

நீங்கள் எதற்கு ஆழமாக அச்சம் கொள்கிறீர்களோ அதனிடம் உங்களை முழுமையாக வெளிப்படுத்துங்கள்... அதன் பிறகு அந்த பயம் தன் ஆற்றலை இழந்துவிடும்... சுதந்திரம் குறித்த பயம் சுருங்கிப் போகும்... நீங்கள் விடுதலையாவீர்கள்... - ஜிம் மோரிசன்.
இறுக்கமான லெதர் பாண்ட், நீண்ட மூடி, சாந்தமான கண்கள்... இவை தான் ஜிம் மோரிசனின் அடையாளங்கள். அமெரிக்க ராக் இசை பாடல் உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். ஜிம் பாடகர் மட்டும் அல்ல, பாடலாசிரியர், எழுத்தாளர், இயக்குனர் என பன்முகங்களைக் கொண்டவர். பாப் மற்றும் கிளாசிக்கல் இசை அமெரிக்காவில் பரவலாக பிரமிப்பை ஏற்படுத்திய காலக்கட்டத்தில், ஜிம் மோரிசனின் தனித்துவமான ராக் இசை பாடல்கள் அனைத்து தரப்பிலும் ஈர்ப்பை ஏற்படுத்தியது.
குறிப்பாக இளைஞர்களிடம் 1960-களில் ஜிம் மோரிசனை முதன்மை பாடகராக கொண்டு அறிமுகமான 'Doors' ராக் இசைச் குழுவுக்கு பெரும் ரசிக பட்டாளாமே உருவாகியது. மேடைக்கு வெளியே மிகவும் தீவிர அமைதியுடன் காணப்படும் மோரிசன் மேடை ஏறி மைக்கை பிடிக்க ஆரம்பித்திவிட்டால் அவரை கட்டுப்படுத்த முடியாது.. அமெரிக்கா ஊடகங்கள் ஜிம் மோரிசனை பற்றி இன்று வரை எழுதும் நிரந்தர வரிகள் இவை. அந்த அளவிற்கு இசையின் மீது ஜிம் மோரிசன் தீவிரம் கொண்டிருந்தார்.
’என்னை இருமுறை காதலி’,’ மனிதர்கள் விசித்திரமானவர்கள்’, ’என்னை தொடு’, ’என் நெருப்புக்கு தீ மூட்டும்’..’அவளை தீவிரமாக நேசி’ போன்ற காலத்தால் அழியாத பல பாடல்களை மோரிசன் படைத்திருக்கிறார்.
’ஜிம் டக்லஸ் மோரிசன்’ இவ்வாறு தான் அனைவரும் தன்னை அழைக்க விரும்பினார் ஜிம். அதன் பொருட்டே தனது பெரும்பாலான படைப்புகளையும் இந்த பெயரிலேயே மோரிசன் வெளியிட்டார்.
ஜிம்மை மாற்றிய விபத்து
ஜிம் மோரிசனின் தந்தை ஒரு ராணுவ வீரர். இதனால் மோரிசன் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் தனது பள்ளிப் படிப்பை முடிக்க வேண்டி இருந்தது. அவருடைய சிறு வயதில் மோரிசன் விபத்து ஒன்றை நேரே காண்கிறார்.அவர் முன்னே உயிர்கள் பறிபோகின்றனர். அந்த விபத்தே ஜிம்மின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கலை உலகத்தை நோக்கி அவரை பயணிக்கவும் செய்தது. மனிதர்களை பற்றி எழுதவும் வைத்தது. இதனை ஜிம் பல்வேறு நேர்காணல்களில் கூறி இருக்கிறார்.
வெறும் இசைக் கலைஞனல்ல
”ஜிம்மை நாங்கள் வெறும் இசைக் கலைஞனாக பார்க்கவில்லை.. அவன் அந்த வார்த்தைக்கும் மேலானவன்..” ’doors’ இசைக் குழுவின் பிற உறுப்பினர்கள் ஜிம்மை பற்றி நினைவு கூறும்போது கூறியவை ...
ஜிம் வெறும் பாடகராக மட்டுமல்லாமல் கவிதைகளும் எழுதி வந்தார். ’doors’ இசைக் குழுவுக்கு பெரும்பாலான பாடல்களை ஜிம்மே எழுதி இருந்தார். தனது ஆறு வயதிலிருந்தே ஜிம் மோரிசன் கவிதைகள் எழுதி வந்தார். அவற்றையே தனது பாடல்களுக்கும் பயன்படுத்திக் கொண்டார். தனது இளமை காலத்தில் புகழின் உச்சியில் இருந்த ஜிம்க்கு திரைப்படங்கள் எடுக்கவும் விருப்பம் இருந்தது. தன்னுடைய கனவு வாழ்க்கைக்கு மிக நெருக்கமானதாக திரைப்படங்களை ஜிம் கருதினார். மோரிசனின் பாடல்களில் எப்போதுமே காதல் இருந்தது.மனிதம் இருந்தது. அவர் மரணத்தையும், தனிமனித சுதந்திரத்தையும் பற்றியே தீவிரமாக பேசினார். மரணமே வலியிலிருந்து கிடைக்கும் பெரும் விடுதலை என்றும் கூறினார். போரை கடுமையாக விமர்சித்தார். இதனாலயே ஜிம் இளம் வயதிலேயே பெரும் கலைஞனாக கொண்டாடப்பட்டார்.
ஜிம் மோரிசன் - பமீலா கோர்சன்
பமீலா கோர்சன், ஜிம் மோரிசனின் காதலி. ஜிம் மோரிசனை பற்றி பேசும் போது பமீலா கோர்சனைத் தவிர்க்க முடியாது. அடிப்படையில் பாடகரான பமீலா ஜிம்முடனே பயணித்தவர். ’doors’ - இசைக் குழுவுக்கு பல்வேறு பாடல்களை பாடியவர். 60-களில் அமெரிக்காவின் ஆதர்ச ஜோடியாக ஜிம்மும் - பமீலாவும் வலம் வந்தனர்.
அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணம்
ஜூலை 3 ஆம் தேதி 1971 ஆம் ஆண்டு பாரீஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மோரிசன் இறந்து கிடந்தார். அவரது இறப்புக்கு இதயம் செயலிழந்ததே காரணம் என்று கூறப்பட்டது. எந்த ஒரு உடற்கூறு ஆய்வு செய்யப்படாமல். ஜிம் மோரிசன் இறக்கும் போது அவருக்கு 27 வயது தான். மோரிசன் தற்கொலை செய்துக் கொண்டார். அவரது போதை பழக்கம் அவரை கொன்று விட்டது என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் இன்னமும் ஜிம்மின் மரணத்துக்கு உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. ஜிம் இறந்து மூன்று வருடங்களில் பமீலாவும் அதிகப்படியான போதை பொருட்களை உட்கொண்டு மரணித்து போனார்.
ஜிம் இறந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும் பாரீஸில் உள்ள பெரே லாச்சைஸ் கல்லறையில் மோரீசனுக்கு தினமும் அவரது ரசிகர்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். தனித்துவமான கலைஞர்கள் நீண்ட நாட்கள் நம்முடன் இல்லை என்றாலும் அவர்களுடைய படைப்பு காலம் முழுக்க நின்றுவிடும். ஜிம் மோரிசனும் அவரது படைப்புகள் அந்த வகையை சார்ந்தவையே..!
”கவிதை மற்றும் பாடல்களைத் தவிர வேறு எதுவும் ஒரு படுகொலையை கூற முடியாது. ஒரு முழு நாவலையும் யாரும் நினைவில் வைத்திருக்க முடியாது. ஒரு படம், ஒரு சிற்பம், ஒரு ஓவியம் இவற்றை யாராலும் முழுமையாக விவரிக்க முடியாது. ஆனால் மனிதர்கள் இருக்கும் வரை பாடல்களும் கவிதைகளும் தொடரும்... ஜிம் மோரிசனை போல..
தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in