

தமிழ் இசைச் சங்கம் தனது எழுபத்து ஒன்றாம் இசை விழாவை 21 டிசம்பர், 2013 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஒரு பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் ஆரம்பித்தது. ஜார்க்கண்ட் மாநில முன்னாள் தலைமை நீதியரசர் மாண்புமிகு எம். கற்பகவிநாயகம் தலைமை ஏற்று, இசைப்பேரறிஞர் விருதை கிருஷ்ணகுமாரி நரேந்திரனுக்கும் பண் இசைப்பேரறிஞர் விருதை சீர்காழி சா. திருஞானசம்பந்தனுக்கும் வழங்கி கௌரவித்தார்.
மரபு சார்ந்த இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் மட்டுமேயன்றி, நாகசுர வித்வான்களும் தவில் வித்வான்களும் பங்கேற்ற இந்தத் தொடர் நிகழ்வுகளில், வயலின் மற்றும் வீணைத் தனிக் கச்சேரிகளும் நடந்தேறின. இது தவிர பண் இசைப்பேரறிஞர்களின் திருமுறை இசை, திவ்யப் பிரபந்த இசை, தெய்வத் திருப் பாடல்கள், பழைய நாடக மேடைப் பாடல்கள், நாடகங்கள், ஒரு குறிப்பிட்ட கருத்தின் மீது ஆதாரப்பட்டிருந்த நாட்டியம் (பக்த மீரா, போன்றவை), ஆகியவை சுவையுடன் வழங்கப்பட்டன. மேலும், சென்னை தமிழ் இசைச்சங்க இசைக் கல்லூரி நாட்டியத் துறை, மற்றும் இசைத் துறை மாணவ மாணவியர் வழங்கிய ரம்மியமான ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், ஆற்றல் மிக்க மூதறிஞர்களின் இசைப் பேருரைகளும், விளக்க உரைகளும் மிகச் சிறந்த முறையில் நடத்தி வைக்கப்பட்டன.
31 டிசம்பர், 2013 அன்று எண்பது வயதைக் கடந்தும் கிளாரினெட் வாத்தியத்தை கம்பீரத்துடன் வாசிக்கக்கூடியவரும், இந்த வாத்தியம் கர்நாடக இசையின் கமகங்களை இழைக்கும் வண்ணமாக ‘வளைத்தவருமான’ ஏ.கே.சி. நடராஜன் அவர்களின் வாசிப்பும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதைப் போலவே புகழ்மிக்க இசைப் பேரறிஞர் கே.ஜே. யேசுதாஸின் கச்சேரி நடந்த சில இடங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது. நிகழ்ச்சிகள் ஜனவரி 1, 2014 வரையில் இங்கு நிகழ்வுகள் நடைபெற்றன.
விழாக் காலத்தில் மன்றத்தில் மாலை 7 மணிக்குத் துவங்கும் நிகழ்ச்சிகள் தவிர, பிற நிகழ்ச்சிகட்கு மன்றம் நிர்ணயித்துள்ள 300 இருக்கைகளில் முன்னால் வருபவர்கள் கட்டணம் இன்றி அனுமதிக்கப்பட்டார்கள்.