Last Updated : 24 May, 2014 12:00 AM

 

Published : 24 May 2014 12:00 AM
Last Updated : 24 May 2014 12:00 AM

பாதல் சர்க்கார்: புரட்சிகரமான எளிமை

தமிழ்நாட்டிற்கு அப்பால் இருந்தவாறு வேற்று மொழி வாயிலாக இயங்கிய ஒருவர், கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாகத் தமிழ் நாடகக் கலை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றால் அவர் பாதல் சர்க்கார் என்கிற வங்க நாடகக்காரர்தான்.

ஜுலை 15-ம் தேதி 1925-ல் பிறந்த சுதீந்தர சர்க்கார் என்கிற இயற்பெயருடைய பாதல் சர்க்கார் முதலில் எழுதியவை அனைத்தும் நகைச்சுவை நாடகங்கள்தாம். நாடக ஆர்வம் வளரத்தொடங்கிய நிலையில் அவர் இடதுசாரி எண்ணங்கள் கொண்டிருந்ததால் அவரது நாடகங்கள் அவற்றைப் பிரதிபலிக்கத் தொடங்கின. ஆனால் அரசியல் கட்சிகள் முன்வைத்த இடதுசாரித்தனத்துடன் தன்னைப் பொருத்திக்கொள்ளவியலாதவராய் அவரது நாடகங்கள் வேறொரு பரிமாணத்தை எட்டின. நாடு சுதந்திரமடைந்து சில ஆண்டுகள் கழிந்த நிலையில் இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்பு பல கேள்விகளாக வெளிப்பட்டது. அதற்கு விடை காணும் பாதையாக வங்காளத்தில் பல இளைஞர்கள் நக்சல் இயக்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். குழப்பம் மிகுந்த அச்சூழலில் விமல், அமல். கமல், இந்திரஜித், மானசி ஆகிய குறிக்கோள்கள் ஏதுமற்ற இளம் கதாபாத்திரங்கள் எதிர்நோக்கும் போராட்டம் பாதல் சர்க்காரால் 1962-ல் ஒரு நாடகமாக சித்திரிக்கப்பட்டது. அந்தப் பாத்திரங்களில் ஒருவரான நாடகத்தினை எழுதும் இந்திரஜித்தால் மட்டுமே ஒரு தீர்வைக் காண முடிகிறது. பாதல் சர்க்காரின் அந்நாடகம் `ஏவம் இந்திரஜித்’. நவீன நாடகத்தை இந்தியாவில் தோற்றுவித்த நாடகங்களில் அது முக்கியமானதொரு இடத்தைப் பெற்றுள்ளது.

தேசம் தழுவிய நாடகங்கள்

இந்தியாவில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்த நாடகக் குழுவும் அதை மேடையேற்றத் தவறியதில்லை. தமிழில் அது கோ.ராஜாராமினால் `பிறகொரு இந்திரஜித், என்கிற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு உடனடியாக ஒரு வாசக தளத்தை தனக்கென உருவாக்கிக் கொண்டது. அதில் ஒரு புகழ் மிக்க வசனம் இடம்பெற்றுள்ளது அது.

`தீர்த்த தலங்கள் எதுவுமில்லை ஆனால் தீர்த்த யாத்திரை உண்டு.’ பாதல் சார்க்காரின் கதாபாத்திரத்திற்கு மட்டுமின்றி அவருக்கும் பொருந்திய வாசகம் அது.

பாக்கி இதிஹாஸ், பிரலாப், ஜதி அவுர் எக் பார், பக்லகோடா. இவை அக்காலத்தில் அவரிடமிருந்து வெளிவந்த பிற நாடகங்கள். ஏவம் இந்திரஜித் நாடகாசிரியராகப் புகழ் பெற்றிருந்த தருணத்தில் அவர் அந்த அடையாளத்தை முற்றிலும் உதறியவராக ஒரு கருத்தாக்கத்தை 1973 வாக்கில் உருவாக்கினார், அது மூன்றாம் அரங்கு நாடக அரங்கினைத் தோற்றுவித்தது.

மூன்றாம் அரங்கு என்றால் என்ன?

நமது புராதன தெருக்கூத்து, கதகளி போன்றவை முதலாம் அரங்கு என்றும் செவ்வக வடிவ நாடக மேடை இரண்டாம் அரங்கு என்றும் பாகுபாடு செய்த அவர் மூன்றாம் அரங்கினை மைக், செட், செவ்வக மேடை போன்றவற்றைப் புறக்கணித்த மனித அரங்காக உருவாக்கினார். இத்தகைய அரங்கிற்கு `ஏவம் இந்திரஜித்` ஏற்றதல்ல என்பதால் அதிலிருந்து அவர் கவனம் விலகியது .

சஹினா மகாட்டோ, போமா, ஸ்பார்டகஸ், மிச்சில். இவையெல்லாம் மூன்றாம் அரங்கிற்காக அவரால் எழுதப்பட்ட நாடகங்களில் பிரபலமானவை .`நாடக நடிகர்கள் குரல் வளத்தையே நடிப்பின் மூலதனமாகக் வரித்துக் கொள்வதன் மூலம் உடல் மொழி சாத்தியங்களை உதாசினப்படுத்துகிறார்கள். பாதல் சர்க்காரின் நாடகம் நடிகனின் உடலை மையப்படுத்தி சகமனிதர்களிடையேயான உறவை மேம்படுத்திற்று’ என்றார் விமர்சகர் சமிக் பந்தோபாத்யாயா. மூன்றாம் நாடக அரங்கு எவ்வாறு மனித அரங்காக மாறுகிறது என்பதை அது தரும் அனுபவத்தின் மூலம் உணரமுடியும். செவ்வக வடிவ மேடையை உதறிய பாதல் முற்ற மேடை மற்றும் திறந்த வெளி ஆகியவற்றை நாடகக் களன்களாக்கினார். முற்ற மேடை என்பது ஒரு சிறிய அறை. அதில் பார்வையாளர்களுக்கென்று குறுக்கும் நெடுக்குமாக தாழ்வான பெஞ்சுகள் போடப்பட்டு இருக்கும். நடிகர்கள் அவர்களைச் சுற்றி நின்று நடிப்பார்கள். சில சமயங்களில் நடிகர்கள் பார்வையாளர்களுக்குப் பின்னால் சென்றுவிடுவதும் உண்டு. அதற்காகப் பார்வையாளர்கள் இருக்கையிலிருந்து திரும்பி பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. தங்களுக்கு முன்னால் நடப்பது மட்டுமல்ல முதுகிற்குப் பின்னால் நடப்பதும் நாடகம்தான் என்பதை உய்த்துணர்வார்கள். இது செவ்வக வடிவ மேடையில் சாத்தியமில்லை. திறந்தவெளி அரங்கில் ஸ்பார்டகஸ் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. திரேசிய அடிமை ஸ்பார்டகஸ் கொல்லப்படுகிறான். ஆனால் அடிமைத் தனத்திற்கெதிரான எழுச்சி தொடர்ந்துகொண்டே இருக்கும். நடிகர்கள் அதற்கான ஒரு செய்தியைத் தங்களுக்குள் கிசுகிசுக்கிறார்கள். பின்னர் அவர்கள் பார்வையாளர்களின் காதோடு காதாக அந்தச் செய்தியை பரப்புகிறார்கள். `நான் மீண்டும் வருவேன். பல லட்சங்களில் வருவேன்’ என்கிற அச்செய்தி பார்வையாளர்கள் அனைவருக்கும் இவ்விதம் கொண்டு செல்லப்படுகிறது.

கட்டணம் கிடையாது

புதிய நாடக உத்திகள், சமூக மாற்றத்திற்கான கருப்பொருள்கள் ஆகியனவற்றுடன் நாடகக்காரர்கள்-பார்வையாளர்கள் ஆகியோரின் பரஸ்பர மனித உறவினை நிலை நாட்டுகிற வகையில் பொருளாதாரம் ஏற்படுத்தும் சிக்கல்களைக் களையவும் மூன்றாம் அரங்கு முயன்றது ஆரம்பத்தில் டிக்கெட் விலையை ஒரு ரூபாய் என்று நிர்ணயித்த பாதல் பின்னர் நாடகம் இலவசம் என்று அறிவித்தார். கட்டணம் வசூலிக்கப்படும்வரை பார்வையாளர் நாடகக்காரர் இடையேயான உறவு ஆரோக்கியமானதாக இராது என்பது அவர் வாதம். பணத்திற்குரிய சரக்கினைப் பார்வையாளர் வேண்டுவதும் அதைத் தரவேண்டிய கட்டாயத்தில் நாடகக்காரர் இருப்பதும் தவிர்க்க இயலாதது. முற்ற மேடையில் நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தபொழுது திடீரென மின்சாரம் போய்விட்டது. பார்வையாளர்களின் கைகளில் எரியும் மெழுகுவர்த்திகள் தரப்பட்டன. அவர்கள் அதை நாடகம் முடியும் வரை கைகளில் பிடித்திருந்தார்கள் கட்டணம் செலுத்தியிருந்தால் பார்வையாளர்கள் அச்செயலை சுமையாக அல்லவோ கருதியிருப்பார்கள்! நன்கொடைகள் மட்டும் ஏற்கப்பட்டன.

நாடகத்திற்குக் கட்டணம் வாங்குவதைத் தவிர்த்ததைப் போல நிறுவனங்களின் நிதி உதவியையும் ஏற்காதவர் பாதல் ‘பணப்பிரசினை என்பது எக்காலத்திலும் எங்களுக்கு இருந்ததில்லை’ என்றார் அவர். எத்தனை நாடகக்காரர்களால் இப்படி தைரியமாக முழங்க முடியும்?

நிதிகளை மறுத்தவர்

நிறுவன நிதியை மறுத்த பாதல் நிறுவனங்கள் தந்த விருதுகளை மட்டும் எவ்வாறு ஏற்றுக் கொண்டார்? “சங்கீத நாடக அகாதமி, பத்ம ஆகிய விருதுகளைப் பெற்றபொழுது நான் மூன்றாம் அரங்கு கோட்பாட்டினை உருவாக்கவில்லை. அப்பொழுது நாடகக்காரனான எனக்கு தத்துவ நோக்கு எதுவுமில்லை. காளிதாஸ் சம்மன் போன்ற விருதுகளை நான் ஏற்றது எனது குழுவினரின் அனுமதியின் பேரில்தான். இவ்விருதுகள் நமது நாடகங்களுக்கு ஒரு விளம்பரத்தைத் தரும் என்பதால் அதை ஏற்குமாறு அவர்கள் கூறினார்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் அவற்றின் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு” என்று தெரிவித்தார். பின்னாளில் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டபோது அதை நிராகரித்த வரலாறும் அவருடையது.

மே 13-ம் தேதி 2011-ல் தனது எண்பத்தி ஐந்தாம் வயதில் காலமானார். அவரது விருப்பப்படி அவரது உடல் மருத்துவ பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டது. இறுதிவரை நாடகக்காரராகவே வாழ்ந்தார். நாடகங்களை இயக்கவோ அதில் நடிக்கவோ உடல்நிலை காரணமாக இயலாத தனது கடைசி வருடங்களில் நாடகங்களை எழுதவும் அவற்றைப் படித்துக் காட்டுவதுமாக இருந்தார். முற்போக்கான நாடகக்காரர்கள் பலர் நைந்துபோன திரைப்பட வடிவங்களில் லஜ்ஜையின்றித் தங்களைப் பொருத்திக் கொண்டதை அவர் சாடினார்.

நாடகங்களை எழுதி இயக்கி நடித்ததுடன் மட்டுமில்லாது நாடகப்பட்டறைகளையும் அயர்வின்றி நடத்தியவர் பாதல். தமிழகத்திலும் அவர் பட்டறைகளை நடத்தியுள்ளார். அவர் 1980-ல் சென்னையில் சோழ மண்டலக் கலைஞர்கள் குடியிருப்பில் முதலாவதாக பட்டறை நடத்தியபொழுது அதில் பல தமிழ் நாடக ஆளுமைகள் கலந்துகொண்டு பயிற்சிபெற்றனர். அவரது நாடகங்கள் பலவும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மேடை எற்றப்பட்டுள்ளன. மூன்றாம் அரங்கினைப் பின்பற்றாதவர்களின் நாடகங்களிலும் அதன் தாக்கங்கள் இருப்பதை எவரும் மறுக்கவியலாது.

மக்களின் நிபந்தனையற்ற ஆதரவை மட்டுமே நம்பி இறுதிவரை நாடகங்களை நிகழ்த்தியவர் பாதல். பொருட்செலவே இல்லாத வகையில் நடிகர்களின் உழைப்பினை மட்டுமே கொண்டு நாடகங்களைத் தயாரித்ததால்தான் அவரால் இச்சாதனையை நிகழ்த்த முடிந்தது. நாடகங்களுக்கான வரவேற்பு அருகி விட்ட இன்றைய தமிழ்ச் சூழலில் பொருள் நஷ்டம் அடையாது நாடகம் நடத்த விழையும் கலைஞர்கள் முன், செலவினமற்ற எளிமையான அதே தருணம் படைப்புத் திறன் மிகுந்த ஒரு நாடக அரங்கிற்கான எல்லாக் கூறுகளையும் பாதல் சர்க்காரின் மூன்றாம் அரங்கு கடை விரித்துள்ளது.

- கட்டுரையாளர். திரைப்பட, ஆவணப்பட இயக்குநர், எழுத்தாளர் தொடர்புக்கு- amshankumar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x