Published : 26 Jul 2019 10:16 AM
Last Updated : 26 Jul 2019 10:16 AM

’தலையற்ற நட்சத்திரங்கள், உடலற்ற நட்சத்திரங்கள், காலற்ற நட்சத்திரங்கள்’ தெரியுமா? 

ஜோதிடம் அறிவோம் 2 -59: இதுதான்... இப்படித்தான்! 
ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே. 
நட்சத்திரங்களில் “முழுமையான நட்சத்திரங்கள், தலையற்ற நட்சத்திரங்கள்,உடலற்ற நட்சத்திரங்கள், காலற்ற நட்சத்திரங்கள்” என இருப்பது உங்களுக்குத் தெரியுமா? 
இந்தப் பதிவில் நாம் அதைத்தான் பார்க்க இருக்கிறோம். 
முழுமையான நட்சத்திரங்களைத் தவிர, மற்ற நட்சத்திரங்களை “உடைந்த நட்சத்திரங்கள்”என்றும் குறிப்பிடுவார்கள்,
சரி... முழுமையான நட்சத்திரங்கள், உடைந்த நட்சத்திரங்கள் என்றால் என்ன?  
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக் கட்டங்கள் உள்ளன அல்லவா! அந்த 12 ராசிகளிலும் 27 நட்சத்திரங்கள் அதாவது அஸ்வினி முதல் ரேவதி வரையிலான நட்சத்திரங்கள் இடம்பெற்றிருக்கின்றன.  
ஒரு ராசிக் கட்டத்திற்கு 2 நட்சத்திரம் என்றாலும் 2x12 = 24 நட்சத்திரம்தானே வருகிறது?  மீதி 3 நட்சத்திரம் எங்கு இருக்கும்? என்றுதானே யோசிக்கிறீர்கள். இது இயல்பான சந்தேகம் தான். இதற்கு தீர்வு என்ன? 
ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் உண்டு. ஆக 27 நட்சத்திரங்கள் x 4 பாதங்கள் = 108 பாதங்கள் வருகிறல்லவா! இந்த 108 பாதங்களை 12 ராசிகளுக்கும் பிரித்துக் கொடுத்தால்... ஒரு ராசிக்கு 9 பாதங்கள் என வரும், ஆக 12 ராசிகளுக்கும் சமமாக நிறைவு பெறுகிறது, இப்போது புரிகிறதல்லவா?! 
இங்கே ஒரு சிறு விளக்கம்:- ராசிக் கட்டத்தை “ராசி மண்டலம்” என்றே அழைக்கிறது ஜோதிடம்.  அதாவது இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும், நாம் வாழும் இந்த பூமிக்கு தாக்கத்தை உண்டாக்கும் சூரியன் சந்திரன் புதன் செவ்வாய் சுக்ரன் குரு சனி என அனைத்து கோள்களையும் உள்ளடக்கியதே இந்த ராசி மண்டலம். 
நமக்கு ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள். இந்த 48 எப்படி கணக்கிடப்பட்டது? 
ராசிகள் 12 , அந்த ராசிக் கட்டத்தில் வாசம் செய்யும் கோள்கள்  9. இந்த கோள்கள் பயணிக்கும் நட்சத்திரங்கள் 27. 
இதன் மொத்த கூட்டுத்தொகை 48. இப்போது எளிதாகப் புரிந்திருக்கும். நாம் ஒரு மண்டலம் விரதம் முதலான எந்தச் செயல் செய்தாலும் இந்த பிரபஞ்சத்தை நாம் வலம் வருவதற்கு சமமாகும். அதேபோல 27 நட்சத்திரங்களும் அதன் 4 பாதங்களையும் பெருக்கினால் வருவது 108.  மந்திர உச்சாடனம் முதல் ஶ்ரீராமஜெயம் வரை நாம் பின்பற்றுவதும் 108 முறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவை, இந்த பிரபஞ்சத்தைச் சுற்றி வருவதற்கான அடையாளம் ஆகும். 
சரி... இப்போது முழுமையான நட்சத்திரங்கள் எவை என பார்ப்போம்.  
அஸ்வினி, பரணி, ரோகிணி, திருவாதிரை,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம்,அஸ்தம்,
சுவாதி, அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி இந்த 18 நட்சத்திரங்களும் முழுமையான நட்சத்திரங்கள். 
உடைந்த நட்சத்திரங்கள் எவை? 
சூரியனின் நட்சத்திரங்களான கார்த்திகை,உத்திரம்,உத்திராடம்,
செவ்வாயின்  நட்சத்திரங்களான மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம்,
குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி... இந்த நட்சத்திரங்களே உடைந்த நட்சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன. 
கார்த்திகை , உத்திரம், உத்திராடம் இந்த மூன்று நட்சத்திரங்களும், தன் முதல் பாதத்தை ஒரு ராசியிலும், மற்ற மூன்று பாதங்கள் அடுத்த ராசியிலும் இருக்கும். உதாரணமாக கார்த்திகை நட்சத்திரம் முதல்பாதம் மேஷ ராசியிலும், மற்ற மூன்று பாதங்களும் ரிஷப ராசியிலும் இருக்கும். இப்படி முதல்பாதம் மட்டும் இழந்ததால் இந்த மூன்று நட்சத்திரங்களும் தலையற்ற நட்சத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன. 
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இந்த மூன்று நட்சத்திரங்களும் தன் முதல் இரண்டு பாதங்களை ஒரு ராசியிலும், மற்ற இரண்டு பாதங்களை அடுத்த ராசியிலும் வைத்து இருப்பதால் இதை உடலற்ற நட்சத்திரங்கள் என்பார்கள். உதாரணமாக, மிருகசீரிடம் நட்சத்திரம் தன் முதல் இரண்டு பாதங்களை ரிஷப ராசியிலும், அடுத்த இரண்டு பாதங்களை மிதுன ராசியிலும் வைத்துள்ளது, 
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இந்த மூன்று நட்சத்திரங்களும் தன் முதல் மூன்று பாதங்களை ஒரு ராசியிலும் நான்காவது பாதத்தை அடுத்த ராசியிலும் வைத்திருப்பதால் இந்த நட்சத்திரங்களை காலற்ற நட்சத்திரங்கள் என்பார்கள்.  உதாரணமாக, புனர்பூசம் நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் மிதுன ராசியிலும், கடைசி பாதமான நான்காவது பாதத்தை கடக ராசியிலும் வைத்திருக்கும். 
இந்த உடைந்த நட்சத்திரங்களால் என்ன பலன் உண்டாகும்? 
பொதுவாக சூரியன் மற்றும் குருவின் நட்சத்திரங்களை மத்திம பலன்  தரும் நட்சத்திரங்கள் என்றுதான் குறிப்பிடுவார்கள். 
ஆனால் செவ்வாயின் நட்சத்திரங்களை முழு நன்மை தரும் நட்சத்திரம் என்று குறிப்பிடுவார்கள்.
பொதுவாக, சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளை எடுப்பவர்கள்.  பின்விளைவுகளை பற்றி கவலைப்படாதவர்கள். அநியாயத்திற்கு எதிராக பொங்குபவர்கள்.  கோபமும் கோபத்திற்கு பின் குணமும் இருப்பவர்கள் (கோபம் இருக்கும் இடத்தில்தானே குணம் இருக்கும் என்ற பழமொழி இவர்களால் ஏற்பட்டதுதான்).
குருவின் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள்.... முழுமையான ஏமாளிகள். எளிதில் எதையும் எவரையும்  நம்புபவர்கள். சுயநலம் கொஞ்சம் இருக்கும்,எது சரி எது தவறு என பிரித்துப்பார்க்க முடியாதவர்கள்,ஏமாற்றங்களை அதிகம் சந்திப்பவர்கள், ஆனானப்பட்ட ஶ்ரீராமரே பொய்மானை உண்மையான மான் என நம்பி துரத்திச்சென்று தன் மனைவியைத் தொலைத்தார்.  இந்த உதாரணமே போதும் என நினைக்கிறேன். 
செவ்வாயின் நட்சத்திரங்கள் முழுமையான சுப நட்சத்திரங்களாகவே பார்க்கப்படுகின்றன. காரணம் சரிபாதி பாதங்கள் இரண்டு ராசிகளில் இருப்பதே காரணம். அதாவது தனக்குக் கிடைக்கும் எதையும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து தரும் குணம் கொண்டவர்கள்.  திருமணங்களை இந்த நட்சத்திர நாட்களில் நடத்தினால் கணவன் மனைவி ஒற்றுமை, விட்டுக் கொடுத்துச் செல்லும் பண்பு, ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் தன்மை ஆகியன சிறப்பாக இருக்கும் ( இது பொது கருத்துதான், ஜாதக ரீதியாக இந்த கருத்து சற்று மாறுபடவும் வாய்ப்பு உண்டு. ஆனால் குணமோ,தன்மையோ மாறாது). 
சென்ற பதிவில் பஞ்சாங்கம் எதற்காக உருவாக்கப்பட்டது? வேளாண்மையை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டது என தெரிவித்தேன் அல்லவா அதைப் பற்றிய விவரங்களையும்  சில ஜோதிட விளக்கங்களையும் அடுத்த பதிவில் பார்ப்போம். 
- அடுத்த பதிவுடன் நிறைவுறும்
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x