மேஷம் ராசிக்கான ஜனவரி மாத பலன்கள் - முழுமையாக | 2025

மேஷம் ராசிக்கான ஜனவரி மாத பலன்கள் - முழுமையாக | 2025
Updated on
2 min read

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்: 01.01.2025 அன்று புதன் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 14.01.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து சூரியன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18.01.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 28.01.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து சுக்கிர பகவான் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமாக இருப்பதாலும் நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். ஆனாலும் அஷ்டமத்து சனியால் தேவையற்ற மனகவலை உண்டாகும். வீண் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நலம் தரும். தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து நன்மை பெறுவீர்கள்.

குடும்பத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல் இருப்பார்கள் எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். புதியதாக மனை வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு பணம் வந்து சேரும். பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும்.

கலைத்துறையினருக்கு சககலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். ஒப்பந்தங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உடன் பணிபுரிபவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை. அரசியல் துறையினருக்கு திறமையான பேச்சின் மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு பாடங்களை நன்கு படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.

அஸ்வினி: சொத்து தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார சந்தேகங்களை உடனுக்குடன் போக்கிக் கொள்ள தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை கேட்கலாம். வழக்கு வியாஜ்ஜியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்து வந்த மன குழப்பம் நீங்கும்.

பரணி: துணிச்சலாக எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் காரிய தடை ஏற்பட்டாலும் தடை நீங்கி காரியங்கள் நடந்து முடியும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும். தேவையான வசதிகள் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

கார்த்திகை 1ம் பாதம்: உடல்சோர்வு மனக்குழப்பம் ஏற்பட்டாலும் செலவு கட்டுக்குள் இருக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் கவனமாக எதையும் செய்வது நன்மையை தரும். தேவையான பண உதவியும் கிடைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலில் உள்ள கருடமூர்த்தியை வணங்கவும் | அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை புதன், வெள்ளி; தேய்பிறை புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 24, 25, 26 | அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7 | ஜனவரி மாத கிரகநிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in