Last Updated : 01 Dec, 2013 12:00 AM

 

Published : 01 Dec 2013 12:00 AM
Last Updated : 01 Dec 2013 12:00 AM

வயலின் இசை கலங்கரை விளக்கம்

திருமலை நாத நீராஞ்சன நிகழ்ச்சியில் தனது புதிய கண்டுபிடிப்பான சப்தகிரி ராகத்தை தன் சிஷ்யர் குழுவுடன் மேடையேற்றினார் வயலின் கலைஞர் ஏ. கன்னியாகுமரி. ஆயிரக்கணக்கான ஜன்ய ராகங்களின் சாயலில் இருந்து வித்தியாசமாக இருந்தது சப்தகிரி. இது குறித்து அறிய அவரை தொடர்பு கொண்டபோது, பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.

தனது புது ராகக் கண்டுபிடிப்பு குறித்து அவர் தெரிவித்ததாவது:திருமலையில் உள்ள ஏழுமலைகளும் சப்தகிரி என்று அழைக்கப்படுகிறது. சப்தகிரி என் வாழ்க்கையில் தற்போது பின்னிப் பிணைந்துவிட்டது. அந்த ஏழுமலையானையும் அலர்மேல்மங்கை தாயாரையும் என் தந்தை தாயாகவே எண்ணுகிறேன்.

கர்நாடக இசையில் உள்ள 72 மேளகர்த்தா ராகங்களின் ஜன்ய ராகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. சமீபத்தில் அன்னமைய்யாவின் இதுவரை இசை வடிவம் பெறாத ஏழு பாடல்களுக்கு, இசை அமைத்தபோது புதிய ஏழு ஜன்ய ராகங்களைக் கண்டுபிடித்தேன். அம்மலைகளின் பெயரையே அந்த புதிய ராகங்களுக்கும் வைத்துவிட்டேன்.

அவை சேஷத்திரி – தர்மாவதி(59), நீலாத்திரி- ஜான்கராத்வனி(19), கருடாத்திரி- சக்கரவாகம்(16), அஞ்சனா த்திரி-ரசிகப்பிரியா (72), விருக்ஷபாத்திரி-கனகாங்கி(1), நாராயணாத்திரி- தீர சங்கராபரணம் (29), வேங்கடாத்திரி – ஜான்கராத்வனி (19). இந்த ஜன்ய ராகங்களின் ஆரோக அவரோகணங்கள் புதியவை. மலைகளின் பெயர்கள் ராகங்களுக்கு வைக்கப்பட்டிருப்பதும் புதுமை என்றார்.

கன்னியாகுமரி இசையையே தன் உயிர்மூச்சாகக் கொண்டிருப்பதால், திருமணத்தைத் தவிர்த்து இசைக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டார். இவரது ஐம்பது வருட இசைப் பயணத்தில் வேறு சாதனைகள் குறித்து கேட்டபோது விரிவாகப் பேசுகிறார்.

“பஞ்ச பூதங்களை நிலைக்களனாகக் கொண்டு கர்னாடக இசைப் பாடகர்களின் பிரபல பாடல்களை ஐந்து வகையாகப் பிரித்தேன். முதலில் ஆகாசம்- எல்லையற்று விரிந்து பரந்தது, இதற்கு எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, ரவி சங்கர் ஆகியவர்களின் பாடல்களை எடுத்துக்கொண்டோம். பூமி - காத்திரமானது, அதற்கு டி.கே.பட்டம்மாளின் குரல் வழியில் அமைந்த பாடல்கள். நீருக்கு சமுத்திரம் – தொடர் அலை போல மீண்டும் மீண்டும் வரும் இசைக்கோவை பாலமுரளி கிருஷ்ணா, செம்மங்குடி ஆகியோரின் இசை நிலை. வாயு – காற்றினால் இசைக்கப்படும் வாத்தியங்கள் நாகஸ்வரம், சாக்ஸபோன் ஆகியவை. இதில் ராஜரத்தினம் பிள்ளை, கத்ரி கோபாலகிருஷ்ணன் ஆகியோருடையதை எடுத்யுதுக்கொண்டோம். அக்னி என்றால் புரட்சி என்றுகொண்டு, இதற்கு ஜி.என்.பி, மதுரை மணி ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட இசைக்கோவைகளை ஓரே கச்சேரியில் இடைவிடாமல் தொடர்ந்து இசைத்தேன். ஒருவரின் பல்லவியுடன், இணையக்கூடிய வேறொருவரின் சரணத்தை இணைத்தது, பஞ்ச பூதங்களும் மாறிமாறிக் காட்சியளித்த்தாததுபோல் அமைந்ததாக ரசிகர்கள் சொன்னார்கள்” என்கிறார்.

குருமார்களைக் குறித்துச் சொல்லும்பொழுது சிஷ்ய பரம்பரைகள் வாசிக்கும் பாணி இன்னார் பந்ததியைச் சேர்ந்தது என்று சொல்லும் வழக்கம் உண்டு. வயலின் வாசிப்பை வைத்தே கன்னியாகுமரியின் சிஷ்யர் என ரசிகர்கள் கண்டுபிடித்துவிடுகின்றனர். கன்னியாகுமரியின் பந்ததி இன்று பரந்து விரிந்துவிட்டது. இவரது பிற சாதனைகள் குறித்துக் கேட்டபோது சிந்து பைரவி, யமன் கல்யாணி, சஹானா, வலஜி ஆகிய ராகங்களில் தில்லானா இயற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.

“கர்நாடக சங்கீதத்தையும் மேற்கத்திய இசையையும் இணைத்து, இசைக்கருவிகளுக்கான நோட்ஸ் உருவாக்கியுள்ளேன். இது ஆர்கெஸ்ட்ரா என்னும் வகையைச் சார்ந்தது” என்று தெரிவிக்கிறார்.

கிரிக்கெட்டையும் விட்டு வைக்கவில்லை. “சிக்ஸர் அடித்தால் இசைக்க ஓரு இசைக்கோவை, சதம் அடித்தால் அதற்கொரு மெட்டு. இவற்றை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தினால், ரசிகர்களின் மூடுகு ஏற்றாற்போல் அமைந்திருக்கும்” என உற்சாகமாகக் கூறுகிறார்.

இவரிடம் புதைந்துள்ள மற்ற ஆச்சரியங்கள்: “நான் வயலின் கற்றுக் கொடுக்க ஃபீஸ் வாங்குவதில்லை. நான் மூன்று குருகளிடம் இசை கற்றேன். யாரும் என்னிடம் ஃபீஸ் வாங்கவில்லை. எம்.எல்.வி.கூட ஃபீஸ் வாங்காமல்தான் இசை கற்றுக் கொடுத்தார்.  ரவிசங்கர் நடத்திய நிகழ்ச்சியொன்றில் சுமார் நான்காயிரம் பேர் இசைத்த டியூன், நான் உருவாக்கியதுதான்” என்று புன்னகைக்கிறார்.

இந்திய அரசு விருதுகளான சங்கீத கலா சாகரா மற்றும் சங்கீத நாடக அகாடமி விருது, தமிழக அரசு விருதான கலைமாமணி ஆகியவற்றைப் பெற்றுள்ள். கன்னியாகுமரி ஒரு வயலின் மேதைதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x