Published : 01 Nov 2013 08:49 PM
Last Updated : 01 Nov 2013 08:49 PM

விரல்கள் பத்தும் மூலதனம்!

நாம் சிறு வயதில் சுவர்களில் படம் வரைவது, பேப்பர் கப்பல் செய்து மழை நீரில் மிதக்க விடவது, முகத்தில் வண்ணங்கள் பூசிக்கொள்வது என எவ்வளவோ குறும்புகள் செய்திருப்போம். இது ஒருவகையான கற்பனை திறன் என்று சொல்லலாம். இதே கற்பனை திறனை கொஞ்சம் முயற்சி செய்து வளர்ந்து கொண்டால், கைவினை பொருட்கள் செய்வது மிகவும் எளிது என்று கூறுகிறார், சுதா செல்வகுமார். இவர் தமிழ்நாட்டின் இன்றைய சிறந்த கைவினை கலைஞர்களில் ஒருவர்.

இவரது சொந்த ஊர் கும்பகோணம். அங்கிருந்தே தன் கலை பயணத்தையும் தொடங்கியிருக்கிறார். "நான் பி. காம் படித்துக்கொண்டிருந்த சமயம்தான் ஒரு பயனுள்ள பொழுதுபோக்கு அம்சமாக கைவினை பொருட்கள் செய்ய பழகினேன். மாலை நேர கல்லூரி. நிறைய ஓய்வு நேரம் கிடைக்கும். எனக்கு வண்ணங்கள், பரிசு பொருட்கள், கலைப் பொருட்கள் போன்றவற்றின் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. வண்ண தாள்கள், மணிகள் கொண்டு சின்ன சின்ன பொருட்கள் செய்ய ஆரம்பித்தேன்." என்று தன் தொடக்க கால அனுபவத்தை விவரிக்கும் சுதா அவ்வாறு தான் செய்த கலை பொருட்களை விஷேச நாட்களில் தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசாக கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். இதனால் அவர்கள் மத்தியில் இவர் செய்யும் கைவினை பொருட்களுக்கு தனி மதிப்பும் வரவேற்பும் கிடைத்துள்ளது. இது இவருக்கு மிகப்பெரிய தூண்டுக்கோலாக இருந்தது.

அதன் பிறகு, முதுகலை வணிகம், கணினி பயன்பாட்டுக்கான முதுகலை படிய படிப்பு ஆகியவற்றை படித்து முடித்துவிட்டு, ஒரு வங்கியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு காலை முதல் மாலை வரை எண்களும் கணக்குகளும் இவரை ஆக்கிரமித்துக்கொண்டன. இதனால், தனக்கு விருப்பமான கைவினை பொருட்கள் செய்யும் பணிக்கு போதிய நேரம் இல்லாமல் போனது. அத்தகு வாழ்க்கையில் ஒருவிதமான வெறுமையை உணர்ந்த இவர், கற்பனை வளம் இருக்க கவலை ஏதற்கு? என்று தன் வங்கி வேலையை தைரியமாக தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் தன் மனதிற்கு மகிழ்ச்சி தரும் பணியான கைவினை பொருட்களை செய்ய துவங்கினார்.

இதற்கிடையே, இவர் திருமணமாகி சென்னை வந்துவிட, இன்னும் வசதியாக போனது. ஆனால் ஆரம்பத்தில் பல சவால்களை இவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. "கிட்ட தட்ட பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் சென்னை வந்தேன். அப்போது எனக்கு இந்த ஊர் மிகவும் புதிது. ஆரம்பத்தில் காகிதம், துணி, பஞ்சு போன்றவற்றையை கொண்டு கலை பொருட்கள் செய்தேன். நான் செய்யும் பொருட்களை கடைகளுக்கு விற்பனை கொடுத்தேன். நானே எதிர்பாராத வகையில், என்னுடைய கலை பொருட்கள் அனைத்தும் விற்று தீர்ந்தது. எனக்கு இது மிகவும் உற்சாகம் அளித்தது. மேலும், எனக்கு நேரடியாகவும் ஆர்டர் வர தொடங்கியது.

ஆனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விருப்பத்தை தெரிவித்தனர். ஒருவர் சேலையில் வேலைப்பாடுகள் செய்து தர வேண்டும் என்றார். மற்றொருவர் ஃபேன்சி நகைகள் வேண்டும் என்றார். சிலர் வீட்டை அலங்காரிக்கும் அழகுப் பொருட்கள் வேண்டும் என்றனர். இப்படி பலரும் பலவிதமான தேவைகளை கூறியபோது அனைத்தையும் பூர்த்தி செய்ய ஒரே வழி இயன்ற வரை அனைத்து வகையான கைவினை கலைகளையும் கற்றுக்கொள்ளவதுதான் என்று முடிவேடுத்தேன். பெயின்ட்டிங், ஜுவல்லரி மேக்கிங்கில் இருந்து சாக்லேட் தயாரிப்பு வரை கற்றுக்கொண்டேன்." என்று இவர் விவரிப்பதை கேட்கும்போது நம்மால் வியப்படையாமல் இருக்க முடியவில்லை.

மெஹந்தி, சாம்பிராணி, மெழுகுவத்தி, ஃபேன்ஸி மற்றும் பேப்பர் பைகள், மியூரல், கிரீட்டிங் கார்டு, ஃபிளவர் மேக்கிங், அழகுக் கலை என 50 - க்கும் மேற்பட்ட கலைகளை கற்று வைத்திருக்கிறார், சுதா செல்வகுமார். தான் கற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், கைவினை பொருட்கள் செய்யும் கலையை பிறரிடமும் கொண்டுப்போய் சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில் தன் வீட்டிலேயே "எஸ்.எஸ்.ஆர்ட் ஆன்ட் கிராஃப்ட் இன்ஸ்டிடியூட்' தொடங்கி, ஆறு வயது சிறுமி முதல் ஆறுபது வயது பெரியவர்கள் வரை பயிற்சி அளித்து வருகிறார். "என் பயிற்சி பள்ளியில் வருகிறவர்கள் தாங்கள் விரும்பும் கலையை தாங்களே தேர்வு செய்து கற்றக்கொள்ளலாம். இங்கு எந்த கட்டுப்பாடோ விதிமுறையோ இல்லை." என்று கூறும் இவர் தனது பயிற்சி பள்ளியில் பல நேரங்களில், சிறுவர்களைவிட பெரியவர்கள் மிகவும் வேகமாக கற்றுக்கொள்வதாக தெரிவிக்கிறார். ஐடி துறையில் வேலை பார்க்கும் பெண்கள் தங்கள் மன அழுத்தத்தை போக்க இங்கு வந்து கைவினை பொருட்கள் என்று இவர் கூறுவதை கேட்கும்போது இத்தகு கலைகள் மிக சிறந்த உளவியல் மருந்தாகவும் இருக்கும் என்பதை உணர முடிகிறது.

இது வரை, தமிழ்நாட்டில் பல ஊர்களில் 50-க்கும் மேற்பட்ட 'ஒர்க் ஷாப்' நடத்தி அசத்தியிருக்கிறார் சுதா. சரி, பொழுதுபோக்காக செய்யும் வேலையையே தொழிலாக எடுத்திருக்கும் இவர் தன் ஓய்வு நேரத்தில் என்ன செய்வார்? "அப்போதும் கைவினை பொருட்கள் செய்யும் கண்காட்சிகளுக்கு குடும்பத்துடன் சென்று வருவேன். எந்த சுற்றுலா தளங்களுக்கு சென்றால், அந்த ஊரில் பிரத்யேகமாக கிடைக்கும் பொருட்களைத் தேடி கண்டுபிடித்து வாங்குவேன். ஆதனால், ஓய்வு நேரத்திலும் என் சிந்தனையில் இந்த கலைப் பொருட்கள்தான் இருக்கும்" என்று சொல்லி சிரிக்கிறார் சுதா.

வருங்காலத்தில், சென்னையில் மிக பெரிய பயிற்சி பள்ளி ஒன்றை துவங்கி பலருக்கு இந்த கலையை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான் இவருடைய கனவு. அழகான கனவு. தொடரட்டும் சுதாவின் கலை பயணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x