

செம்மங்குடி ஸ்ரீநிவா ஸய்யரின் வழிவந்தவர் வித்வான் பி.எஸ். நாராயணசாமி. இவரது முக்கியச் சீடரான ஏ.எஸ். முரளி இந்த சீசனில் ஒரே ஒரு கச்சேரிதான் செய்தார்.
மயிலை தியாகராஜ வித்வத் சமாஜம். ரம்மியமான, அமைதியான, ஆடம்பரமே இல்லாத சூழல். ‘கிரிராஜஸுதா’ என்ற தியாகராஜ கிருதியுடன் ஆரம்பித்த கச்சேரி, எடுத்த எடுப்பிலேயே கேட்பவரின் மனதைக் கட்டிப் போட்டது.
முதல் பாடலுக்குப் பின் ஓர் அறிவிப்பைச் செய்தார். அகர வரிசையில் தியாகராஜரின் பாடல்களைப் பாடப்போவதாகச் சொன்னார். அடாணாவிலிருக்கும் ‘அனுபம குணாம்புதி’யைத் தொடர்ந்து சாருகேசியில் நுட்பமான சங்கதிகளைக் கொண்ட ஆலாபனை பொழிந்தது. அடுத்து ‘ஆடமோடிகலதே ராமய்யா’. அடுத்ததாக அதிகம் கேட்கப்படாத ‘இந்தனுசு வர்ணிம்ப தரமா’. ராகம் குண்டக்ரியா, 15ஆவது மேளமாகிய மாயாமாளவ கௌளையில் ஜன்யம்.
அடுத்தபடியாக கல்யாணி ராகத்தை வெகுவாக விவரித்துப் பாடிய இவர், ‘ஈசபாஹிமாம்’ என்ற கிருதியை அளித்தார். தொடர்ந்து எ எனும் எழுத்தில் தொடங்கும் மூன்று கீர்த்தனைகள் (‘எட்லா தொரிகிதிவோ’, ‘எடுலகாபாடுதுவோ’, ‘எவரிமாட வின்னாவோ’). முதல் இரண்டும் வித்வான்களால் அதிகம் பாடப்படாத கிருதிகள்.
இவை முறையே வசந்தா ராகத்திலும் ஆஹிரியிலும் தியாகராஜரால் பாடப்பட்டிருந்தன. மூன்றாவதாக வந்த காம்போதியின் ராக அமைப்பு மிகுந்த பாராட்டுதல்களைப் பெற்றது. நெளிவு சுளிவுகள் ஏராளம். நெஞ்சை அள்ளும் சங்கதிகளுக்குப் பஞ்சமேயில்லை. நிரவலுக்கு எடுத்துக்கொண்ட வரி ‘பக்த பராதீனுடனுசு (பரம)’. இதில் அர்த்த பாவம் மேலோங்க பாடகர் நின்று நிதானித்துப் பாடியது மகா வித்வான் கே.வி. நாராயணசாமியை நினைவுக்குக் கொண்டுவந்தது.
ஏ என்ற எழுத்துடன் கச்சேரியை நிறைவுக்குக் கொண்டுவரப்போவதாகக் கூறிய முரளி, தியாகராஜரின் ‘ஏதி நீ பாஹு பல பராக்ரம பாடினார். ராகம் காபி. பிறகு ஆஞ்சநேயரைப் போற்றிப் பாடும் ‘பாஹி ராம தூத ஜகத் ப்ராண குமாரா’ எனும் பாடலைப் பாடிக் கச்சேரியை முறையாக முடித்தார்.
சேர்த்தலை சிவகுமார் வயலின், ஏ.எஸ். ரங்கநாதன் மிருதங்கம், சாய் சுப்பிரமணியம் முகர்சிங். வயலின் கலைஞர் மிகுந்த கற்பனை வளம் மிக்கவராகத் தென்பட்டார். ராக ஆலாபனைகள் தனித்துவத்துடன் விளங்கின. தாள வாத்தியம் வாசித்தவர்கள் லய சுத்தத்துடன் வாசித்துச் சிறப்பித்தனர். உடன் பாடியது லக்ஷ்மிஸ்ரீ.
நிறைவளித்த கச்சேரிகளின் பட்டியலில் இதற்கு இடமுண்டு.