

இணைய வசதியைப் பயன்படுத்தி புதிய இளம் வாசகர்கள் பலர் ரசனை அடிப்படையில் தங்கள் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். அது வெறும் வாசகப் பார்வை என்பதைத் தாண்டி வலுவாக இருக்கிறது.
ப்ளாக், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பொதுவாகத் தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி பகிர்ந்துகொள்வது வழக்கமானதுதான். ஆனால், யுடியூபில் இதுபோன்ற விமர்சனங்கள் அபூர்வம். அந்த வகையில் புக்டேக்ஃபோரம் (book tag forum), இலக்கியப் பெட்டி, கதைச் சோலை, ஒயிட் நைட்ஸ் (White nights), Novel review, சுபாவின் நூலகம் போன்ற பல யூடியூபர்கள் தமிழ் இலக்கியத் தொண்டாற்றிவருகின்றனர்.
புக்டேக்ஃபோரம் யூடியூப் தனித்துவமான இலக்கிய விமர்சனத்துக்கான தளமாக இருக்கிறது. இளம் எழுத்தாளர்கள் அய்யனார் விஸ்வநாத், சரவணன் சந்திரன், தமிழ்ப்பிரபா, லஷ்மி சரவணக்குமார் ஆகியோரின் நாவல்கள் குறித்தும் விரிவான விமர்சனங்கள் உள்ளன. லஷ்மி சரவணக்குமாரின் ‘ரூஹ்’ நாவலைக் குறித்த விமர்சனப் பதிவு சிறப்பானதாக இருக்கிறது. ஜோதிலிங்கம் என்னும் கதாபாத்திரத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட அந்த நாவலின் கட்டுமானத்தை அடுக்கடுக்காக விவரிக்கிறது இந்தப் பதிவு. கதையின் சுருக்கம், பாத்திரப் படைப்பு, அதிலிருந்து பெற்ற அனுபவம் என இந்த விமர்சனப் பதிவு தொடர்ந்து முன்னேறுகிறது. இளம் எழுத்தாளர்களின் நாவல்கள் மட்டுமல்லாது ‘கடல்புரத்தில்’, ‘குறத்தி முடுக்கு’, ‘நித்யகன்னி’, ‘கரைந்த நிழல்கள்’, ’கோபல்ல கிராமம்’ ஆகிய தமிழ்க் கிளாசிக் நாவல்கள் குறித்தும் இதில் பதிவுகள் உள்ளன.
2019-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற சோ.தர்மனின் ‘சூழ்’ நாவலுக்கான இந்த சானலின் விமர்சனப் பார்வை காத்திரமான ஒன்று. அந்த நாவலை மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராம’த்துடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். அந்த நாவல் பெரியாரியவாதிகளை எப்படிச் சித்தரிக்கிறது என்றும் சொல்லாமல் போன சங்கதிகளையும் இந்த விமர்சனப் பார்வையில் கூறப்பட்டுள்ளது.
ஒயிட் நைட்ஸ் யூடியூப் சேனல் இலக்கியம் மட்டுமல்லாது இலக்கியம் தொடர்பான உரையாடலை நிகழ்த்திவருகிறது. மனு தொடர்பான விவாதத்தை எழுத்தாளர் ஜெயமோகன் தன் வலைத்தளம் மூலம் எப்படி எதிர்கொண்டார் என்பதை ஒரு பதிவு இந்த சேனல் விவரித்திருக்கிறது. இதில் தமிழ்ப்பிரபாவின் ‘பேட்ட’ நாவல் குறித்த விரிவான விமர்சனப் பார்வை இடம் பெற்றிருக்கிறது. ரெஜினா-குணசீலன் ஆகிய இரு கதாபாத்திரங்களைப் பிரதானமாகக் கொண்டு அந்த நாவல் விரிந்துசெல்வதை இந்தப் பதிவில் விவரித்துள்ளனர். சிந்தாதிரிப்பேட்டை என்னும் பகுதியின் பல பரிமாணங்களை இந்த நாவல் படம் பிடித்துக் காட்டுவதை இந்தப் பதிவு சொல்கிறது.
அதுபோல் இரா.முருகவேளின் புதிய நாவலான ‘புனைபாவை’ குறித்துத் தெளிவான பார்வையை இந்த சேனல் முன்வைக்கிறது. பொதுவாக பண்டைய காலத்தைப் பற்றிய நாவல்களில் காணப்படும் விதந்தோம்பல் இந்த நாவலில் இல்லை என்ற வசீகரிக்கும் சொற்றொடருடன் இந்தப் பதிவு தொடங்குகிறது. இந்த நாவல் திடமான வரலாற்றுப் பின்னணியில் பின்னப்பட்ட புனைவு என்பதை விரிவான சான்றுகளுடன் விளக்குகிறது சேனலின் பதிவு. உருக்கு, அதிலிருந்து கத்தி, அதிலிருந்து வணிகம் எனப் பிரம்மாண்டமாக நாவல் விரிவதைச் சிறப்பாகச் சொல்கிறது. மேலும் இந்த நாவல் வர்க்கப் போராட்டத்தை தன் மையமாகக் கொண்டுள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது.
நாவல் ரிவ்யூ என்னும் சேனலில் தேவன், நம்மாழ்வார் போன்ற கலவையான பலரின் நூல்கள் குறித்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன. ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் ஒன்றுக்குச் சிறப்பான விமர்சனப் பார்வை இந்த சேனலில் உள்ளது. சசி வாரியர் எழுதிய தூக்கிலிடுபவனின் குறிப்புகள் என்னும் நூல் குறித்த பதிவுதான் அது. இன்று தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் முன்பு திருவனந்தபுரம் சமஸ்தானத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. அப்போது அந்தச் சமஸ்தானத்தில் தூக்குக் கைதிகளைத் தூக்கிலிட்டுக் கொல்லும் தொழில் செய்துவந்த ஜனநார்த்தனன் பிள்ளை என்பவரை மன வேதனைப் பதிவுதான் இந்தப் புத்தகம் எனத் திருத்தமான அறிமுகத்தை இந்த சேனல் தருகிறது. லீவரை இயக்கிய பிறகு கயிற்றில் வெகு நேரம் துடித்துக்கொண்டே இருந்த தூக்குக் கைதிகளைப் பற்றிய ஜனநார்த்தனன் பிள்ளையின் மனப் பதிவையும் தொகுப்பாளர் வாசித்துக் காட்டுகிறார்.
இந்த சேனலில் எழுத்தாளர் சுஜாதாவின் ‘பேசும் பொம்மைகள்’ மனித மூளையின் ஆற்றலை ரோபோவுக்குச் செலுத்தும் பரீட்சையும் அதன் சிக்கல்களும்தான் இந்த நாவல் எனச் சுவாரசியமாகத் தொடக்கத்திலேயே இந்த நாவல் குறித்துச் சொல்லிவிட்டு மாயா என்னும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தில் நாவலை விவரித்துள்ளார் தொகுப்பாளர்.
நாவல்கள், சிறுகதைகள் ஆகியவற்றைப் பற்றிப் பேசும் பதிவுகள்தாம் யுடியூபில் அதிகமாகக் காணக் கிடைக்கின்றன. மாறாக இலக்கியப் பெட்டி யுடியூபில் கவிதைகள் பற்றிய பதிவுகள் இருக்கின்றன. கவிஞர்கள் ஆனந்த், தேவதச்சன், நகுலன் ஆகியோரது கவிதைகளைப் பற்றிய சிறு அறிமுகத்தைச் செய்துள்ளார். அந்தக் கவிதைகள் உருவாக்கிய மனப் பதிவை இதில் அவர் பகிர்ந்துள்ளார். சினிமா விமர்சனம், உணவு, ப்ராங் எனக் கொட்டிக் கிடக்கும் யுடியூப் சேனல்களில் இந்த இளைஞர்கள் மூலம் தமிழ் விமர்சனத்துக்கு இடம் கிடைத்துள்ளது.