

நாகசுர மேதைகளில் நாகசுரத்துக்குப் பெருமையையும் கவுரவத்தையும் தேடித்தந்தவர் என்னும் புகழைக் கொண்டவர் ‘நாகசுரச் சக்கரவர்த்தி’ டி.என்.ராஜரத்னம். இசை உலகில் புதுமையையும் அரிய ராகங்களிலும், தாளங்களிலும் கீர்த்தனைகள், வர்ணங்கள், பல்லவிகள், மல்லாரிகள் போன்றவற்றைப் படைத்துத் தன்னுடைய தனித்துவமான நாகசுர வாசிப்பால் உள்நாட்டிலும் அயல்நாடுகள் பலவற்றிலும் ரசிக மனங்களை ஈர்த்து ‘நாகசுரப் பேரரசு’ தருமபுரம் அ.கோவிந்தராஜன்.
நேற்று முன்தினம் (ஜூன் 30) அவரின் 88-வது பிறந்தநாளையொட்டி, அவர் இசை உலகுக்கு அளித்த இசைக் கொடைகளிலிருந்து சிலவற்றைப் பிரபலமான நாகசுரக் கலைஞர்களைக் கொண்டு வாசிக்கவைத்து, அதன் காணொலிகளை அவருக்கான இசை அஞ்சலியாக யூடியூபில் வெளியிட்டுவருகிறார் கணினிப் பொறியாளரும் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவருமான சுவாமிமலை சரவணன்.
தன் தந்தையாரிடம் இசை பயிலத் தொடங்கிய கோவிந்தராஜன் அதன்பின் திருமாகாளம் வி.சோமாஸ்கந்தனிடம் குருகுல வாசமாக நாகசுரம் பயின்றார். பின்னர் தன் தந்தையாருடன் இரண்டாம் நாகசுரமாகத் தன் இசைப் பயணத்தைத் தொடங்கியவர் திருச்சிக்கு அருகிலுள்ள லால்குடியில் தன் முதல் கச்சேரியை அரங்கேற்றினார்.
1956 முதல் 1959ஆம் ஆண்டு வரை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் “சங்கீத பூஷணம்”, “தமிழிசைமணி” ஆகிய பட்டயப் படிப்புகளை நிறைவு செய்தார். பல்கலைக்கழகத்தில் டாக்டர் எம்.என்.தண்டபாணி தேசிகரிடம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் இலங்கையிலும் பிரபலமாகத் தன் நாகசுர இசைப் பயணத்தை நடத்தியுள்ளார்.
பிரபல தவில் மேதைகளான வலங்கைமான் ஷண்முகசுந்தரம், யாழ்ப்பாணம் கணேசன், வலயப்பட்டி ஏ.ஆர். சுப்ரமணியம், ஹரித்வாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் உள்ளிட்ட அந்நாளைய பிரபல வித்வான்களுடன் இணைந்து நாகசுரக் கச்சேரிகளைச் செய்துள்ளார். சமகால நாகசுரக் கலைஞர்களான திருமெய்ஞானம் நடராஜசுந்தரம், கிளாரினெட் ஏ.கே.சி. நடராஜன், டாக்டர் ஷேக் சின்ன மெளலானா, ஆண்டான் கோவில் செல்வரத்தினம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், மதுரை எம்.பி.என். சேதுராமன், எம்.பி.என். பொன்னுசாமி போன்றவர்களால் பாரட்டுதல்களுக்கும் போற்றுதலுக்கும் உரியவராகத் தன் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
கடிகாரத்திலும் ஒலிக்கும் ஸ, ப!
நாகசுரத்தையும் கோவிந்தராஜனையும் பிரிக்க முடியாது என்னும் கருத்தை வலியுறுத்துவதுபோல், தன்னுடைய விசிட்டிங் கார்டில்கூட நாகசுரத்தின் உள்ளே தன்னுடைய பெயர் இருக்கும் வகையில் அச்சடித்து வைத்திருந்தார்.
“கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பதுபோல், கோவிந்தராஜனின் வீட்டுக் கடிகாரமும் இசை பாடும்” எனப் பலரும் கூறும்வண்ணம், நேர்த்தியோடு கடிகாரத்தை உருவாக்கியிருந்தார். சுவர்க் கடிகாரத்தின் கம்பிகளில் தேன்மெழுகு வைத்து அதன் மணியோசையை ஷட்ஜமம், பஞ்சமம் ஆக ஒலிக்கும்படி செய்து வைத்திருந்தார் கோவிந்தராஜன்.
புதுமைகளின் பொக்கிஷம்!
1978இல் சென்னை தமிழிசைச் சங்கத்தில் ஹுசைனி ராகத்தில் ராக தான பல்லவி நிகழ்ச்சி செய்துள்ளார். வயலின், மிருதங்கம், தம்புராவோடு நாகசுரத்தில் முழு ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி செய்துள்ளார். 1978இல் “பஞ்ச வண்ண ராக தாள மல்லாரி” என்னும் நிகழ்ச்சி மூலம் சுவாமி புறப்பாட்டுக்கு வாசிக்கும் மல்லாரியைப் புதுமையுடன் மேடைக் கச்சேரியாக வழங்கியுள்ளார். மல்லாரிக்குச் சாகித்தியம் அமைத்தும் வாசித்துள்ளார்.
1979ஆம் ஆண்டு மதுரையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் நாகசுர விரியுரையாளராகப் பணியேற்றார். வாக்கேயக்காரராகப் பல கீர்த்தனைகள், வர்ணங்கள், பல்லவிகள், மல்லாரிகள் இயற்றியுள்ள இவர் 1989ஆம் ஆண்டு “அபிராமி இசைவண்ண மாலை” என்னும் பெயரில் 25 புதுமை மிக்க வர்ணங்களை வெளியிட்டுள்ளார். இந்நூல் ஒரு நாகசுரக்காரரால் வெளியிடப்பெற்ற முதல் தமிழிசை நூல் என்னும் சிறப்பிற்குரியதாகும். இவருடைய ஆக்கங்களையும் சிறப்புகளையும் பற்றி ஆய்வுசெய்து பல்கலைக் கழகங்களில் ஆய்வேடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பட்டங்களும் சிறப்புகளும்
இலங்கையின் முன்னாள் அதிபர் ஸ்ரீமாவோ பண்டார நாயகா, கோவிந்தராஜனுக்கு ‘ஈழத்தின் இசையரசன்’ என்னும் பட்டம் வழங்கிக் கவுரவித்தார். ‘சங்கீதக் கலாநிதி’ திருவீழிமிழலை எஸ். சுப்பிரமணியம் ‘நாகசுர மணி’ என்னும் பட்டத்தை வழங்கிக் கவுரவித்தார்.
புனரபி ஜனனம் புனரபி மரணம்
விரிவுரையாளர் பணியிலிருந்து 1993ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற இவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் பிறந்த ஜூன் மாதம் 30ஆம் நாள் அன்றே இந்தப் பூவுலகிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்.
இசைப் பேரரசு கோவிந்தராஜனின் அரிய ரிஷபாஷ்டிர ராகமாலிகா வர்ணத்தை இசைக்கும் திருமெய்ஞானம் டி.என்.ஆர்.பவதாரிணி: https://youtu.be/gt0p_EpoZpc