மேஷம் ராசியினருக்கான ஆகஸ்ட் மாத பலன்கள் முழுமையாக | 2023

மேஷம் ராசியினருக்கான ஆகஸ்ட் மாத பலன்கள் முழுமையாக | 2023
Updated on
2 min read

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் (வ), புதன் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்: 16-08-2023 அன்று சூர்ய பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 18-08-2023 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 19-08-2023 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 24-08-2023 அன்று சனி பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: வீரத்துடனும் தீரத்துடனும் செயல்பட்டு வெற்றி பெறும் மேஷ ராசியினரே! இந்த மாதம் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவீர்கள். ராசிக்கு மூன்றாம் இடத்தை ராகு ஆக்ரமிப்பதால் சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். எதையும் மனோ தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். வீடு தொடர்பான பணிகள் விரைந்து நடக்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழே உள்ளவர்களால் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றி ஆலோசிப்பார்கள். பதவி உயர்வு - பணி இடமாற்றம் கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார்கள். உறவினர்களுடன் சுமூக உறவு இருந்தாலும் அவர்களால் கிடைக்கும் உதவி தாமதப்படும். பெண்களுக்கு எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.

மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகம் கேட்பதற்கு தயக்கம் காட்டாமல் இருப்பது வெற்றிக்கு உதவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண் விரயச்செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம்.

அரசியல் துறையினருக்கு கடந்த காலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம்.

அசுபதி: இந்த மாதம் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.

பரணி: இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம். சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.

கார்த்திகை: இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சினை இருக்காது.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் சிவனை வணங்கி வர எல்லா பிரச்சினைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும் | சந்திராஷ்டம தினங்கள்: 24, 25 | அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in