

சாருகேசி ராகம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். (எம்.கே.டி.யின் ‘மன்மத லீலையை’, பி லீலாவின் ‘நீயே கதி ஈஸ்வரி’...). இந்த ராகத்தை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதில் வருவது சுத்த மத்யமம். இந்த ஒரு ஸ்வரத்தை மட்டும் மாற்றி ப்ரதி மத்யமமாக வைத்துப் பாட முயலுங்கள். கிடைப்பது ராகம் ரிஷபப்ரியா. இவ்வளவு பூர்வ பீடிகை எதற்கு? பிரசன்னா வெங்கட்ராமன் இந்த ரிஷபப்ரியா ராகத்தை பிரம்ம கான சபாவில் விஸ்தாரமாகப் பாடினார். சாருகேசியில் இருந்து இந்த ராகம் மாறுபட்டு இருப்பதைப் பல இடங்களில் தனது படைப்பூக்கத்தின் மூலம் இவர் உணர்த்தியது நெகிழ்ச்சியை உண்டாக்கியது. கோடீஸ்வர ஐயரின் ‘கனநய தேசிக பாடலை இவர் பாடினார்.
பிரசன்னா வெங்கட்ராமன் இந்தப் பாடலின் சங்கதிகளைச் சங்கீத முறைக்கு ஏற்றவாறு பாடியதைப் பாடலாசிரியரைக் கௌரவித்ததாக எடுத்து க்கொள்ளலாம். ஸ்வரங்களையும் பல கோணங்களில் இருந்து கிரகித்து, நெறி பிறழாமல் பாடியது இவரது அப்பியாசத்தையும் உழைப்பையும் உணர்த்தியது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப இதே பாங்கில் பிரசன்னா மற்ற பாடல்களையும் வழங்கினார். மற்ற பாடல்களில் தியாகராஜ ஸ்வாமிகளின் தினமணி வம்ச (ஹரிகாம்போதி), எந்த நின்னே சபரி (முகாரி), போகீந்த்ர சாயினம் (ஸ்வாதித் திருநாள்) ஆகியவை அடங்கும். இவர் பிரதானமாகப் பாடியது ஸாவேரி ராகத்தில் அமைந்த ஸ்யாமா சாஸ்திரியின் துருசுகா என்ற கிருதி.
வயலின் வாசித்த ராஜீவ் ராகத்தை பிரசன்னாவுடன் பின்தொடர்ந்து சென்ற விதமும், தனக்கு வாய்ப்புக் கிடைத்தபோது திறமையையும் நுணுக்கங்களும் கொண்ட பல சங்கதிகளை வாசித்தார். மிருதங்கம் வாசித்த சங்கரநாராயணனும் (இவர் ராஜா ராவின் சீடர்) இந்தப் பாட்டை மனப்பாடம் செய்து வாசித்தது போல மிருதங்க இணைப்புகள் கொடுத்துப் பாடலுக்கு மெருகேற்றினார். மொத்தத்தின் காதுக்கும் மனதுக்கும் நிறைவான இசை விருந்து.
துக்கடா: (கோடீஸ்வர ஐயர் 72 மேள கர்த்தா ராகங்களிலும் இனிய தமிழில் கிருதிகள் அமைத்துள்ளார். இவற்றை எல்லாம் ஒரு ப்ராஜெக்டாக எடுத்துக் கொண்டு காலஞ்சென்ற இசை மேதை எஸ்.ராஜம் ஒரு சி.டி. வெளியிட்டுள்ளார்.)