

பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம், 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த முக்கியமான கவி. இவர் ஈரானில் உள்ள நிஷாப்பூர் என்னும் ஊரில் பிறந்தார். இன்றைய ஆப்கானிதஸ்தானில் உள்ள பால்க் என்னும் ஊரில் இவர் வளர்ந்தார்.
இவர் கவிதை மட்டுமல்லாது கணிதவியலிலும் வானியலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் இயற்றிய இயற்கணிதம் பாரசீகத்தின் பாடத் திட்டமாகக் கொள்ளப்பட்டது. மேலும் இவர் பாரசீகக் காலக்காட்டியை உருவாக்கினார்.
இவரது கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால், முதல் முறையாக இவரது கவிதைகளைப் பார்சீகத்திலிருந்து நேரடியாக எழுத்தாளர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ‘உமர் கய்யாமின் ருபாயியாத்’ என்னும் பெயரில் யுனிவர்ஸல் பப்ளிச்கர்ஸ் பதிப்பகம் இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்துள்ளது. 136 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் விலை ரூ.125. தொடர்புக்கு: 044 28343385.
இந்தப் புத்தகத்தில் கவிதைகள் மூல மொழியில் இருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் அதன் ஈரம் மாறாமல் இருக்கிறது. மட்டுமல்லாமல் மொழிபெயர்த்த ஒவ்வொரு கவிதையைக் குறித்து நாகூர் ரூமியின் தன் கருத்தைப் பகிர்ந்திருக்கிறார். இந்தப் பண்பு கவிதைகளை விரிந்த பரப்புக்கு எடுத்துச் செல்கிறது.
புத்தகத்திலிருந்து சில கவிதைகள்:
சூடாகவும் குளிராகவும் இல்லாத இனிய நாள் இது
ரோஜாத்தோட்டத்தைக் கழுவித்துடைக்கின்றன
மழை மேகங்கள்
'சிவப்பு மது' என பாரசீக மொழியில் ரோஜாவிடம்
சொல்கிறது வானம்பாடி
தன் மஞ்சள் கன்னம் சிவக்க
.
ஓ என் காதலியே, நேற்றின் பாபங்களையும்
நாளையின் பயங்களையும்
இன்று போக்கும் கோப்பையை நிரப்பு, நாளை நான்
நேற்றின் ஏழாயிரம் வருடங்களோடு
நானாகவே இருக்கலாம்
நாளையைப்பற்றி என்ன கவலை?
.
அந்தியிலே ஒருநாள் சந்தையிலே
கண்டேன் குயவன்
களி மண்ணைத் தட்டிக்கொண்டிருந்ததை
அழிந்துபோன நாக்கோடு அது முனகியது
மெல்ல சகோதரனே, மெல்ல
.
நகரும் விரல் எழுதுகிறது. எழுதி எழுதிச் செல்கிறது
பக்தியாலோ, அறிவாலோ திரும்பப்
பெறமுடியாது பாதி வரியைக்கூட
உனது கண்ணீர் அத்தனையாலும்கூட
அழித்துவிட முடியாது
ஒரு சொல்லைக்கூட