

ஜூலை 4, 2019. 10-வது உலகத் தமிழ் மாநாட்டு அரங்கம். 25-க்கும் மேற்பட்ட நரம்பு வாத்தியக் கருவிகள். காற்று வாத்தியக் கருவிகள். மேற்குலக டிம்பனி, டிரம்ஸ், தமிழ்நாட்டின் பாரம்பரிய வாத்தியக் கருவியான பறை உள்ளிட்ட தாள வாத்தியங்கள் புடைசூழ, ஒவ்வொரு வாத்தியத்தில் இருந்தும் பன்னீராய் இசைத் தூறல்கள் அங்கே குழுமியிருந்த நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களின் காதுகளில் தேன் பாய்ச்சியது.
முகப்பு இசை முடிந்ததும், தமிழை ஆண்ட ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் உள்ள பாடலான ‘கற்பூரம் நாறுமோ’ என்னும் பாடலை விதிதா கன்னிக்ஸ், கீரவாணி ராகத்தின் ஏற்ற இறக்கத்துடன் பாடி முடிக்க, அர்த்தம் பொதிந்த பாடலின் வார்த்தைகளிலும் உருக்கத்திலும் மெய் மறந்துபோன ரசிகர் கூட்டம் சில நொடிகள் அமைதிக்குப் பின், எழுந்து நின்று ஆரவாரிக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 2019இல் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 50-வது ஆண்டு விழா மற்றும் 10-வது உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் பாடப்பட்ட இந்தப் பாடலை, பிரத்யேகமான அரங்கத்தில் மீண்டும் பாடி, அதே சிம்பொனிக் கலைஞர்களைக் கொண்டு வாசிக்க வைத்து ஒலிப்பதிவு செய்து காணொலியாக யூடியூபில் வெளியிட்டிருக்கின்றனர்.
அமெரிக்காவில் ஒஹையோ மாநிலத்தில் வசிப்பவர் டாக்டர் கன்னிகேஸ்வரன். சுருக்கமாக கன்னிக்ஸ் என நண்பர்கள் வட்டாரத்தில் அழைக்கப்படுபவர். இவரது பூர்விகம் திருவண்ணாமலை. கணினித் துறையில் பேராசிரியராக கன்னிக்ஸ் இருந்தாலும், அவரின் இன்னொரு முகம் இசை. அமெரிக்காவில் சேர்ந்திசை வடிவத்தை பிரபலமாக்கியதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.
அமெரிக்காவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டின்போது இவர் வழங்கிய ‘முரசு’ என்னும் சிம்பொனி இசை, உலகம் முழுவதும் இசை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது. காரணம், இவர் சிம்பொனி இசையமைத்தது நமது பாரம்பரியச் செல்வங்களான சங்க காலப் பாடல்களுக்கு! ஏறக்குறைய 80 பாடகர்கள். 35 இளம் பாடகர்கள், தொல்காப்பியம் தொடங்கி, சங்க காலத்தின் திருக்குறள், தேவாரம், நாச்சியார் திருமொழி, திருமந்திரம், சிலப்பதிகாரம், குற்றாலக் குறவஞ்சி, கலிங்கத்துப் பரணி ஆகியவற்றிலிருந்து பல பாடல்களைச் சேர்ந்திசையாக வழங்கினர்.
‘கற்பூரம் நாறுமோ’ பாடலைத் தனியாக மேடையில் பாடிய விதிதா, கன்னிகேஸ்வரனின் மகள். இவர் மெக்கில் பல்கலைக்கழகத்தில் மேற்கத்திய இசையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கன்னிகேஸ்வரனிடமிருந்தே கர்நாடக இசையை முறையாகப் பயின்றிருக்கிறார்.
மீரா பஜனை அடியொற்றி ஆங்கிலத்தில் ஒரு பாடலை எழுதி இசையமைத்துப் பாடியிருக்கிறார். இணைய வழியில் இசை கற்றுக் கொடுக்கிறார். பாரம்பரியமான பிரெஞ்சு மொழிப் பாடலை கர்நாடக இசையின் ராக மெட்டுகளைக் கொண்டு இவர் பாடியதைக் கேட்டால், கிழக்கு, மேற்கு என எல்லா இசையும் இவருக்கு அத்துப்படி என்பது புரிகிறது.
‘இவருக்கு எல்லாம் தெரிகிறது’ – இதுதான் விதிதா என்னும் பெயருக்கான அர்த்தமாம்!
ஆண்டாளின் ‘கற்பூரம் நாறுமோ’ பாடலைக் காண