Last Updated : 24 May, 2014 11:11 AM

 

Published : 24 May 2014 11:11 AM
Last Updated : 24 May 2014 11:11 AM

துயரிலும் தொடரும் அன்பு

சிறுகதைகளை நாடகமாக்கும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது. நாடகமாக எழுதப்பட்ட பிரதிகளைவிட இலக்கியத்தரமான கதைகள் நம்மிடையே அதிகமாக இருப்பதால் நாடகத்துக்காக அவைகளை நாடுவது என்பது இயல்பானதாக இருக்கிறது. நம்முடைய பண்டைய அரங்கம் காப்பியங்களிலிருந்து தானே பிரதிகளை எடுத்துக்கொண்டது. நாடகம் என்கிற நிகழ்கலை நுட்பங்கள் கைவரப் பெற்றோர் எந்தப் பிரதியையும் நாடமாக்க இயலும். எழுதப்பட்ட ஒரு பிரதியிலிருந்து நாடகம் எப்போதும் தனக்காக ஒரு வடிவத்தைத் தேர்வு செய்துகொள்கிறது. இலக்கியம் வார்த்தைகளை சார்ந்திருப்பது போல நாடகம் காட்சிப் படிமங்களை சார்ந்திருக்கிறது. அது வார்த்தைகளின் பலத்தில் இயங்காமல் ஒலி, அசைவுகள், நிசப்தம் ஆகிய கூறுகளை கட்டமைத்துக் கொள்கிறது.

புதுமைப்பித்தனின் ‘செல்லம்மாள்’ சிறுகதை 1940-களில் எழுதப்பட்டது. மானுடத் துயர் பற்றிய ஆழ்ந்த உணர்வுகள் கொண்ட ஒரு கதை. கணவன், மனைவி கொண்ட ஒரு வறிய குடும்பச் சூழல் மூலமாக அது சொல்லப்படுகிறது. கணவன் பிரமநாயகம் பிள்ளை ஒரு ஜவுளிக் கடையில் குறைந்த சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்; மனைவி உடல் தளர்வுற்ற ஒரு நோயாளி. நோய் தினமும் அவளை வாட்டிக்கொண்டிருக்கிறது. ஒருவழியாகச் சமாளித்துக் கொண்டு தினசரிக் கடன்களைக் கழித்துக்கொண்டு அவர்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். பரஸ்பர அன்பு, உதவி, புரிதல் இவற்றின் மூலமாக இந்த நிலையைக் கடக்க முயல்கிறார்கள்.

கணவர் பிரமநாயகம் பிள்ளை மனைவி செல்லம்மாவுக்கு வேண்டிய உதவிகள் செய்து எல்லாம் சீக்கிரம் சரியாகிவிடும் என்று நம்ப வைக்க முயல்கிறார். செல்லம்மாளும் கணவர் மீதுள்ள அன்பினால் முடிந்த அளவு சமையல் வேலைகள் செய்து நோயைச் சமாளிக்க முயல்கிறாள். ஆனால் வாழ்வின் யதார்த்தம் அவர்கள் வசத்தை மீறியதாக இருக்கிறது. செல்லம்மாள் நோய்க்கு பலியாகிறாள். பிரமநாயகம் பிள்ளை தப்ப முடியாத இந்த நிலையை உணர்ந்து கனத்த மனத்துடன் அவளுக்கு ஈமக்கிரியைகள் செய்கிறார்.

மனதை உருக்கும் இக்கதை நாடமாக்கலில் அதன் அரிய கணங்களை மீட்டுத்தர முயல்கிறது. கணவரும், மனைவியும் தங்கள் அன்றாடச் செயல்பாடுகள் மூலமாக உயிரோட்டமான சித்திரத்தை அளிக்கிறார்கள். சூழலின் கனம் அவர்களை ஆட்கொண்டாலும், ஏதோ ஒரு எந்திர கதியில் நிகழ்வுகள் நடப்பது போன்ற தோற்றம் உள்ளது. ஒரே காட்சியை மீண்டும் மீண்டும் பார்க்கும்் உணர்வை நீக்கத் தேவையான இசையை பயன்படுத்தியிருக்க முடியும். அங்கங்கு சற்று நிசப்தம்கூட இதற்கு உதவியிருக்கும். ஒரு கவித்துவச் சோகத்தை வெற்று யதார்த்தம் முழுமையாகப் பிரதிபலிக்க முடியாது.

கணவன், மனைவி மற்றும் கதை சொல்லியாக நடித்துள்ள எல்லாரும் தங்கள் பங்கைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். கணவனிடம் சற்று முதுமை கூடியிருக்கலாம். ஆனால் இந்தப் பிரச்சனைகளையம் தாண்டி புதுமைப்பித்தன் கதைக்கு நியாயம் செய்யும் அணுகுமுறை இந்த நாடகப் படைப்புக்கு மதிப்பை அளிக்கிறது. சென்னை ஸ்பேசஸ் அரங்கில் மே 10-ம் தேதி நடைபெற்ற இந்த நாடகத்தை கருணா பிரசாத் இயக்கியிருக்கிறார். அவர் ஏற்கனவே சூடாமணியின் ‘நாலாவது ஆசிரமம்’ கதையை சிறப்பான தனிநபர் நிகழ்வாக்கியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x