

படம்: வி.சுந்தர்ராஜ்
வைகுண்ட ஏகாதசியின்போது, கிராம மக்கள் இரவில் கண் விழித்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 200 ஆண்டுகளாக சரித்திர நாடகங்களை நடத்தி வருகின்றனர் தஞ்சாவூர் அருகேயுள்ள காசவளநாடு கொல்லாங்கரை கிராம மக்கள்.
காசவளநாடு கொல்லாங் கரை கிராமத்தில் 500-க்கும் அதி கமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி வைபவத்தை விமரிசையாக கொண்டாடுவர்.
ஏகாதசியையொட்டி இரவில் கிராம மக்கள் அனைவரும் கண் விழித்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2 நாட்கள், இரவு வேளையில் வள்ளி திருமணம், ருக்மாங்கதன், ராமாயணம், சத்தியவான் சாவித்ரி ஆகிய சரித்திர நாடகங்களை நடத்தி வருகின்றனர்.
இதில் கிராம மக்களே பாத்தி ரங்களை ஏற்று நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், பெண்கள் நாடகத் தில் நடிப்பதில்லை. எனவே, பெண் கதாபாத்திரங்களிலும் ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பது வழக்கம்.
இதன்படி, நிகழாண்டு நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்கள் சம்பூர்ண ராமாயணம், ருக்மாங்கதன் ஆகிய நாடகங் களை நிகழ்த்தினர். இதை அக்கிராம மக்கள் மட்டுமின்றி சுற்றுப்பகுதி கிராமங்களும் வந்து கண்டு மகிழ்ந்தனர்.
இதுகுறித்து கொல்லாங்கரை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் கூறியது: எங்கள் கிராமத்தில் வைகுண்ட ஏகாதசியை முன் னிட்டு 200 ஆண்டுகளுக்கும் மேலாக சரித்திர நாடகங்களை நடத்தி வருகிறோம். இதற்காக புரட்டாசி மாதம் 3-வது சனிக் கிழமை பயிற்சியைத் தொடங்கி விடுவோம். கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிப் பார்கள். இரவு 11 மணிக்குத் தொடங்கி அதிகாலை 4 மணி வரை நாடகம் நிகழ்த்தப்படும் என்றார்.