Last Updated : 10 Jan, 2014 04:22 PM

 

Published : 10 Jan 2014 04:22 PM
Last Updated : 10 Jan 2014 04:22 PM

சபாஷ் மழையில் ஸ்ரீராம் பார்த்தசாரதி

தியாகராஜ சுவாமிகளின் ஜன்ம நட்சத்திரம் பூசம். பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீரங்காச்சாரியின் இல்லத்தில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தன்று கச்சேரி நடக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. உபவேதம் என்ற பெயரில் இசை அர்ப்பண நிகழ்ச்சியாக இந்தத் தொடர் கச்சேரி சென்னை மேற்கு மாம்பலத்தில் நடந்துவருகிறது. இத்தொடரில் வரும் எல்லாக் கச்சேரிகளிலும் தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகளே இசைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் (விஜய) ஒன்பதாம் மாதக் கச்சேரியாக இளம் கலைஞர் ஸ்ரீராம் பார்த்தசாரதியின் கச்சேரி மிகச் சிறப்பாக இருந்தது. முதலில் இவர் பாடிய ‘ஸ்மரணேசுகம்’ என்ற ஜனரஞ்சனி ராகக் கீர்த்தனை கன கம்பீரமாக வெளிப்பட்டது. துல்லியமான சங்கதிகளுடன் அமைந்த இந்தக் கீர்த்தனைக்குப் பின் வந்தது வசந்த பைரவி ராகக் கீர்த்தனையான ‘நீ தயராதா’.

ஸ்ரீராம் பார்த்தசாரதியின் கற்பனா சஞ்சாரங்களில் உலா வந்த தர்பார் ராகக் கீர்த்தனை ‘முந்துக வேணுகா’ ரசிகர்களுக்கு இன்ப சஞ்சாரமாய் இருந்தது. இந்த ராகத்தை அவர் கையாண்ட விதத்தில் அதன் புனிதம் சிறப்புற வெளிப்பட்டது.

முதல் இரண்டு பாடல்களிலேயே தேர்ந்த சங்கீத வித்வான்களையும் ரசிகர்களையும் கட்டிப் போட்டுவிட்ட ஸ்ரீராம், அடுத்து ஹம்சநாதத்தில் அமைந்த பந்துரீதியைத் தொடங்கினார். கச்சேரியில் வித்வானுக்கும் ரசிகர்களுக்குமான பிணைப்பு, ரசிகர்களிடமிருந்து, தன்னிச்சையாக வருகின்ற `சபாஷ்’ என்ற பாராட்டுச் சொல்லில்தான் அமைந்திருக்கிறது. இவரது கச்சேரியில் இந்த சபாஷ் பலமுறை எழுந்ததைக் காண முடிந்தது.

பேகடா ராக நாதோபாசனாவில் நிரவலை அளித்த விதம் அட்டகாசம். தனக்கு எது இயல்பாக வருகிறதோ, எது தன் மனதுக்கு உவப்ப்பானதாக இருக்கிறதோ அதையே ஸ்ரீராம் பாடுகிறார் என்பதை அந்த நிரவல் உணர்த்தியது.

இந்த ராகத்தைக் கையாளும்போது, மரபின் எல்லைக்குள் நின்று, முன்னோடிகளின் சாயலையும் கைக்கொண்டபோதிலும், தனக்கே உரிய விதத்தில் பரிசோதனைகளை மேற்கொண்ட விதம் மிகவும் அழகு. தங்குதடையற்ற ஸ்வரங்களின் பிரவாகம் ரசிகர்களைக் கிறங்க அடித்தது. வயலின் வாசித்த ஆனையாம்பட்டி வெங்கட் ஹம்சானந்தியில் அற்புதமான சஞ்சாரம் நிகழ்த்திவிட்டு பேகடா ராகத்தை முழுமையாக அணைத்துச் சென்ற விதம் மிகுந்த பாராட்டுக்கு உரியது.

நிகழ்ச்சியின் இறுதியாக, காப்பி ராக கீர்த்தனையில் அமைந்த ‘பாஹி கல்யாண ராமா’ பாடியபோது, ரசிகர்களும் கூடவே ராம நாம மந்திரத்தைச் சொன்னது கச்சேரியின் முத்தாய்ப்பாக இருந்தது. ஸ்ரீராம் பார்த்தசாரதி சுருதி சுத்தமான குரல் வளம் பெற்றவராகவும், கர்நாடக சங்கீதத்தில் சிறந்த திறமை பெற்ற இளைஞராகவும் இருப்பது ஒரு வரப்பிரசாதம். இவரது லய ஞானமும் கூப்பிட்டவுடன் தவறாமல் ஓடி வரும் கற்பனா சுரங்களும் அதி அற்புதம்.

பிரபல வித்வான் செதலபதி பாலசுப்பிரமணியம் மகன் பி.சிவராமன் மிருதங்கம், நந்திகேஸ்வரர் வாசிப்பாய் இருந்தது. கஞ்சிரா ஸ்ரீசுந்தரகுமார். தற்போது பல பிரபல சங்கீத வித்வான்களுக்கு வாசித்து வருவதே அவரது திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. அவரது வாசிப்பில் இருந்த வேகமும் அழகும்தான் அவரை முன்னணி வித்வான்களுக்கு வாசிக்கும் தகுதியைக் கொடுத்திருக்கிறது என்று ரசிகர் ஒருவர் கூறியது முற்றிலும் உண்மை.

உபவேதம் என்ற இசை முயற்சியை கருத்தை உருவாக்கிய பி.பி. ஸ்ரீரங்காச்சாரி ஒரு பாடகர் மட்டுமல்லாது சாகித்தியகர்த்தாவாகவும் சங்கீத குருவாகவும் விளங்கிவருகிறார். பக்தி மூலம் இசையும், இசை மூலம் பக்தியும் பரப்ப இந்த நிகழ்ச்சியை அவர் தொடர்ந்து நடத்திவருகிறார். மிக எளிமையாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ரசிகர்களை பக்தர்களாகவும், பக்தர்களை ரசிகர்களாகவும் மாற்றிவிட்டது.

காற்றில் வந்த பேகடாவும், கையில் கிடைத்த சுவையான வெண்பொங்கலுடன் கூடிய சுடச்சுட கேசரியும் அடுத்த பூச நட்சத்திரம் என்று வரும் என்று ஏங்க வைத்தது.

தமிழில்: விஷ்ணு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x