

கவனி
என் குரல்
எவ்வளவு பலவீனமாக ஒலித்தாலும்
நாம் பேசியாக வேண்டும்!
விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் தன்னுடைய எழுத்துக்களையே ஆயுதமாக்கிய கவிஞர் இன்குலாப்பின் வரிகள் இவை. சமூகத்தில் திருநங்கை, திருநம்பி உள்பட பால்புதுமையர்களின் நிலையும் விளிம்பு நிலையில்தான் இருக்கிறது. அவர்களுக்கான கருத்துகளை மதுரை அணியம் அறக்கட்டளை `பால்மணம்' என்னும் மின்னிதழ் வடிவில் ஏற்படுத்தித் தந்தது. இதற்குக் காரணமான ஜெகன், அதோடு நிறுத்திக் கொள்ளாமல் மின்னிதழில் வெளிவந்த படைப்புகளை தொகுத்து `பால்மணம்' என்னும் பெயரிலேயே நூலாகவும் கடந்த ஆண்டு வெளியிட்டனர்.
தற்போது இப்படி மின்னிதழில் வெளியான கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு அண்மையில் சென்னை, கூகை திரைப்பட இயக்கம் நூலகத்தில் வெளியிடப்பட்டது. நிகழ்விலிருந்து சில துளிகள்:
பால்புதுமையரின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் போராட்டமான வாழ்க்கையைப் பற்றிய நேர்மையான பதிவாக இந்த நூலில் அமைந்திருக்கும் படைப்புகள் இருந்தன. பால்புதுமையரே எழுதியிருக்கும் கட்டுரைகள், பலதரப்பட்ட துறை சார்ந்த திருநங்கைகளின் நேர்காணல்கள், பால்புதுமையர்க்காக செயல்படும் தன்னார்வ அமைப்புகள், சிறுகதைகள், கவிதைகள், பால்புதுமையர் குறித்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படங்கள் மீதான விமர்சனம், பால்புதுமையருக்கு இழைக்கப்படும் மருத்துவ ரீதியான அநீதிகள் எனப் பல பிரிவுகளில் விரியும் கட்டுரைகள் இந்த நூலை பால்புதுமையர் குறித்த உலகத்தைப் புரிந்துகொள்ள விரும்பும் எந்தவொரு வாசகருக்கும் புதிய வெளிச்சத்தைக் கொடுக்கும்.
"புத்தகம் ஓர் மாபெரும் ஆயுதம்
இந்த ஆயுதம்!
அழிப்பதற்கு அல்ல!
ஆக்கத்திற்கே பயன்படும்!
என்பதாலேயே எங்களின் படைப்புகளை புத்தகமாக வெளியிட்டுவருகிறோம்" என்றார் அணியம் அறக்கட்டளையின் நிறுவனரும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஜெகன்.
பறை இசையோடு நிகழ்வு தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ஓரங்க நாடகம், கவிதை வாசிப்பு, நடனம் எனப் பல நிகழ்ச்சிகளும் நடந்தன. தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களாக, `கழிவறை இருக்கை' புத்தகத்தை எழுதிய லதா, `சகோதரன்' அமைப்பின் பொது மேலாளர் ஜெயா, ஆவணப்பட இயக்குநர் மாலினி ஜீவரத்தினம், இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநருமான ஈழ நிலா ஆகியோர் பால்மணம் இரண்டாவது பாகத்தை வெளியிட்டனர்.
எழுத்தாளர் லதா, "நான் ஒரு straight (எதிர் பால் ஈர்ப்பு) பெண். அதில் பெரிதாக என்ன இருந்துவிடப் போகிறது, இந்த சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட பெண் என்ற விதிகளுக்குள் என்னால் அடங்கிவிட முடியவில்லை. இப்பவும் எனக்குப் பிடித்த உடையையே நான் உடுத்திக் கொள்கிறேன். அதனால் என்ன குறைந்து விட்டேனா?" என்றார்.
ஜெயா, "திருநர் சமூகம் எத்தனை வளர்ச்சியை அடைந்தாலும் சாதிய அடக்கு முறை இருக்கத்தான் செய்கிறது. திருநர் என்றாலே போராட்டம்தான். அதிலும் தலித் திருநர் என்றால் சொல்லவா வேண்டும்? காத்திருப்போம் நம்பிக்கையுடன். நிச்சயம் ஒருநாள் மாற்றம் உண்டாகும்." என்றார்.
ஆவணப்பட இயக்குனர் மாலினி, "பெற்றோர் இல்லாமல் வாழும் குயர் மக்களின் துயர் மிகவும் கொடுமையானது." என்றார்.
இலக்கிய துறையில் புதிய மைல் கல்லாக குயர் இலக்கியம் இருக்கும் என்பதிலும் குயர் எழுத்தாளர்களும் இன்னும் அதிக அளவில் தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள் என்பதிலும் மிகப் பெரிய நம்பிக்கையை பால்மணம் புத்தக வெளியீட்டு விழா ஏற்படுத்தியது.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription