Published : 08 Feb 2014 00:00 am

Updated : 06 Jun 2017 19:19 pm

 

Published : 08 Feb 2014 12:00 AM
Last Updated : 06 Jun 2017 07:19 PM

கைசிக நாடகம் ஒரு வாசிப்பு

இரவு முழுக்கத் தூங்காமல் கண்விழித்து ஒரே இடத்தில் அமர்ந்து கூத்து பார்ப்பது, அரிச்சந்திர மயான காண்டம்,வள்ளித் திருமணம் போன்ற இசை நாடகங்களைப் பார்ப்பது இவையெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கொன்றும் புதிதான விடயமில்லை.

வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கூத்தும்,தென் மாவட்டங்களில் இசை நாடகங்களும் கிராமப்புற சமூக வாழ்வின் ஒரு பகுதியாக இன்றும் இருந்துவருகின்றன. இவை ஆகம வழிபாட்டிற்குள் அடங்காத நாட்டார் தெய்வ வழிபாடுகளின் சடங்கெல்லைக்குள் நிகழ்கிற கலைகள்.


ஆனால் ஆகம விதிகளுக்குட்பட்ட ஒரு வைணவக் கோயிலில், இரவு முழுக்க கண்விழித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரு நாடகத்தைப் பார்க்கிறார்களென்றால் அது அரிதான ஒன்றுதான். இப்படியொரு நிகழ்வு, கடந்த பதினைந்து ஆண்டுகளாக,நெல்லை மாவட்டம், நாங்குனேரிக்கு அருகிலுள்ள திருக்குறுங்குடி அழகிய நம்பி திருக்கோவிலில் நடந்துவருகிறது.

கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியினைக் கைசிக ஏகாதசியென்பர். அன்று இரவு கோவிலுக்குள் நடத்தப்படும் ஒரு சடங்கின் பகுதியாக இந்நாடகம் நிகழ்த்தப்படுகிறது.

தேவதாசி மரபினரால் நிகழ்த்தப்பட்டு, 1950களுக்குப் பிறகு படிப்படியாகக் குறுக்கப்பட்டு, பின்னர் ஒரு கட்டத்தில் கைவிடப்பட்ட இந்நாடகம் தற்போது பேராசிரியர் ராமானுஜம் அவர்களால் மீட்டெடுக்கப்பட்டு, கடந்த பதினைந்து ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டுவருகிறது.

டிசம்பர் 13ம்தேதியன்று இந்நாடகத்தைப் பார்க்கிறபோது மரபின் கூறுகளை முழுமையாகச் செரித்துக்கொண்ட ஒரு நவீன நாடகத்தினைப் பார்ப்பதாகவே பட்டது.

சமகாலத் தன்மை

புராணக் கதையாடலாக இது இருந்தபோதும் பல விதமான சமகாலப் பொருத்தப்பாடுகளைக் கொண்டதாக இது இருந்தது. இந்நாடகத்தின் கதை இதுதான்: தாழ்த்தப்பட்ட தீண்டாமைக் கொடுமைக்குட்படுத்தபட்ட வகுப்பில் பிறந்த நம்பாடுவான் எனும் பாணன், பிரம்ம ராட்சசனாய்ச் சபிக்கப்பட்ட ஒரு பிராமணனுக்கு சாபவிமோசனமளிக்கிறான். தன்னை விழுங்க வருகிற பிரம்ம ராட்சசனுக்குத் தான் கைசிக ஏகாதசியன்று அழகிய நம்பி பெருமாளைச் சேவித்துக் கைசிகப் பண் பாடி, தான் பெற்ற அனைத்துப் புண்ணியங்களையும் தானம் செய்வதன் மூலம் சாப விமோசனம் அளிக்கிறான். கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத,கோவிலின் கொடிமரத்துக்கு அப்பால் நின்று பெருமாளைச் சேவிக்கும் ஒரு பாணன், பிராமணனுக்கு விமோசனம் தரக்கூடிய வல்லமையை எவ்வாறு பெற்றான்? கைசிக ஏகாதசியன்று விரதமிருந்து பெருமாளைச் சேவிப்பதன் மூலம்தான் எனச் சொல்ல வருகிறது இக்கதையாடல்.

கைசிக ஏகாதசியின் மகிமையைச் சொல்வதுதான் கைசிக புராணத்தின் நோக்கம். எனினும் இக்கதையாடல், சாதியப் படிநிலைகளின் கடந்த கால இருப்பைச் சொல்வதோடு மட்டுமல்லாது, சமகால நினைவுகளையும் கிளறிவிட்டு, சாதியப் படிநிலைகளின் உயர்வு தாழ்வுகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்றிருந்தது அந்நாடக நிகழ்வு.

கைசிக நாடகம் கைவிடப்பட்ட காலத்தில் 45 நிமிடங்கள் மட்டுமே நிகழக்கூடிய நாடகமாக இருந்தது. இதை இரவு முழுக்க நடக்கக்கூடிய நாடகமாக வளர்த்தெடுப்பது என்பது மிகப்பெரிய சவால். இதனை மிகவும் திறனோடு எதிர்கொண்டிருக்கிறார் பேராசிரியர் ராமானுஜம்.

இந்நாடகத்தில் பங்கேற்ற இருவரைத் தவிர அனைவரும், பரதம் மற்றும் தேவதாசி மரபில் வந்த சதிராட்டம் பயின்றவர்கள், பிரம்ம ராட்சசனாய் முகமூடியுடன் தொடக்கத்தில் வரும் விஜி, நவீன நாடக நடிகர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கூத்துக்களரியில் மூன்றாண்டு பட்டம் படித்தவர்.

பிரம்ம ராட்சசனாய் முகமூடியில்லாமல் நாடகம் முழுக்க வரும் கோபி, பாகவத மேளா மரபைச் சேர்ந்தவர். அருணோதயம், ராஜகுமாரி, கிரிஜா ரங்கநாயகி, ஆகியோர் நடனமும் இசையும் பயின்றவர்கள். நடனத்தை வடிவமைத்த ஹேரம்பநாதன் சதிர் மரபில் வந்தவர்.

நடிப்பில் புதிய பானி

சாதாரணமாக மேடையில் நடிகர் எப்போதும் வழக்கமாகக் கையாள்கிற ‘இயற்பண்பு’ நடிப்பு முறையோ அல்லது ‘எதார்த்தமான’ நடிப்பு முறையோ இதற்குப் போதாது என்பது மட்டுமல்ல இப்பிரதியை அது வலுவிழக்கச் செய்துவிடவும் வாய்ப்புள்ளது. எனவே ஒருவிதமான ‘ஒயிலாக்க நடிப்பு முறையை’ நடிகர்களிடம் வளர்த்தெடுத்து நிகழ்வாக்கம் செய்திருக்கிறார் பேராசிரியர் ராமானுஜம்.

வசனம் பேசுவதையோ, செய்கைகள், பாவனைகள் உடலசைவுகளையோ வழக்கம்போலச் செய்யாமல் இழுத்தும் நீட்டியும் செய்யும் போது அது ஒயிலாக்கம்(stylization) பெறுகிறது. கைசிக நாடகத்தில் இவ்வொயிலாக்க நடிப்பு மிகவும் இலகுவாகத் தொழிற்படுகிறது. நடிகர்களது அசைவுகளும், செய்கைகளும் உடல்மொழியும் சதிராட்ட மரபிலிருந்து செரித்துக்கொள்ளப்பட்டிருந்தாலும் அது வழக்கமாகக் காணும் நாட்டியத்தை முழுதுமாக உரித்தெறிந்துவிட்டு வேறொரு அனுபவத்தை நமக்கு அளிக்கின்றன.

மேடையில் நடிகர்களது இருப்பு, பார்வையாளர்களின் கண்களை இமைக்கவிடாமல் செய்து அவர்களோடு நெருக்கமாக உறவாடுகிறது. அது மட்டுமல்ல, நாடகத்தை, நடிப்புக் கலையைப் பயில்பவர்களுக்கு ஞானத்தை அளிக்கும் அனுபவமாகவும் இருக்கிறது.

நாடகத்தின் ஒவ்வொரு அங்கமும் இரண்டு பாத்திரங்கள் மீதே கட்டமைக்கப்பட்டுள்ளது.

அழகிய நம்பிப் பெருமாள் கிழவனாக வடிவெடுக்குமுன் பத்து அவதாரங்களைச் சித்தரிக்கும் ஒரு காட்சியும் உண்டு. இந்தக் காட்சியும் இரண்டு நடிகர்களால் சித்தரிக்கப்படுகிறது. பத்து அவதாரக் காட்சி, பராசர பட்டரின் வியாக்கியானங்களுடன் காட்சிப்படுத்தப்படுகின்றன. அந்த வியாக்கியானங்களை உற்றுக் கவனித்தால் ஏதோ தந்தை பெரியார் செய்த விமர்சனம் போல் இருக்கிறது.

அவ்வியாக்கியானங்கள் வராக அவதாரத்தைத் தவிர்த்து மற்ற அவதாரங்கள் பொருந்தாது, தேவையற்றது என்கின்றன.

பிரம்ம ராட்சசனைத் தவிர, நம்பாடுவான், நம்பிக் கிழவன் என இதில் ஆண் கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பவரெல்லாம் பெண்கள். தேவதாசி மரபினரால் நிகழ்த்தப்பட்டபோது பின்பற்றப்பட்ட மரபினை இந்நாடகத்திலும் தொடர்கிறார்கள்.

இந்நாடப் பிரதியின் தேவைகளை நடிகர்கள் தமது அசாத்தியத் திறன்களால் ஈடுகட்டினார்கள். மரபான நாட்டிய வடிவங்களிலிருந்து ஆழமாகக் கற்றுக்கொண்டவர்கள் அவர்கள். பார்வையாளர்களிடம் நேரிடையாகப் பேசுகிற மொழி அது. பாடலின் ஒவ்வொரு சொல்லுக்கும் முத்திரைகளையும் செய்கைகளையும், அபிநயங்களையும் தந்து விளக்குகிற ஒரு வழமைக்குள் சிக்கிக்கொண்டிருந்தவர்கள் அவர்கள். இரு பாத்திரங்களுக்குள் நிகழ்த்தப்படும் உரையாடல்களுக்குத் தாம் கற்றுக்கொண்டிருந்த அணுகுமுறைகள் உதவ இயலாது என்பதை உணர்ந்து, தாங்கள் கற்றதை மறக்கவும் கற்றுக்கொண்டிருந்தார்கள்.

தாங்கள் புழங்கிக் கொண்டிருந்த சட்டகங்களிலிருந்து வெளியேவந்து கைசிக நாடகத்திற்கான ஒரு புதிய நாடக மொழியை, ஒரு புதிய சட்டகத்தை இவர்கள் வளர்த்தெடுத்திருக்கிறார்கள் என்பதுதான் இவர்களது சிறப்பு. நெறியாள்கை செய்த பேராசிரியர் ராமானுஜத்தின் கடும் உழைப்பினை இப்பணி விழுங்கியிருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது.

சடங்கும் கலையும்

சடங்கின் இறுக்கத்தைக் கலையனுபவம் நெகிழ்ச்சியாக்கிவிடுகிறது என்பதைக் கூத்து பார்க்கும்போது உணருவோம். கைசிக நாடகமும் இதற்கு விலக்கல்ல. காலை நீட்டிக்கொண்டும், படுத்துக்கொண்டும் கொட்டாவி விட்டுக்கொண்டும் ஐந்தரை மணிநேரம் இருந்து இந்த நாடகத்தைப் பலரும் பார்த்தனர். இதனைச் சடங்கு நாடகம் (Ritual theatre) என்றே பேராசிரியர் ராமானுஜம் குறிப்பிடுகிறார். ஆனால் சடங்கிலிருந்து விடுபட்ட நாடகமாகவே இதனை உணர முடிந்தது.

ஒரு பிராமணனுக்கு விமோசனமளிப்பவனாக ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த நம்பாடுவான் இருக்கிறான் என்பதை இந்நாடகம் உணர்த்துகிறது. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் ஒரு பிராமணனுக்கு மட்டுமல்ல, எல்லா சாதியினருக்கும் விமோசனம் அளிக்க வல்லவர்தாம். ஏனெனில் ஒடுக்கப்பட்ட சாதியினரின் விடுதலை என்பது அவர்களுக்கு மட்டும் விமோசனமளிப்பதாக இருந்துவிடுவதில்லை. அவர்களை ஒடுக்குகிறவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் விமோசனமளிப்பதாகவே அது அமைகிறது.

கைசிக நாடகத்தை இப்படியும் வாசிக்க இயலும்.


கைசிக ஏகாதசிபேராசிரியர் ராமானுஜம்அழகிய நம்பிப் பெருமாள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x