

வீயெஸ்வி
டிசம்பர் இசை விழா வேகமாக நெருங்கிவரும் வேளையில் சென்னை சபாக்கள் விருதுகள் வழங்கி மகிழவும், மகிழ்விக்கவும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
விருது பெறுபவரை அறிவிப்பதில் வழக்கம்போல் மியூசிக் அகாடமி முந்திக் கொண் டது. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படு வதற்கு ஒரு வாரம் முன்னதாகவே பெயர்கள் கசியத் தொடங்கின. சங்கீத கலாநிதி விருதுக்கு இந்த முறை பலமாக அடிபட்ட பெயர், நெய்வேலி சந்தானகோபாலன்.
கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யாத குறையாக பலரும் நெய்வேலி யாரின் பெயரை முன்மொழிந்தார்கள். தொலை பேசி வழியே அவருக்கு அட்வான்ஸ் வாழ்த்து தெரிவித்தவர்களும் உண்டு. ஒரு சிலர் அவர் வீட்டுக்கே நேரில் சென்று சால்வை அணிவித்ததாகவும் தகவல்.
நெய்வேலிக்கு அடுத்ததாக, தவில் வித்வான் ஏகே.பழனிவேல் மீதும் சிலர் பந்தயம் கட்டினார்கள். “போன வருஷமே இவருக்குக் கிடைச்சிருக் கணும். தவறிடுச்சி. அதனால் இந்தமுறை ஏகேபி-க்குத்தான்...” என்பது அவர்களின் வாதம்.
கடைசியில் இன்ப அதிர்ச்சி கொடுத்தது மியூசிக் அகாடமி. 'சங்கீத கலாநிதி' விருதுக்கு பாடகி எஸ்.செளம்யா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட தாக அறிவிப்பும் வந்தது. வதந்திகளும் அடங் கின!
ஹரிகதை விற்பன்னர் ஒருவருக்கு 'நாதபிரம்மம்' விருது கொடுக்க வேண்டும் என்பது நாரத கான சபாவின் விருப்பமாக இருந்திருக்கிறது. அலசி, ஆராய சபாவின் கமிட்டி கூடியது. 'ஹரிகதை நிபுணர் என்பவர் இசைக் கலைஞரோ, பரதக் கலைஞரோ கிடையாது. எனவே, அவருக்கு வேறு விருது ஏதாவது கொடுக்கலாமோ?' என்று யோசனை செய்திருக்கிறார்கள். ''இல்லை... ஹரி கதையிலேயே இசை, நடனம், நாடகம் என்று எல்லாம் உள்ளடங்கியதுதானே. நாத பிரம்மம் பொருத்தமாகவே இருக்கும்'’ என்று முடிவுக்கு வர, கல்யாணபுரம் ஆராவமுதாச்சாரியார் விருதுக்கு உரியவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
மிகவும் பழமைமிக்க பார்த்தசாரதி சுவாமி சபாவுக்கு இது 119-வது வருடம். வரும் ஜனவரியில் 120-ல் பாதம் பதிக்கவுள்ளது. 120-ம் வருடத்தை 'புருஷா ஆயுசு' என்று குறிப்பிடுவது உண்டாம். எனவே, முதுபெரும் கலைஞர்கள் மூவருக்கு சபாவின் 'சங்கீத கலா சாரதி' விருது வழங்க முடிவெடுத்திருக்கிறார்கள். டி.என்.கிருஷ்ணன், குருவாயூர் துரை, டி.வி.கோபாலகிருஷ்ணன் ஆகிய மூன்று ஜாம்ப வான்கள் விருது பெற்றுக்கொள்ள சம்மதம் தெரி வித்து விட்டார்கள். அவார்டு தகவல் சொல்லப் பட்டபோது வயது எண்பதைக் கடந்துவிட்ட மூவருமே அமெரிக்காவில் இருந்தார்களாம்!
மிருதங்க வித்வான் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொஸைட்டியின் 'சங்கீத கலா சிகாமணி' விருது பெறுகிறார். கடந்த வருடமே இந்தப் பட்டத்துக்காகத் தேர்வாகி, கடைசியில் சிலபல காரணங்களால் ரத்து செய்யப்பட்டு, விஜயசிவா விருதைப் பெற்றார். இந்த முறை சபாவினர் மறுபடியும் ராஜாராவை அணுகியிருக்கிறார்கள். கடந்த வருட கசப்பான அனுபவத்தை மனதில் கொண்டு, வந்த விருதை நிராகரிக்காமல் பெரிய மனதுடன் சம்மதம் தெரிவித்திருக்கிறார் முஷ்ணம்.
இன்னொரு மிருதங்க வித்வான் மன்னார்குடி ஈஸ்வரனுக்கு இரண்டு விருதுகள்!
மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பின் 'சங்கீத கலா நிபுணா' விருதும், முத்ராவின் Award of Excellence விருதும் பெறுகிறார். இவர் சபா செயலர் முத்ரா பாஸ்கரின் மிருதங்க குருவும்கூட. ஈஸ்வரனுக்கு எங்கேயும் எப்போதும் ஸ்பெஷல் மரியாதைதானே!
மற்ற சபாக்களின் விருதுக்கானவர்களின் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.