர்களுக்கு - கடமைக்கே என படிக்காதீர்கள். ஆழ்ந்து உணர்வு பூர்வமாக படியுங்கள், அலட்சியமாக இருக்காதீர்கள். புற ஆசைகளை தவிருங்கள், ( டிவி, இண்டர்நெட்) கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கலைஞர்களுக்கு - இந்த ஆவணி மாதம் முடியும் வரை பொறுமையாகக் காத்திருங்கள். வளமான எதிர்காலம் காத்திருக்கிறது.
பொது பலன் : மருத்துவச் செலவுகள் சற்று அதிகம் இருக்கும். மருத்துவச் செலவைக் குறைக்க வேண்டுமானால் இல்லத்தில் மராமத்துப் பணிகள் செய்யுங்கள். மொத்தத்தில் விரயம் உண்டு. அதை நல்ல விரயமாக மாற்றிக் கொள்வது உங்கள் கையில்தான் இருக்கிறது.
வணங்க வேண்டிய தெய்வம்- மகா பிரத்தியங்கரா தேவியை வணங்குங்கள் எந்தக் கவலையும் தீய சக்தியும் உங்களை நெருங்கவே நெருங்காது. .
சந்திராஷ்டம தினம்- ஆவணி 30 (செப்டம்பர் 16)
*******************************************************
அஸ்தம் நட்சத்திரம்
எல்லா வகையிலும் நன்மை தரும் மாதம் இது.
இந்த மாதம் நீங்கள் எதைச் செய்தாலும் மற்றவர்களுக்கு அனுகூலமும் உங்களுக்கு “நன்றி” என்கிற வார்த்தை அலங்காரமும் கிடைக்கும்.
அதாவது பலனை எதிர்பார்த்து செய்கின்ற செயலால் எந்த லாபமும் இருக்காது. அதேசமயம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அதாவது பதவி உயர்வு, விரும்பிய இடத்திற்கு இடமாற்றம், பதவி உயர்வோடு கூடிய வெளிநாட்டிற்கு இடமாற்றம் என அனைத்தும் நன்மையாகவே இருக்கும்.
தொழிலில் நல்ல வளர்ச்சி, புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பது, ஏற்றுமதி தொழிலில் புதிய நிறுவனங்களோடு இணை சேருவது என அனைத்தும் சுபமாக இருக்கும். பங்கு வர்த்தகத்தில் நிறைய இழப்புகளை சந்தித்தவர்கள் இந்த மாதம் இழப்புக்கு பதிலாக அதிக லாபம் ஈட்டுவார்கள்.
பெண்களுக்கு - குழந்தைகளின் எதிர்காலம் நினைத்து அவர்களுக்காக ஏதாவது சேமிப்பை துவங்குவீர்கள். அல்லது முதலீடு செய்ய முற்படுவீர்கள். அல்லது ரகசியமாக பணம் சேமிக்க தொடங்குவீர்கள். (தங்க நகை சேமிப்புத் திட்டம் போன்றவை).
மாணவர்களுக்கு- அதீத கற்பனையில், இருப்பதை கோட்டை விட்டுவிடாதீர்கள். அப்புறம் தேர்வில் கோட் (பெயில்) அடிக்க வேண்டி வரும். எனவே கவனமாக படியுங்கள். மறதி சிலருக்கு இருக்கும், அதற்கு யோகா போன்ற மனவளப் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்.
கலைஞர்களுக்கு- ஆவணி 10ம் தேதிக்கு மேல் நல்ல தகவல்கள், வாய்ப்புகள் வரும். சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
பொது பலன்கள் : தோல் அலர்ஜி, தூசு அலர்ஜி போன்றவை வருவதற்கு வாய்ப்பு உண்டு கவனம் தேவை.
வணங்க வேண்டிய தெய்வம் - திருவக்கரை வக்ரகாளி அம்மனை வெள்ளிக்கிழமை அன்றோ அல்லது பௌர்ணமி அன்றோ தரிசனம் செய்யுங்கள்.
சந்திராஷ்டம தினம்- ஆவணி 31, (செப்டம்பர் 17)
*******************************
சித்திரை நட்சத்திரம்
இந்த மாதம் முழுவதும் நன்மைகள் நடக்கும் மாதம் உங்களுக்கு!
சொந்த வீடு வாங்கும் கனவு இப்போது நனவாகும். திருமணம் கைகூடும். வேலை வாய்ப்புகள் தேடி வரும். வங்கிக் கடன் எதிர்பார்த்தவர்களுக்கு இப்போது தடையில்லாமல் கிடைக்கும். தொழிலில் வெளிநபர் ஒருவரால் ஆதாயம் கிடைக்கும். மாற்று மதத்தினர் ஆதரவால் தொழிலில் வளர்ச்சி உண்டாகும்.
ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும், முதலீடுகள் அதிகம் செய்யக்கூடிய நேரம் இது. அதேசமயம் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பெண்களுக்கு- வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் பணிச்சுமை அதிகரிக்கும். மற்றவர் பணிகளையும் சேர்த்து கவனிக்கவேண்டிவரும். குடும்பத்தில் ஒருவித மவுனம் அல்லது இறுக்கம் இருக்கும். எதையும் மனம் விட்டு பேசுங்கள். அனைத்தும் சுபமாகும்.
மாணவர்களுக்கு - படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆராய்ச்சி படிப்பை தொடர்பவர்கள் அதிகம் மெனக்கெட வேண்டிவரும். அதாவது குறிப்புகள் சேகரிக்க நிறைய உழைக்க வேண்டி வரும்.
கலைஞர்களுக்கு - ஆதாயம் வரக்கூடிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சுற்றுப்பயண அட்டவணை தயாரிக்க வேண்டிய அளவுக்கு இந்த மாதம் அமையும்.
பொது பலன் : இடுப்பு மற்றும் முதுகு முழங்கால் பகுதிகளில் வலி அல்லது நரம்பு பாதிப்புகள் வரக்கூடும். கவனமாக இருந்து தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
வணங்க வேண்டிய தெய்வம்- சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்த ஆலயங்களுக்கு சனிக்கிழமைகளில் சென்று வாருங்கள். நன்மை நடக்கும்.
சந்திராஷ்டம தினம்- ஆவணி - 6 (ஆகஸ்ட் 23)
***********************
சுவாதி நட்சத்திரம்
நன்மைகள் உங்களைத் தேடி வரும் மாதம் இது.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்த உங்களுக்கு, இந்த ஆவணி மாதம் உங்களுக்கு பல விதத்திலும் நன்மைகள் அதிகரிக்கும், எந்த ஒரு காரியமும் தங்குதடை இல்லாமல் நடக்கும். தர்ம காரியங்கள் அடுத்தவர்களுக்கு உதவுவது ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வது என இந்த மாதம் நற்செயல்களால் கடந்து போகும்.
தொழிலில் எதிர்பார்த்த நன்மைகள் மட்டுமல்ல எதிர்பார்க்காத நன்மைகளும் நடக்கும். உத்தியோகத்தல் இருப்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டாகும், உங்களின் கருத்து, திட்டம் அனைவராலும் ஏற்கப்பட்டு உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி புகழ் பெறுவீர்கள். எதிர்பாரத வகையில் பதவி உயர்வு கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். நீண்ட நாள் கடன் இப்போது தீரும். நிலம் வீடு என எதிலாவது முதலீடு செய்யும் வாய்ப்பு உண்டு, வர்த்தகத்துறையினருக்கு அற்புதங்கள் நடக்கும் மாதம் இது.
பெண்களுக்கு- அளவில்லாத ஆனந்தம் குடும்பத்தில் நிலவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி குவிப்பீர்கள், வேலையில் பதவி உயர்வு சம்பள உயர்வு நிச்சயம் ஏற்படும்.
மாணவர்களுக்கு - ஆவணி 10 தேதிக்கு மேல் கல்வியில் பெரும் முன்னேற்றம் ஏற்படும். அதிலும் உயர்கல்வி படிப்பவர்கள் சாதனை மதிப்பெண்கள் எடுப்பீர்கள்.
கலைஞர்களுக்கு- மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். சுறுசுறுப்பாக செயல்பட்டு நிறைய நன்மைகளை அடைவீர்கள், சமயோசித புத்தியால் சங்கடங்களையும் சாதனைகளாக மாற்றிக்காட்டுவீர்கள்.
பொது பலன்கள் : சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டும் ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியாக வைத்துக்கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு சர்க்கரை நோய் அறிகுறி இருப்பது தெரியும் வாய்ப்பு உள்ளது.
வணங்க வேண்டிய தெய்வம்- நரசிம்மரை வணங்குங்கள். உங்கள் செயல்கள் யாவும் வெற்றி அடையும்.
சந்திராஷ்டம தினம் -ஆவணி 7 ( ஆகஸ்ட் 24)