

நாடு முழுவதும் 100 இடங்களில் ஸ்மார்ட் சிட்டி என்னும் திறன்மிகு நகரங்களை அமைக்கப்போவதாகக் கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. அதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை சமீபத்தில் வழங்கியுள்ளது. அதன் தொடக்க கட்டமாகத் தமிழகத்தில் பொன்னேரி, கேரளாவில் கொச்சி, குஜராத்தில் அகமதாபாத் போன்ற இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகப் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டுவிட்டன. இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் ஏற்றம் கண்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.
மத்திய அரசின் 100 ஸ்மார்ட் நகரத் திட்டத்தில் மதுரையும் இருப்பதால், இந்தத் திட்டம் மதுரையின் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு எத்தகைய உதவிகளைச் செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு விடை காண ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னணியில் உள்ள சிலரை அணுகினோம்.
எதிர்பார்ப்பு
சொல்லி வைத்ததுபோலப் பெரும்பாலானவர்கள் ஒரே பதிலையே சொன்னார்கள். “பொதுமக்களைவிட, ஸ்மார்ட் நகர் திட்டம் குறித்து எங்களுக்கு அதிக அக்கறையும் எதிர்பார்ப்பும் உள்ளன. ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் என்ன செய்யப்போகிறார்கள் என்று ஒரு விவரமும் தெரியவில்லை. மதுரை மாநகரின் மையப் பகுதியை ஸ்மார்ட் ஆக்கப் போகிறார்களா? அல்லது விரிவாக்கப் பகுதியைத் தேர்ந்தெடுத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்பப் போகிறார்களா? இல்லை என்றால் எங்காவது 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திப் புதிய நகரை உருவாக்கப் போகிறார்களா என்று எதுவும் புரியவில்லை.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த அறிவிப்பு கடந்த 2014-ம் ஆண்டு பட்ஜெட்டிலேயே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இதுவரையில் திட்டம் குறித்த கூடுதல் தகவல் எதுவும் வெளியாகவில்லை. கிரடாய் ( The Confederation of Real Estate Developers’ Associations of India -CREDAI) மூலமாகத் திட்டம் குறித்துத் தொடர்ந்து விசாரித்துவருகிறோம். மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழில் மந்தகதியில் உள்ளது. கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் ஆயிரக்கணக்கில் விற்பனையாகாமல் உள்ளன. இந்தத் திட்டம் எங்களுக்குச் சாதகமாக இருக்குமா? பாதகமாக இருக்குமா என்று எந்த விவரமும் தெரியவில்லை” என்றனர்.
வரவேற்கத்தக்கது
‘சிவா ஷெல்டர்ஸ்’ மீனாட்சி சுந்தரம் கூறுகையில், “ஸ்மார்ட் சிட்டி திட்டமானது தென்கொரியா, ஐக்கிய அரபு, சீனா போன்ற நாடுகளில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு உள்ளது. திட்டம் நிறைவேறிய பகுதியில் வணிகம், தகவல் தொடர்பு, சுற்றுச்சூழல் போன்றவை மேம்பட்டுள்ளன. இந்தத் தொலைநோக்குத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி அமைவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவ்வாறு திட்டம் வந்தால், சமீப கால வரலாற்றில் மத்திய அரசால் மதுரையில் செயல்படுத்தப்படும் மிகப் பெரிய திட்டமாக அது இருக்கும். திருச்சி முதல் திருநெல்வேலி வரையிலான தென்மாவட்டங்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அதிகமுள்ள நகராக மதுரை திகழ்கிறது. இருப்பினும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் நகரின் பெருமையைக் குலைக்கின்றன.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் வந்தால், அங்கே குடியிருப்புப் பகுதி, தொழிற்பூங்கா, வர்த்தக நிறுவனங்களுக்கான பகுதி போன்றவையும் அமையும். அதோடு அந்தப் பகுதியானது சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால், தொழில் வளர்ச்சி பெருகும். எனவே மதுரையில் ரியல் எஸ்டேட் ஏற்றம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே நேரத்தில் திட்டம் குறித்த முழு விவரம் வரும் முன்பு, அதை நம்பி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது சரியாக இருக்காது என்பதையும் உணர வேண்டும்” என்றார்.
வளர்ச்சிக்கு உதவாது
மதுரை விஸ்வாஸ் புரோமோட்டர்ஸ் சீத்தாராமன் கூறியபோது, “ஸ்மார்ட் சிட்டி என்பது துணை நகரம் போன்ற திட்டம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், ஸ்மார்ட் சிட்டி என்பது ஏற்கெனவே இருக்கிற நகரத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி ஹைடெக் நகராக மாற்றும் முயற்சிதான். எனவே, இந்தத் திட்டம் நாம் எதிர்பார்க்கிற அளவுக்கு ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சிக்கு உதவாது என்பது என் கருத்து.
ஒருவேளை துணை நகரம் திட்டத்தைப் போல இந்தத் திட்டத்திலும் வீடு கட்டிக் கொடுப்பதாகவே வைத்துக் கொண்டாலும், மாதம் 1 லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பவர்கள் மட்டுமே அங்கு வீடு வாங்கி குடியேறும் நிலை ஏற்படும். இதெப்படி ஒட்டுமொத்த நகருக்கான திட்டமாக அமையும்?
இன்னமும் பெரும்பாலான மாநகரங்களில் அடிப்படை வசதிகள் பூர்த்தியாகவில்லை. எனவே, மதுரை, கோவையை மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அத்தனை நகரங்களையும் எல்லா அடிப்படை வசதிகளையும் கொண்ட ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற வேண்டும். கிராமங்களிலும் அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.
துணை நகரம்
தற்போதுள்ள சூழலில் மக்கள் மனை வாங்கி வீடு கட்டவோ, கட்டிய வீட்டை வாங்கவோ மிகவும் தயங்குகிறார்கள். காரணம், விலைவாசி. மதுரை கே.கே.நகரில் வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்குக் கிடைத்த பிளாட் 20 ஆண்டுகளில் ரூ.1 கோடியாகிவிட்டது. இதேபோல சிமெண்ட், மணல், கம்பி என்று கட்டுமான பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. பத்திரப் பதிவு, வரைபட ஒப்புதல் செலவினங்களும் மிகமிக அதிகரித்துவிட்டன. புறம்போக்கு இடத்தில் உள்ள ஓட்டு வீட்டை வாங்குவதாக இருந்தால்கூட 10 லட்சம் செலவாகும் என்ற நிலை உள்ளது. இதனால் சொந்த வீடு ஆசையைத் துறந்து, வாடகை வீட்டில் வாழ்வதே சுகம் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
ஸ்மார்ட் சிட்டி திட்டமானது, துணை நகரம் திட்டம் போல ஒவ்வொரு நகரில் இருந்தும் வெகுதூரம் தள்ளி அமைக்கப்பட வேண்டும். தனியார் ரியல் எஸ்டேட் அதிபர்கள் எல்லாம் நகரைச் சுற்றியோ, பஸ் நிலையத்தைச் சுற்றியோ பிளாட் போட்டால்தான் விற்பனையாகும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அரசும் அதே பாணியில் பயணிக்கக் கூடாது.
அரசு நினைத்தால் எந்த இடத்திலும் சாலை, மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, பள்ளிக்கூடம் போன்ற வசதிகளை ஏற்படுத்த முடியும். எனவே, எல்லா மாநகரங்களிலும் துணை நகரம் போல ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இதனால் நகரங்களில் போக்குவரத்து மற்றும் மக்கள் நெருக்கடி குறைவதுடன் சுகாதாரமும் மேம்படும்” என்றார்.
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி