தமிழிசையும் சஞ்சய் சுப்பிரமணியமும்

தமிழிசையும் சஞ்சய் சுப்பிரமணியமும்
Updated on
2 min read

அருணகிரிநாதர், ஆண்டாள், அப்பர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் என தமிழுக்கு இசைத் தொண்டாற்றியவர்கள் பலர். இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும்.

பொதுவாகவே சஞ்சய் சுப்பிரமணியத்தின் கச்சேரிகளில் நிறைய தமிழ்ப் பாடல்கள் இடம் பெறும். பாபநாசம் சிவனின் பாடல்கள் மட்டும் என்றில்லாமல் தமிழ் மூவராகிய முத்துத் தாண்டவர், அருணாசல கவி, மாரிமுத்தா பிள்ளை ஆகியோரின் சாஹித்யங்களையும், நீலகண்ட சிவன், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, கோபாலகிருஷ்ண பாரதி என்று நம்மிடையே சிறந்து விளங்கிய பலரின் பாடல்களையும் சரளமாகப் பாடி விடுவார். பாபநாசம் சிவன் என்று வந்தால் "காக்க உனக்கிரக்கம் இல்லையா" (கரஹரப்ரியா) போன்றுள்ள அதிகம் புழக்கத்தில் இல்லாத பாடல்களை நிச்சயம் பாடுவார்.

விருத்தம் பாடுவதில் வல்லவர்

கொஞ்சும் சலங்கையில் வரும் "ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்" என்பது வள்ளலாரின் பாடல். இந்தச் செய்யுளை ஒரு விருத்தமாக அளித்து, பின் அதனைத் தொடர்ந்து அதனையே ஒரு முழுப்பாட்டாகவும் ஒரு முறை இவர் பாடியது குறிப்பிடத்தக்கது. விருத்தம் பாடும்பொழுது ஒவ்வொரு வரியையும் அழகாகப் பொருள் விளங்கும் வகையில் பிரித்துப் பாடுவதால் சொற்களின் அர்த்தம் நன்றாகப் புரிந்து விடுகிறது. இங்கெல்லாம் செதலபதி பாலசுப்ரமணியம் அவர்களின் சாயல் தென்படும்.

தமிழுக்கே உண்டான குறில், நெடில் பிரயோகங்களை நன்றாகக் கற்று, அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்துவது இவரது தனித்திறமை. இவற்றையெல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடிய கச்சேரிகளில் லாவகத்துடன் பாடி, இயற்றியவருக்கும் பாடியவருக்கும் பெருமை சேர்த்தவர். மேலும் இவர் சங்கீத விற்பன்னர் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இவ்விருத்தங்களை ராகமாலிகைகளாக வழங்கிடுவார். ராக ஊற்றுகள் பெருக்கெடுத்து ஓடும். நமது மனம் கள்வெறி கொள்ளும்.

பாரதி என்றால்

பாரதி என்றவுடன் நம் நினைவிற்கு வருவது முறுக்கு மீசைக்கார பாரதிதான். சுப்பிரமண்ய பாரதி தவிர வேறு பல பாரதிகள் நம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள் – அவர்கள் மழவை சிதம்பர பாரதி, கோபாலகிருஷ்ண பாரதி மற்றும் சுத்தானந்த பாரதி ஆகியோர் பாடக்கூடிய பாடல்கள் பல இயற்றியுள்ளார்கள்.

சிலவற்றிற்கு இன்ன ராகத்தில் பாட வேண்டும், என்று சுப்பிரமணிய பாரதியின் நிர்ணயத்தையும் இவர்கள் தங்களது சில பாடல்களுக்குக் கொடுத்திருக்கலாம். மற்ற பாரதிகளின் பாடல்களை தேடிப் பிடித்து அதை மார்கழி மஹோத்ஸவத்தில் அளித்து, மக்களின் மனதில் குடிகொண்டவர் சஞ்சய். சொல்லிக் கொள்ளாமலேயே தமிழுக்குத் தொண்டாற்றிக் கொண்டிருப்பவர் இவர்.

டி வி நிகழ்ச்சிகள்

மார்கழி மகோத்ஸவம் (ஜெயா டி வி) நிகழ்ச்சிகளுக்கு சஞ்சய் எடுத்துக்கொண்ட கருத்துகளும் (தீம்களும்) தமிழ்ப் பாடலாசிரியர்கள் சார்ந்தவையாகவே இருந்திருக்கின்றன. ஒரு வருடம் தமிழ் மூவரென்றால், மற்றொரு வருடம் தண்டபாணி தேசிகர். அதற்கடுத்த வருடம் பாரதி மூவர், பின்பு அரிகேச நல்லூர் முத்தையா பாகவதரின் தமிழ்ப் பாடல்கள்.

தண்டபாணி தேசிகர் இசையமைத்த "துன்பம் நேர்கையில்" என்ற பாரதிதாசனின் பாடலைப் பற்றிய ஒரு வியக்கத்தக்க விஷயத்தையும் கூறிச் சென்றார். முதலில் வேறொரு ராகத்தில் இந்தப் பாடலை மெட்டமைத்து விட்டாராம் தேசிகர். ஆனால், அதில் அவருக்குத் திருப்தி இல்லை. நீண்ட நாள் இடைவெளி கொடுத்து பின்னர் இப்பொழுது பிரபலமாக உள்ள தேஷ் ராகத்தில் இதற்கு மெட்டமைத்திருக்கிறார் என்றார் சஞசய்.

ஓஹோ காலமே

இந்தப் பாடலைக் கேட்டி ருக்கிறீர்களா? ஓஹோ காலமே என்பது வேதநாயகம் பிள்ளையின் பாடல். இது காலத்தின் மகிமையை எடுத்துரைக்கும், காலத்தை எள்ளி நகையாடும். புலவர், காலத்தின் இந்திர ஜாலத்தைக் கண்டு அதிர்ந்து போவார், காலமானது பூனையாகவும் புலியாகவும் அந்தந்த நேரத்திற்குத் தக்கபடி பணிபுரியும், காலம் தேக்கமற்றது, உறக்கமற்றது என்பார். இந்தப் பாடல் பாரதியின் "அட காலா" என்றதைப் போன்ற போக்கைக் கொண்டது என்று சொல்லலாம். இதைப் பாடிப் பழக்கத்தில்கொண்டு வந்த சஞ்சய்க்கு சென்ற இடத்தில் எல்லாம் இதைப் பாடச் சொல்லி "சிட்" வரும். தவறாமல் பாடவும் செய்வார்.

தத்துவமும் இசையும்

இது தவிர பல விதமான சித்தர் பாடல்களையும் பாடுவார். அவற்றில் ஒன்றின் கருத்து பின்வருமாறு அமையும்: நம்மால் பல காரியங்களைச் செய்ய இயலும்…--- "ஜலம் மேல் நடக்கலாம், கனல் மேல் இருக்கலாம்….." என்றெல்லாம் பாடிக்கொண்டு வரும் தாயுமானப் புலவர் "சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது" என்ற அவரது தத்துவ போதனையோடு முடியும் சஞ்சயின் விருத்த விருந்தின் மூலம் தத்துவம் இசை வடிவம் எடுப்பதை உணரலாம்.

ஆவல் ஏற்பட்டால் கேட்டுச் சுவையுங்கள். மார்கழி இசை விழா விரைவில் தொடங்க உள்ளது…

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in