

இசைக்கருவியை உருவாக்குவதில் சிறப்பாகப் பங்களித்ததற்காக 2013ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி விருது பெற்றிருக்கிறார் மீனாட்சி. சிவகங்கை மாவட்டத்தில் பானை வனைவதற்குப் பேர்போன மானாமதுரையைச் சேர்ந்தவர் மீனாட்சி. தென்னகத்தின் மிகத்தொன்மையான இசைக்கருவியைத்தான் இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்துவருகிறார்.
“கடம் செய்வது சாதாரண செயல் இல்லை. ஒவ்வொரு கடம் உருவாவதும் பிரசவம் போலத்தான், வலியும் மகிழ்வும் நிறைந்தது” என்கிறார் மீனாட்சி. கடம் செய்யும் குடும்பத்தில் பிறந்ததால் 15 வயதிலேயே இவரது கைகளுக்குப் பக்குவம் பழகிவிட்டது. களிமண்ணின் குழைவும் பானையின் நெளிவும் எத்தனைக்கெத்தனை ஒத்துப்போகிறதோ அப்படித்தான் அதில் இருந்து வெளிவரும் சுருதியும் லயமும் இருக்கும் என்பது மீனாட்சியின் கணிப்பு. திருமணத்துக்குப் பிறகும் கடம் செய்வதைத் தொடர்ந்தவர், இந்த அறுபத்தியோறு வயதிலும் அதையே தொடர்கிறார்.
2005ஆம் ஆண்டு இவருடைய கணவர் இறந்த பிறகு வாழ்க்கையை வழிநடத்திச் செல்வதில் நிறைய சிக்கல்கள் இருப்பதாகச் சொல்கிறார். இவர்கள் வேகவைத்து எடுக்கும் எல்லாப் பானைகளுமே கடமாக உருவெடுப்பதில்லை. நூறு பானைகள் செய்தால் அதில் 40 பானைகள் மட்டுமே கடமாக வெளிப்படும். அவற்றுள்ளும் சில மட்டுமே வித்வான்களால் தேர்ந்தெடுக்கப்படும்.
கடம் செய்யும் கலையை அடுத்தவர்களுக்குச் சொல்லித்தர விருப்பம் தெரிவிக்கிறார் மீனாட்சி. ஆனால் அதைக் கற்கும் எண்ணம் யாரிடமும் இல்லை என்பதையும் வேதனையுடன் பதிவுசெய்கிறார். தற்போது இவருடைய மகன் ரமேஷ் மட்டுமே, மீனாட்சியுடன் சேர்ந்து கடம் உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஐந்தாவது தலைமுறையாக பத்தாம் வகுப்பு படிக்கும் மீனாட்சியின் பேரன் ஹரிஹரனும் கடம் செய்வதின் நுணுக்கங்களைப் பயின்று வருகிறான்.
“இது என்ன விருது, எதுக்காகத் தர்றாங்கன்னு எதுவுமே எனக்குத் தெரியலை. இந்த விருதுக்காக என்னை ஏன் தேர்ந்தெடுத்தாங்கன்னும் புரியலை. விருது வாங்கும் அளவுக்கு நான் எதையுமே சாதிக்கவும் இல்லை” என்று சொல்லும் மீனாட்சி, முதுமை தன் பணிகளைப் பாதிக்கிறது என்று குறிப்பிடுகிறார்.
கடத்தைச் செழுமைப்படுத்து வதற்காக பானையின் உள்ளே ஒரு கையை வைத்துக் கொண்டு வெளிப்பரப்பை மரச்சுத்தியலால் தேய்த்துச் சமப்படுத்தும் பணியில் நாளெல்லாம் ஈடுபடுகிறார் மீனாட்சி. அந்தப் பணியின் முடிவில் பானை, கடமாகிவிடுகிறது.
தமிழில்: பிருந்தா
27.12.13 தி இந்து ஆங்கிலம்