Published : 29 Mar 2014 03:12 PM
Last Updated : 29 Mar 2014 03:12 PM

கண்காட்சி: கல்லில் எதிரொலிக்கும் வரலாறு

இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில் `Brihadisvara: The Monument and the Living Tradition,’ என்ற பெயரிலான கண்காட்சி மார்ச் 20 ஆம் தேதி, சென்னை மைலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் தொடங்கியது. முன்னாள் தேர்தல் தலைமை ஆணையர் என். கோபாலஸ்வாமி மற்றும் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அவ்வை. நடராஜன் ஆகியோர் திறந்துவைத்தனர்.

கண்காட்சியின் தொடக்க நாள் அன்று, பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கரண நடனச் சிற்பங்கள் பற்றி பத்மா சுப்ரமணியம் உரையாற்றினார். அடுத்துப் பேசிய தொல்லியல் அறிஞர் டாக்டர் நாகசாமி, பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகளின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார். முதலாம் ராஜ ராஜ சோழன், ராணிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அளித்த கொடைகளைக் குறித்து எடுத்துரைத்தார். டாக்டர் சித்ரா மாதவன், முதலாம் ராஜ ராஜ சோழன் காலத்தில் கோவிலுக்கு வழங்கப்பட்ட வெண்கலச் சிலைகள் குறித்துப் பேசினார். சோழர் ஓவியங்கள் குறித்து ஓவியர் சந்ரு உரையாற்றினார்.

இந்தக் கண்காட்சியில் பிரகதீஸ்வரர் கோவிலில் இடம்பெற்ற சிவனின் பல்வேறு அவதாரச் சிலைகள் புகைப்படங்களாக விளக்கங்களோடு வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுகளும் அருமையாக இக்கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழ் ஆவணங்கள். ஒரு பெரிய கல்வெட்டில் தமிழகத்தில் உள்ள பிரபல கோவில்களில் இருந்து 400 நடனப் பெண்மணிகளும், 250 இசைக்கலைஞர்களும் கோவில் கட்டுமானத்தை முன்னிட்டு வரவழைக்கப்பட்டதாகக் கூறுகிறது.

இந்தக் கண்காட்சி மார்ச் 31 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x