திருச்சி: உறவுகள் உதிர்ந்துகொண்டிருக்கும் காலத்தில் வாழ்கிறோம்

திருச்சி: உறவுகள் உதிர்ந்துகொண்டிருக்கும் காலத்தில் வாழ்கிறோம்
Updated on
2 min read

ஒரு மரத்தின் இலைகள் உதிர்வதைப் போல உறவுகள் உதிர்ந்துகொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

திருச்சியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய இலக்கில்லா பயணி, சாமுராய்கள் காத்திருக்கிறார்கள், காந்தியோடு பேசுவேன், 7 இலக்கியப் பேருரைகள் என 10 நூல்கள் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணண் பேசியது: ஒரு நண்பர் என்னிடம் நீங்கள் நிகழ்கால மனிதராக உணர்கிறீர்களா? இல்லை, கடந்த கால மனிதராக உணர்கிறீர்களா? என்று கேட்ட போது நான் ஒரு மனிதனுக்கு என்னென்ன உறவுகள் இருக்கின்றன என்று ஒரு பட்டியலை எழுதினேன். அதில் எப்போதோ என்றோ உருவாக்கப்பட்ட அந்த பட்டியலில் ஒன்றும் மாறுபடவில்லை. இந்த நூற்றாண்டில் புதிய உறவுகள் எதுவும் உருவாகவில்லை. பெரும்பான்மையான உறவுகள் எதிர்காலத்தில் இருக்காது. இனிவரும் தலைமுறையில் நடுவில் பிறந்தவர்கள் இருக்கப்போவதில்லை. எந்தெந்த உறவுகள் எல்லாம் இந்திய சமூகத்தின் அச்சாணியாக இருந்ததோ அந்த உறவுகள் எல்லாம் வரும் காலத்தில் இருக்கப்போவதில்லை. ஏனென்றால், எல்லோரும் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்கிறார்கள்.

ஒரு மரத்தின் இலைகள் உதிர்வதைப் போல உறவுகள் உதிர்ந்துகொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு ஐரிஷ் கதையில் ஒரு விவசாயிக்கு 12 வருடங்கள் கழித்து பெற்ற பிள்ளை மிக மோசமானவனாக வளரும் போது அவன் ஒரு குழந்தை பெற்றதுதான் தவறு என்று உணர்கிறான். இதற்கு காரணம் பெற்றவர்கள் ஒரு கனவிலும், பிள்ளைகள் ஒரு யதார்த்தத்திலும் வளருவதுதான்.

நாம் பூமியை ஒரு பண்டமாக விலை கூவி விற்றுக்கொண்டிருக்கிறோம். நாம் அதை விவசாயத்திற்கான நிலமாகப் பார்க்கவில்லை. அதனால், மனிதனை கலை மண்ணை நோக்கித் திருப்புகிறது.

நாம் தாஜ்மகாலைப் பார்க்க விரும்புகிறோம். ஆனால், ஜாலியன் வாலாபாக் போன்ற இடங்களைப் பார்க்க விரும்புவதில்லை. ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய வில்லியம் ஒ டயரைக் கொன்ற உத்தம் சிங் பற்றி இங்கு யாருக்கும் தெரியவில்லை. ஆனால், பஞ்சாப்பில் உத்தம் சிங் என்று யார் பெயர் வைத்திருந்தாலும் அவருக்கு மரியாதை செலுத்துகிறார்கள்.

இதையெல்லாம் நமது குழந்தைகளுக்கு தெரிவிக்காமல் வரலாறு, இலக்கியம், பண்பாடு என எந்த அறிவும் இல்லாமல்தான் நாம் நம் பிள்ளைகளை வளர்க்கிறோம். அதற்குக் காரணம் சுயநலம். சுயநலம்தான் இப்போது ஒட்டுமொத்த இந்திய சமூகத்தையே மோசமாக வழிநடத்திக்கொண்டிருக்கிறது. வாய்மை தவறுகிற இடத்தில்தான் சுயநலம் உருவாகிறது.

மொழிதான் நம் காலத்தில் ஆபத்தில் இருக்கிறது. மொழி என்பது கருவி அல்ல அது இனத்தின் அடையாளம். இன்று மொழியைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம். காந்தி தாய்மொழியில் பேச வேண்டிய எழுத வேண்டிய அவசியத்தைச் சொல்கிறார்.

இரண்டாயிரம் வருடமாக பேசிவரும் மொழி தமிழ்மொழி. இரண்டாயிரம் வருடத்திற்கு முன் வாழ்ந்த மனிதன் வந்து இன்றைய மனிதனோடு பேசினால் புரிந்துகொள்ள முடியும். இதுதான் தமிழின் சிறப்பு. உலகில் வேறு எந்த மொழிக்கும் இந்த பெருமை இல்லை. தமிழ்மொழி ஒரு நீண்ட மரபின் தொடர்ச்சி என்றார்.

நூல்களை கவிஞர் தேவதச்சன், எம்.செல்வராஜ், எஸ்.முகமது ரபி வெளியிட்டனர். எஸ்.ஏ.பெருமாள், கவிஞர் நந்தலாலா, எழுத்தாளர் ந.முருகேச பாண்டியன் ஆகியோர் எஸ்.ராமகிருஷ்ணனின் நூல்களைப் பற்றி பேசினர். நிகழ்வில் சோ.மதியழகன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கலியமூர்த்தி, துளசிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை களம், உயிர்மை இணைந்து செய்திருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in