பழைய பிரதி, புதிய நடிகர்கள்

பழைய பிரதி, புதிய நடிகர்கள்
Updated on
1 min read

தமிழின் சிறந்த நவீன நாடகாசிரியர்களில் ஒருவரான ந.முத்துசாமி, முப்பது ஆண்டுகளுக்கு முன் எழுதி, நிகழ்த்திய உந்திச்சுழி நாடகம் மறுபடியும் சென்னையில் உள்ள ஸ்பேசஸ் அரங்கில் 23 மற்றும் 24-ம் தேதிகளில் நிகழ்த்தப்பட்டது. இந்த நாடகத்தை ஹார்ட்மேன் டி சௌசா இயக்கியிருந்தார்.

கருப்பையில் குழந்தையைச் சுமந்து பிரசவிப்பதால் தானே பெண் இந்த சமூகத்தில் கூடுதல் பொறுப்புகளையும், ஒடுக்குமுறைகளையும் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. அந்த நிலை மாற, பெண்கள் பறவைகளைப் போல முட்டையிடும் வசதி வருகிறது. இந்தச் சூழலில் பெண்ணின் சுமை குறைகிறதா? பெண்ணின் மேல் ஆண்வயப்பட்ட சமூகத்தின் கற்பிதங்கள் விலகுகிறதா என்பதை அலசும் கதை இது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நாடகப்பிரதியின் உள்ள டக்கமும், வசனங்களும் இப்போதைய காலகட்டத்துக்கும் அதிர்ச்சி கரமாகவே இருக்கிறது. ஆனாலும் ஆண், பெண் இருவருக்கும் இடையிலான முரண்பாடு களும், சிக்கல்களும் மேலோட்டமாகவே இந்த நாடகத்தில் பேசப்படுகின்றன.

ஒரு மணிநேரத்துக்கும் குறைவான இந்நாடகத்தில் தாயாக நடித்த இளையராஜாவும், மகனாக நடித்த பாஸ்கருடைய நடிப்பும் குறிப்பிட வேண்டியது. மகளாக நடித்திருக்கும் ரஜிதாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

புத்தக அறிமுக நிகழ்வு

ஆங்கிலேயர் அரசாட்சியில், தென் தமிழகத்தில் வாழும் பிரமலைக் கள்ளர் இனத்தைச் சேர்ந்த மக்கள்மீது குற்றப் பரம்பரைச் சட்டத்தை ஏவி பெரும் ஒடுக்குமுறைகள் நடத்தப்பட்டன. அந்த ஒடுக்குமுறையை எதிர்த்த மக்கள் மீது நடத்தப்பட்டதுதான் பெருங்காம நல்லூரில் நடந்த துப்பாக்கிச்சூடு. இது தொடர்பான ஆவணங்களைத் தொகுத்து ‘குற்றப்பரம்பரை அரசியல் - பெருங்காமநல்லூரை முன்வைத்து’ என்ற நூல் இன்று சென்னை இக்சா அரங்கத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு சிறப்புரையாற்றுகிறார். இக்கூட்டத்தை மீட்சி இலக்கிய இயக்கம் நடத்துகிறது. தொடர்புக்கு: 9842265884

புத்தகப் பேச்சு:

தமிழ்ப் புத்தக நண்பர்கள் அமைப்பு சார்பில் வரும் 29ஆம் தேதி, மாலை 6 மணிக்கு மூன்றாவது புத்தக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் சோ.தர்மன் எழுதிய ‘கூகை’ நூல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அகிலன் கண்ணன் நூலை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறார்.

புத்தகப் பிரியர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் புதியத் தமிழ் புத்தகங்களையும், சிந்தனைகளையும் அறிமுகம் செய்யும் வகையில் தமிழ்ப் புத்தக நண்பர்கள் அமைப்பு ஆர்.டி.சாரியால் தொடங்கப்பட்டுள்ளது. ராமு சொற்பொழிவு குடும்ப அறக்கட்டளை ஆதரவுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, தமிழ்ப் புத்தக வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கும் முயற்சியை முன்னெடுத்து வருகிறது.

விலாசம் : டேக் சென்டர், புதிய எண். 69, டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை,

சென்னை. தொலைபேசி : 044-24672741

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in