

ஷ்ரத்தா மோஹன் ப்ரஹ்ம கானச் சபாவின் தரப்பில் வழங்கிய கச்சேரியில் நம்மைக் கவர்ந்தது நிரவல். இது பாட்டின் ஒரே அடியை விஸ்தாரப்படுத்திப் பாடுதல் என்ற முறையாகும். “லம்போதர” என்ற மைசூர் வாசுதேவாச்சாரியாரின் பாடலில் “சுரபூசுர” என்ற இடத்திலும், கச்சேரியில் முக்கிய ராகமாக எடுத்துக் கொண்ட கரஹரப்ரியா ராகப் பாடலான “ராம நீ ஸமானமெவருவில்” (இது தியாகராஜருடையது) அதன் பல்லவி வரிக்கும், நெரவல்கள் அமைக்கப்பட்டிருந்தன. வர்ணமோ பந்துவராளியில், இடையில் தந்யாஸி (மயூர நாதம் அனிசம், தீக்ஷிதர்). எல்லாம் கனமான ராகங்களாகவே இருந்தன. இது தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது கச்சேரி இவ்வாறு திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் மனதில் தோன்றியது. (தியாகராஜரும் அடுத்து வந்த பாபநாசம் சிவன் அவர்களும் கரஹரப்ரியா ராகத்தில் பல கிருதிகளை அமைத்து அந்த ராகத்திற்குத் தனி முக்கியத்துவம் கொடுத்தவர்கள் என்பதை இங்கே நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.)
ஷ்ரத்தா மோஹனின் எல்லா ராக ஆலாபனைகளும் ஒரு நிதானப் போக்குடன் அமைந்திருந்தன. அங்கங்கு ப்ருகாக்கள் தெளிக்கப் பட்டிருந்தாலும் நிதானமே பிரதானம். இதே போல் மைக்கிற்காகவென்று குரலைச் சற்று அடக்கிப் பாடும் குணமும் இவரிடம் இல்லை. பாடும் பொழுது குரலின் முழு சுவாசமும் வெளிவந்தது. தன்யாஸி ராகப் பாடலில் நிரவலையும் ஸ்வரக் கோர்வைகளையும் தவிர்த்திருந்தார். பாடலும் அதைப் பாடிய விதமுமே ஒரு நிறைவை உண்டாக்கும் என்பதை உணர்ந்தவர் போலும். மேலே குறிப்பிட்டுள்ள கரஹரப்ரியா கிருதி ஒரு ஆழமான பாடல் என்றாலும், எளிமையான ரூபக தாளத்தில் இருக்கும். இதில் ஸ்வரஜாலங்களையும் கோர்வைக் குறைப்புகளை ரூபக தாளத்திலும் பல தனி ஆவர்த்தனத்தனங்களாக வகுத்து, லயத்தில் தான் வல்லவர் என்பதை உணர்த்தினார் ஷ்ரத்தா.
உடன் வயலின் வாசித்த கே.பி. நந்தினி, கரஹரப்ரியா ராகத்தில் வாத்தியத்திற்கே என்றுள்ள பல சிறந்த சங்கதிகளை நெடுகிலும் அமைத்துத் தன் திறமையை வெளிக்கொணர்ந்தார். பாட்டிற்குத் துணையாக வாசிக்கும் தருணங்களில் தனது பங்கை அதன் எல்லை மீறாமல் வாசித்துக் காட்டியது இவரது தனிச்சிறப்பு.
மிருதங்கம் வாசிப்பதில் ஒரே வகைதான் எனக்குத் தெரியும். அது பாட்டின் போக்கில் அதற்கடங்கி வாசித்தல் என்பதைப் பல இடங்களில் நிரூபணமாக்கியது பரத்வாஜின் மிருதங்க ஒலி. தனியின் பொழுது இந்த இளம் கலைஞர்களின் ‘சொல்லாடல்கள்’ அனைவரையும் வியக்க வைத்தன.
இந்தக் கச்சேரியில் ஒரு பஜனையோ அல்லது ஒரு திருப்புகழையோ சேர்த்தி ருக்கலாமோ என்ற எண்ணம் எழுந்தது. வர்ணத்தில் கற்பனை ஸ்வரங்களைப் பாடியிருக்க வேண்டாமோ?
முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த அவரது தாயார் மாலா மோஹன் நமது கண்ணில் படாமல் போகவில்லை. இவரும் சிறந்த பாடகர். இவரது கச்சேரிகளும் சீசனில் உண்டு.