

பிரம்மா ஃபைன் ஆர்ட்ஸ் தயாரித்த `ஆசீர்வாதம்' நாடகம் அண்மையில் ரசிக ரஞ்சனி சபாவில் அரங்கேறியது. கணவன், மனைவி எனும் பந்தம், உறவின் நெருக்கத்துக்கும் பலமான புரிதலுக்கும் சம்பந்தப்பட்ட ஆண், பெண்ணின் விருப்பம் மட்டுமல்ல, அவர்களுடைய குடும்பத்தினரின் பரிபூரணமான ஆசீர்வாதமும் வேண்டும் என்பதை அழகாக அதேசமயம் உறுதியாக இந்த நாடகம் வலியுறுத்தியது .
வேதாகமத்தைப் போற்றி அதன் வழிநடக்கும் குடும்பத்தில் பிறந்தவர் டேவிட். வைணவ சம்பிரதாயத்தில் தோய்ந்த குடும்பத்தில் பிறந்தவர் லஷ்மி. இருவருமே படிப்பிலும் பண்பிலும் சிறந்த மாணவர்களாக இருக்கின்றனர். முன்னவர் முனைவர் பட்டத்துக்கான ஆய்வை செய்துகொண்டே கல்லூரியில் விரிவுரையாளராக இருப்பவர். இந்த இருவரைச் சுற்றிதான் கதை பின்னப்பட்டிருக்கிறது. நாடகத்தை எழுதி, இயக்கி, டேவிட் என்னும் பிரதான பாத்திரத்திலும் சிறப்பாக பாடி, நடித்து அசத்தியிருக்கிறார் கே. பிரகாஷ். தொடக்கத்தில் சன்னமான குரலில் பாடி, பேசிய லஷ்மியின் பாத்திரத்தில் நடித்த மாலினி, அடுத்தடுத்த காட்சிகளில் வசன உச்சரிப்பில் சிக்ஸர் மழை பொழிந்துவிட்டார். லஷ்மியின் தந்தை ரங்கநாதன் பாத்திரத்தில் நடித்திருந்த ரமணனும் டேவிட்டின் தந்தை ஆபிரகாமாக நடித்திருந்த ஆனந்த் ஸ்ரீநிவாசனின் நடிப்பும் முத்திரை பதித்தது.
கல்லூரி விழாவுக்காக பைபிளின் சாரத்தை லஷ்மியும் பகவத்கீதையின் சாரத்தை டேவிட்டும் பேசவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது தொடர்பாக இருவரும் கடுமையான பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். படிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்கு நிறைய விவாதிக்கிறார்கள். இன்னொரு மதத்தைச் சேர்ந்த புனித நூலில் சொல்லப்பட்டிருக்கும் நல்ல விஷயங்களை பரஸ்பரம் இருவரும் புரிந்து கொள்வதற்கு கல்லூரிக் கலை விழா ஒரு காரணமாகிறது. அவர்களின் நட்பு பலமாகிறது. ஆனால், அடுத்த கட்டத்துக்கு அவர்களால் அவர்களின் நட்பைக் கொண்டுபோக முடிந்ததா? `தேவன் வேதமும் கண்ணன் கீதையும் என்னவானது?' என்பதை பரபரப்பில்லாத ஆனால் காத்திரமான காட்சிகளின் மூலம் பார்வையாளர்களுக்கு கடத்துகிறது நாடகத்தின் கிளைமேக்ஸ்.
ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சியைத் தொடங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். காட்சிகளின் இடையில் ஒலிக்கும் குஹப்பிரசாத்தின் பின்னணி இசை, அடுத்த காட்சிக்கு முன்னோட்டமாக அமைந்திருந்தது சிறப்பு. ஆரோக்கியமான விவாதத்தில் நம்பிக்கை இருப்பவர்களாக காட்டப்படும் நாயகனும் நாயகியும் ஒரு கட்டத்தில் அந்த நம்பிக்கையை இழப்பவர்களாக காட்டப்படுவது, நாடகத்தின் போக்கை பிரச்சார தொனிக்கு மாற்றிவிடுகிறது. இதைத் தவிர்த்திருக்கலாம்.