

புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசலில் மிகப் பழமையான ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்தில் தொல்லியல் துறையின் கண்காணிப்பில் இருக்கும் பாறையில் உள்ள குகை ஓவியம், சமணர் படுக்கை ஆகியன அரிய பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படுகின்றன.
சமணர் படுகை உள்ள குகைப் பகுதியின் மேற்கூரையில் தீட்டப்பட்டுள்ள பல்வேறு ஓவியங்களைத் தனது ஆய்வின் மூலம் கண்டுபிடித்தது குறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா.அருள்முருகன் கூறியது:
“சமணர் படுகை உள்ள பகுதியான ஏழடிப்பட்டத்தில் இருக்கைகள் மற்றும் கல்வெட்டுகள் மட்டுமே இதுவரை பலராலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த இருக்கைகளின் மேல் விதானத்தில் வானவில்லின் வடிவத்தைப்போல பிரிவுப் பட்டை, புள்ளிகள் இடையே பூக்கள் வரையப்பட்ட ஓவியக் கம்பளம், குகையின் இடைப் பகுதியில் கோணங்கள் இணைந்தது போன்ற கோணம் ஓவியம் மற்றும் கடைசி இருக்கைப் பகுதியில் வட்டமாக அமைந்த சக்கரம், தாமரை ஓவியங்கள் எனப் பல ஓவியங்கள் உள்ளன.
ஏழடிப்பட்டத்தின் தென்பகுதியில் முதலை வாய் மற்றும் சாய்தளக் குகைகளிலும் ஓவியங்கள் வரையப்பட்டதற்கான அடையாளங்கள் உள்ளன.
காரைச் சுதையைப் பூசி, அதன் மேல் வண்ணங்களைக் கொண்டு ஓவியம் தீட்டும் முறையில் இந்த ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. விலங்கு, மனித உருவங்கள், தாமரைப் பூக்கள் உள்ளிட்ட பலவித ஓவியங்கள் இங்கு தீட்டப்பட்டுள்ளன.
சமண ஒவியம் என்பதால்…
ஏழடிப்பட்டம் குகையில் தீட்டப்பட்ட ஓவியங்கள் மழையால் நனைந்து சிதைந்திருக்கலாம் அல்லது இயற்கையுடன் சமண சமயத்தின் கோட்பாடுகளை - நெறிமுறைகளை விளக்குவதாக இந்த ஓவியம் அமைந்துள்ளதால் வேற்று மதத்தினரால் அழிக்கப்பட்டிருக்கக்கூடும்.
சித்தன்னவாசல் ஓவியம் எனக் குறிப்பிடப்படும் அறிவர் கோயில் ஓவியங்களான யானை, மீன், அன்னப் பறவை, தாமரைத் தடாகம், மான், நடன மாது, அரசன், அரசி ஆகியன பொதுத் தன்மை மிகுந்த ஓவியங்களாக உள்ளன அல்லது அவ்வாறு ஆக்கப்பட்டுவிட்டன. எனவே, அவை பாண்டியர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டன.
ஏழடிப்பட்டம் குகையில் சமண சமயத்தின் தத்துவ விளக்கங்களே ஓவியங்களாக இருந்த
தால், இவற்றைப் புதுப்பிக்க யாரும் முன்வராமல் இருந்திருக்கக்கூடும்.
இயற்கையாய் அமைந்த குகை
அறிவர் கோயில் ஓவியங்கள் இளங்கௌதமன் என்பவரால் கி.பி. 9-ம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஏழடிப்பட்டம் குகை இயற்கையாய் அமைந்தது. இங்குள்ள கல்வெட்டுகளின் காலம்
கி.பி. 1, 3, 5, 7, 10 ஆகிய நூற்றாண்டு
களில் அமைகிறது. ஏழடிப்பட்டம் ஓவியங்கள் கி.பி. 5- 7-ம் நூற்றாண்டாக இருக்கக்கூடும்.எப்படி இருப்பினும் சித்தன்னவாசல் ஓவியம் என்றால் அறிவர் கோயில் ஓவியம் மட்டுமல்ல; ஏழடிப்பட்டம் குகை ஓவியங்களையும் சேர்த்துதான் என இனிமேல் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார் அருள்முருகன்.
இவர் சில மாதங்களுக்கு முன்பு திருமயம் கோட்டையில் புதிய ஓவியத்தை கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.
மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்
ஏழடிப்பட்டம், சமணர் இருக்கைக்கு மட்டுமல்ல ஓவியங்களுக்கும் புகழ்பெற்றதாகும். தொல்லியல் துறையானது தொழில்நுட்ப நிபுணர்கள், சமணம் சார்ந்த ஆய்வாளர்கள் மற்றும் தேர்ந்த ஓவியக் கலைஞர்களைக் கொண்டு மேலும் ஆய்வு செய்து இவற்றின் மூல ஓவியங்களை மீட்டுருவாக்கம் செய்ய முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.