Last Updated : 03 Jan, 2014 12:00 AM

 

Published : 03 Jan 2014 12:00 AM
Last Updated : 03 Jan 2014 12:00 AM

வி.வி. சுப்பிரமண்யம், வி.வி.எஸ். முராரி - முத்தான இசைச் சாரல்

தெய்வீகமான சூழ்நிலையில் கேட்ட தெய்வீக இசையாய் அமைந்தது வயலினில் வி.வி. சுப்பிரமண்யமும், அவர் மகன் வி.வி.எஸ். முராரியும் சேர்ந்து வாசித்த கச்சேரி. கல்யாணி ராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்த ‘வனஜாக்ஷிரோ’ வர்ணத்துடன் பளிச்சென்று தொரடங்கி, ஆரபி ராகத்தை ‘ ஸரஸ்வதி’ என்ற முத்துஸ்வாமி தீட்சிதரின் கிருதியைப் பாடி சரஸ்வதி தேவிக்கு அர்பணித்தார். ஹிந்தோள ராகம் வி.வி.எஸ். கையில் வயலின் பேசியது. அதை எதிரொலித்தது முராரியின் வயலின்.

தீட்சிதரின் ‘கோவர்தன கிரீசம்’. முத்தைய்யா பாகவதரின் கண்டுபிடிப்பான கர்ண ரஞ்சனி ராகத்தைக் கைதேர்ந்த கலைஞர் வரைந்த சித்திரமாய்த் தீட்டினார். அந்த நிமிடத்தில் அது அவருடைய கண்டுபிடிப்பைப்போல் இருந்தது. ரசிகர்கள் கண்களில் நெகிழ்ச்சித் துளி. வாஞ்சையுடன் ‘வாஞ்சதோ’ கிருதிக்கு உயிரூட்டினார். சாருகேசி ராகத்தைப் பார்த்துப் பார்த்துச் செதுக்கினார். ஸ்வாதித் திருநாளின் ‘கிருபையா பாலய சௌரே’ கிருதி ஆகிருதியுடன் கம்பீரமாய் ராஜ நடை போட்டு வந்தது. மனதை உருக்கியது அவர் கோடிட்டு காண்பித்த ஆஹிரி ராகமும், தொடர்ந்த சியாமா சாஸ்த்ரியின் ‘ மாயம்மா’ கிருதியும்.

தீட்சிதரின் ஜுஜாவந்தி ராகத்தில் மனதைக் கொள்ளை கொள்ளும் ‘அகிலாண்டேஸ்வரி’; ஹம்ஸாநந்தி ராகத்தில் பாபனாசம் சிவன் அருளிய ‘னிவாச திருவேங்கடமுடையான்’ பாடல் எனத் தொடர்ந்த கச்சேரி சிந்து பைரவியில் ‘கருணை தெய்வமே கற்பகமே’யுடன் நிறைவு பெற்றது. தந்தையின் வழியில் முராரி. தடம் பிறழாத உயர்வான சங்கீதம். பூவாளூராரின் மிருதங்கம் ஸுஸ்வரமாய்ப் பேசியது.

முத்துமுத்தான இசைச் சாரலில் சொட்டச் சொட்ட நனைந்து திக்குமுக்காடிய மகிழ்ச்சி!

வயலின்: வி.வி. சுப்ரமணியம், வி.வி.எஸ். முராரி

மிருதங்கம்: பூவாளூர் ஸ்ரீஜா, மாலை மணி 7 சேம்பர் கச்சேரி - இடம் முசிரி சுப்பிரமண்ய ஐயர் இல்லம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x