Last Updated : 11 Nov, 2014 12:50 PM

 

Published : 11 Nov 2014 12:50 PM
Last Updated : 11 Nov 2014 12:50 PM

அற்புதங்களுக்குப் பின் ஒளிந்திருக்கும் ‘செட்டப்

கானுயிர் ஒளிப்படங்கள் எடுப்பது என்பது அண்மைக் காலமாகப் பெருகிவரும் பொழுதுபோக்கு. வசதி படைத்தவர்கள், டிஜிட்டல் எஸ்.எல்.ஆர். கேமராக்கள் வாங்கி, அதில் முழம் நீளத்தில் பெரிய பெரிய லென்ஸ்களைப் பொருத்திப் படமெடுப்பதையும், ஓரளவு வசதியுள்ளவர்கள் சிறிய டிஜிட்டல் கேமராக்களிலும், வசதியில்லாதவர்கள் கைப்பேசி கேமராக்களிலுமாக ஏதோ ஒரு வகையில் படமெடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

பின்னர், தாங்கள் எடுத்த படங்களை முகநூலிலும், ட்விட்டரிலும், சமூக வலைத்தளங்களிலும் ஏற்றித் தங்களது நண்பர்களுக்கும், இந்த உலகுக்கும் காண்பிப்பது வழக்கமாகிவிட்டது. உடனடியாக ‘லைக்'குகளை வாங்கிக் குவித்த பின், இந்தப் படங்கள் வலைப்பக்கங்களின் அடி ஆழத்தில் சென்று தேங்கிவிடுகின்றன.

தற்போதைய சூழலில் எந்த வகை கேமராவையும் வைத்துக் கானுயிர்களை (கைப்பேசி கேமராக்களையும் சேர்த்துத்தான்) ஒளிப்படங்கள் எடுப்பவர் அனைவருமே கானுயிர் ஒளிப்படக் கலைஞர்கள்தான் (Wildlife Photographers). உயிரினங்களை மட்டுமே ஒளிப்படங்கள் எடுக்காமல் இயற்கையான வாழிடங்களையும் நிலப்பரப்புகளையும் படமெடுப்பதை இயற்கை ஒளிப்படக் கலை (Nature photography) எனலாம். எனினும் கானுயிர்களுக்கும், அவற்றின் வாழிடங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளை ஒளிப்படங்கள் மூலம் பதிவுசெய்வதை இயற்கைப் பாதுகாப்பு ஒளிப்படக்கலை (Conservation photography) எனலாம்.

அத்துமீறல், லஞ்சம்

தமது சொந்த விருப்பத்துக்காக இது போன்ற பொழுதுபோக்குகளைத் தொடர்வது நல்லதே என்றாலும், நாம் எடுக்கும் இயற்கை சார்ந்த, கானுயிர் ஒளிப்படங்கள் இயற்கை பாதுகாப்புக்கும் ஏதோ ஒரு வகையில் உதவும் வகையில் இருந்தால், நாம் செய்யும் வேலைக்கு ஓர் அர்த்தம் இருக்கும். அப்படியே உதவி செய்யாவிட்டாலும்கூட நாம் எடுக்கும் படங்களால், இயற்கைக்கும் கானுயிர்களுக்கும் எந்தத் தொந்தரவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். நேர்மையுடன் இருப்பது மிகவும் அவசியம். நம் விருப்பத்துக்கு ஏற்றவாறு படங்கள் அமைய வேண்டும் என்பதற்காகக் குறுக்கு வழியில் செல்வதும், அத்துமீறுவதும் சரியல்ல.

முறையற்ற வகையில் கானுயிர் ஒளிப்படங்கள் எடுக்கப்படுவதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். ஒரு குரங்கின் படத்தை எடுக்க முயலும்போது, அது நம் கேமராவின் பக்கம் திரும்பும்வரை காத்திருந்து பின் படமெடுப்பதே சரி. அப்படியில்லாமல் அந்தக் குரங்கைச் சீண்டித் திரும்பிப் பார்க்க வைத்தோ, அவற்றுக்கு உணவைக் காட்டி நம் பக்கம் வரவழைத்தோ படமெடுப்பது சரியல்ல.

மயக்க மருந்து

ஒரு உயிரினத்தை அதன் கூட்டில் வைத்துப் படமெடுப்பது பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. கூட்டினருகில் சென்று படமெடுக்கும்போது ஏற்படும் ஒலிமாசு மற்றும் ஒளிப்படக்காரர்கள் பொறுப்பின்றி (படம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக) கூடு இருக்கும் இடத்தின் தன்மையை மாற்றியமைப்பதாலும் பல வேளைகளில் பறவைகள் அடைகாக்கப்படாத முட்டைகளையோ, உணவூட்டப்பட வேண்டிய குஞ்சுகளையோ விட்டுவிட்டுக் கூட்டைவிட்டு அகன்று விடுகின்றன.

சிலர் இரவாடிகளைப் படமெடுக்கும்போது அதிநவீனச் செயற்கை ஒளிஉமிழிகளை (flash) அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இவற்றைக் குறைவாகவோ அல்லது தற்போது வரும் அதிநவீனக் கேமராக்களில் இருக்கும் High ISO வசதியைப் பயன்படுத்தினாலோ இரவாடிகளின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முடியும். சிலர் தாம் படமெடுக்க வேண்டிய (தவளை, பல்லி, ஓணான் முதலிய) உயிரினங்களை ஓரிடத்திலிருந்து பிடித்து வந்து, அவற்றுக்குச் சிறிய அளவில் மயக்கமருந்து கொடுத்து விடுகின்றனர். தமது தேவைக்கேற்ற பின்னணியில் அவற்றை வைத்துப் படமெடுக்கவே இந்த வேலை. சிலர் அரிய மலர்களைச் செடிகளில் இருந்து கொய்து வீட்டுக்கோ, ஸ்டுடியோவுக்கோ எடுத்து வந்து படமெடுக்கின்றனர்.

ஃபோட்டோ மோகம்

சாதாரண டிஜிட்டல் கேமரா வைத்திருப்பவர்களில் சிலர் அதிநவீன கேமராக்களால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களைப் பார்த்துவிட்டு, அதைப் போலவே அவர்களது படங்களும் இருக்க வேண்டும் என எண்ணி நேர்மையற்ற, பாதுகாப்பற்ற வழிகளில் படம் எடுக்கின்றனர். உதாரணமாக அண்மையில் சிலர் தமது சிறிய டிஜிட்டல் கேமரா, கைப்பேசி கேமராவைக் கொண்டு அமைதியாக நின்றிருக்கும் யானைக் கூட்டத்தின் அருகில் சென்று படமெடுக்க முயன்றனர். இப்படிச் செய்யும்போது யானைகள் எரிச்சலடைந்து தாக்க யத்தனிக்கும் வாய்ப்புகள் அதிகம். அவற்றைச் சீண்டுவது மட்டுமல்லாமல், அவை ஒரு வேளை தாக்க வந்தாலோ அல்லது தாக்கி அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தாலோ பழி விழுவது என்னவோ யானைகள் மீதுதான்.

அதீதத் தன்விருப்பம் (self-obsessed) மிகுந்த இத்தலைமுறையினர் சிலர் செல்ஃபிகளைச் சில காட்டுயிர்களுடன் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அண்மையில் ஒரு வரையாட்டின் கால்களை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்துத் தன்னுடன் நிற்கச் செய்து செல்ஃபி எடுக்க முயன்ற ஒரு சுற்றுலாப் பயணி, அவ்வழியே சென்ற வனத்துறை அதிகாரியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார்.

தொலையும் பொறுமை

காத்திருந்து படமெடுத்தல் கானுயிர் ஒளிப்படக்கலையின் ஒரு முக்கிய அங்கம். ஆனால் விதவிதமான கேமராக்களும், இயற்கை ஆர்வலர்களும் பெருகி வரும் இச்சூழலில் பலரிடமும் இந்தப் பண்பு இல்லாமல் போவது கவலையளிக்கிறது. இது குறித்த விரிவான கட்டுரைகளைத் தியடோர் பாஸ்கரன் உயிர்மை மாத இதழிலும், சு. பாரதிதாசன் பூவுலகு சுற்றுச்சூழல் இதழிலும் “கானுயிர் புகைப்படக்கலையா? கொலையா?” இதழ் மார்ச் - ஏப்ரல் 2014) எழுதியுள்ளனர்.

எனினும் அனைத்து ஒளிப்படக்காரர்களுமே இப்படியல்ல. பொறுப்பாகச் செயல்படும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இயற்கை ஒளிப்படக்கலையில் பொறுப்பற்றுச் செயல்படுவதில் மேற்சொன்னவை ஒரு வகை. படமெடுத்த பின் செய்யும் அத்துமீறல்களும், நேர்மையின்மையும்கூட உண்டு.

ஆம், படமெடுத்துக் கணினியில் இட்டு, சில மென்பொருட்களால் படங்களை அழகுபடுத்துவது அனைவருக்கும் தெரிந்ததே. ஒளி குறைவாக இருந்தால் அதைச் சற்று அதிகப்படுத்தியும், சில வண்ணங்களை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்து படத்தை மெருகூட்டுவது ஒத்துக்கொள்ளப்பட்ட செயலே. எனினும், சிலர் அளவுக்கு மீறிச் சென்றுவிடுகின்றனர்.

வலிந்து திருத்துதல்

உதாரணமாக ஓர் அழகான நிலவமைப்பைப் படமெடுக்கும்போது அதில் பல வேளைகளில் தந்திக்கம்பித் தொடரோ, மின் கோபுரமோ இருப்பது தற்போதைய சூழலில் இயல்பே. ஆனால் மென்பொருட்களைக் கொண்டு அவற்றை அப்படத்திலிருந்து நீக்கிவிடுகின்றனர். இது சரியா எனும் கேள்விக்கு மூன்று வகைகளில் பதிலளிக்கலாம். அந்தப் படத்தைப் பெரிதுபடுத்தி அச்சிட்டு நமக்காக மட்டும் நம் வீட்டில் மாட்டி வைத்து அழகு பார்த்தால், அப்படிச் செய்வதில் தவறில்லை.

ஆனால், இப்படத்தையே ஓர் ஒளிப்படப் போட்டிக்கு அனுப்பும்போது திருத்தங்களைச் செய்து அனுப்புவது முறையல்ல. ஒரு படத்தை அப்படி அனுப்பும்போது முன்பே இது பற்றிக் கூறி, அச்சில் வரும்போது அப்படத்தின் கீழ் "படம் செயற்கை முறையில் மெருகேற்றப்பட்டுள்ளது" என அனைவருக்கும் தெரிவிப்பது கடமை. இது போன்ற பித்தலாட்டங்கள் இருப்பதாலேயே ஒளிப்படப் போட்டிகளில் இப்போது ‘RAW' வகை படங்களைக் கேட்கின்றனர்.

Art Wolfe எனும் புகழ்பெற்ற இயற்கை ஒளிப்படக் கலைஞர் 1994-ல் கானுயிர், இயற்கையான வாழிடங்களின் அழகிய படங்களைக் கொண்ட 'Migration' எனும் நூலை வெளியிட்டார். இரண்டு ஆண்டுகள் கழிந்து அந்நூலில் பதிப்பித்த பல படங்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டிருந்தது கண்டறியப் பட்டதும் விமர்சனத்துக்கு ஆளானார். வரிக்குதிரைகள் அருகருகே நெருக்கமாக நிற்பது போன்ற அட்டைப் படத்தைக் கொண்டது இந்நூல். உண்மையில் அவை நெருக்கமாக அமைந்திருக்கவில்லை.

படத்தில் இருந்த வெற்றிடத்தை வரிக்குதிரைப் படங்களை இட்டு அவர் நிரப்பியிருந்தார். இதை அவர் டிஜிட்டல் வரைபடம் (Digital Illustration) என்கிறார். இது போன்ற morphing, cloning செய்தால் அதை அப்படத்தின் கீழ் அறிவித்துவிட வேண்டும். அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக இயற்கையில் இல்லாததைப் படங்களில் மாற்றியமைப்பது முறையல்ல. இதனால் இயற்கையில் இப்படித்தான் இருக்கும் எனப் பொதுமக்களும், வளரும் இயற்கை ஆர்வலர்களும் தவறாக நினைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

எது அவசியம்?

இன்னும் சிலர் அடைத்து வைக்கப்பட்ட இடங்களில் இருக்கும் உயிரினங்களை இயற்கையில் இருப்பது போலப் படமெடுத்து அனைவரிடமும் பகிர்ந்து கொள்கின்றனர். இயற்கையான வாழிடங்களுக்குச் செல்லும்போது அங்கு நாம் பார்க்கும் அழகிய நிலப் பரப்புகளையும், வாழிடங்களையும், கானுயிர்களையும், அழகிய முறையில் படமெடுத்துக் காட்டுவது புறவுலகின் பால் பலருக்கு நாட்டம் ஏற்பட உதவும் என்பது உண்மையே. எனினும், நடப்பு உலகில், பல கானுயிர்களும் அவற்றின் வாழிடங்களும் முழுமையாக அழிந்துபோகும் நிலையில் உள்ளன.

சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் சீர்கெட்டுக்கொண்டே வருகிறது. இவ்வேளையிலும், அழகிய படங்களை மட்டுமே எடுத்துக்கொண்டிருப்பது நல்லதா? இயற்கையைக் காப்பாற்ற நம்மால் இயன்றதைச் செய்யாமல், படமெடுத்து ரசித்துக் கொண்டிருப்பது, அழகா? ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பது உண்மைதான். நாம் விரும்பும் இயற்கையைக் காப்பாற்ற கேமராவையும் கொண்டு நேர்மையான முறையில் படமெடுத்து, யதார்த்தத்தையும் நம் படங்களில் பதிவு செய்வது நல்ல மாற்றத்துக்கு வித்திடலாம், இயற்கையைப் பாதுகாக்கும் ஒளிப்படக் கலையே இப்போதைய அவசர, அவசியத் தேவை.

கட்டுரையாளர்,
காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: jegan@ncf-india.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x