

“இசை என்பது சாதி, மதங்களைக் கடந்தது. அனைத்து சாதியினரும் இதில் ஆழ்ந்த புலமை பெறும் வகையில் சூழல் மாற வேண்டும். தலித்துகளும் சங்கீத கலாநிதி விருது பெறும் நாள் வரவேண்டும் என்று கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா கூறினார்.
பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா எழுதியுள்ள ‘எ சதர்ன் மியூசிக் - தி கர்நாடிக் ஸ்டோரி’ நூல் வெளியீட்டு விழா, சென்னை கலாஷேத்ரா அரங்கில் திங்கள்கிழமை மாலை நடந்தது. விழாவுக்கு கலாஷேத்ரா தலைவர் கோபாலகிருஷ்ண காந்தி தலைமை வகித்தார். நோபல் பரிசு, பாரத் ரத்னா ஆகிய விருதுகளைப் பெற்ற பொருளாதார மேதை அமார்த்யா சென், நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில், “நான் படித்த சிறந்த நூல்களில் இதுவும் ஒன்று. செவ்வியல் இசை, எல்லாத் தரப்பினரையும் சென்றடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அனுபவத்தின் ஆழம், இசை குறித்த செறிவான புரிதல், அபாரமான வரலாற்றுப் பார்வை ஆகியவற்றை இந்நூல் கொண்டிருக்கிறது. இசை மற்றும் அதன் தாக்கம் குறித்த சமகாலப் பிரச்சினைகளையும் இந்நூல் அணுகுகிறது’’ என்றார்.
நூலாசிரியர் டி.எம்.கிருஷ்ணா பேசியதாவது:
இசையின் மீது நான் கொண்ட ஆழமான ஈடுபாட்டின் விளைவுதான் இந்த நூல். இசை என்பது சாதி, மதங்களைக் கடந்தது. குறிப்பிட்ட சாதியினர்தான் கர்நாடக இசையைப் பயில வேண்டும், பாட வேண்டும் என்பதல்ல. அனைத்துச் சாதியினரும் இதில் ஆழ்ந்த புலமை பெறும் வகையில் நம் சூழல் மாற வேண்டும். பிற சாதியினரின் திறமையைத் திறந்த மனதுடன் அங்கீகரிக்கும் பார்வை இங்கே வளர வேண்டும்.
இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒப்பற்ற கலைஞர்கள், இசைக்கு அபாரமான தொண்டாற்றியுள்ளனர். அவர்க ளில் பலருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. கர்நாடக இசை என்பது சாதி, மதம் மட்டுமின்றி பக்தி, மொழி ஆகியவற்றையும் கடந்தது. ஒரு தலித், கர்நாடக இசையில் தேர்ச்சி பெற்று மியூசிக் அகடமியில் பாட வேண்டும். தலித்துகளும் சங்கீத கலாநிதி விருது பெறும் நாள் வரவேண்டும்.
இவ்வாறு டி.எம்.கிருஷ்ணா பேசினார்.
இசையின் தன்மை, அதன் சமூக அம்சங்கள், கச்சேரிகளின் வடிவமைப்பு, இசையில் இருக்கும் பக்தி அம்சம் ஆகியவை குறித்த கூர்மையான கேள்வி களை தனது நூலில் கிருஷ்ணா எழுப்பியுள்ளார்.
கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா (இடது) எழுதிய நூலை அமார்த்யா சென் திங்கள்கிழமை வெளியிட்டார். அருகில் கலாஷேத்ரா தலைவர் கோபாலகிருஷ்ண காந்தி. படம்: ஆர்.ரகு