Last Updated : 01 Dec, 2013 12:00 AM

 

Published : 01 Dec 2013 12:00 AM
Last Updated : 01 Dec 2013 12:00 AM

இசை மழையில் சென்னை

வருடந்தோறும் பெய்யும் வான்மழை பொய்த்தாலும் சென்னையில் பெய்கின்ற இசைத் தேன் மழை சிறிதும் குறைவின்றி 85 வருடங்களாகக் கொட்டிக்கொண்டிருக்கிறது.

கிளாஸிகல் மியூசிக் என்னும் பாரம்பரிய இசைக்காக நடத்தப்படும் மிகப்பெரிய விழா என்று கூறத்தக்க சென்னை இசை விழா மேலும் பல தனிச்சிறப்புகளுக்கு உரியது.

இந்தியாவில் மட்டுமின்றி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இசை விழாக்கள் ஒரு இசை மேதையின் நினைவாகவே துவக்கப்பட்டு அவர் பெருமைகளைப் பரப்பும் விதமாகவே நடத்தப்படுகின்றன.

ஜெர்மனியின் பீர் விழா (பீத்தோவன் நினைவாக) இந்தியாவின் மிகப்பெரிய இசை விழாக்களான தான்சேன் விழா, ஹரிவல்லப விழா கந்தர்வா பீம்சென் விழா, ஹரிதாஸ் விழா தியாகராஜ ஆராதனை போன்ற பல இதன் சான்றாக திகழ்கின்றன.

சென்னை இசை விழா, ஒரு தேசிய இயக்கத்தின் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, தீவிரமான தேசியத் தலைவர்களால் துவக்கப்பட்ட உலகின் ஒரே பராம்பரிய இசை விழா. 1927இல் காங்கிரஸ் கட்சியின் சார்பில், அகில இந்திய இசை மாநாடு ஒன்று சென்னையில் நடத்தப்பட்டது.

இந்திய பாரம்பரிய இசை வடிவங்களை காக்கும் நோக்கத்தில் கூட்டப்பட்ட இத்தருணத்தில் தனது முதலாம் ஆண்டு நிறைவைக் கண்ட சென்னை மியூசிக் அகாடமியில்

நடந்த சில கர்னாடக இசைக் கச்சேரிகள்தாம் பின்னர் மார்கழி உற்சவம் என்ற பெயரில் நகரெங்கும் நடைபெறத் தொடங்கிய இசை விழாவின் அடிப்படையாக விளங்கின.

அந்தக் காலக் கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக விளங்கிய வழக்கறிஞர்கள் எல்லாம் கர்நாடக இசையில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றவர்களாக இருந்தார்கள். தனிநபர் நினைவின் பொருட்டுத் துவக்கப்படாத உலகின் மிகப்பெரிய ஒரே இசை வைபவம் என்ற பெருமையுடைய சென்னை இசை விழா தொடர்ந்து மார்கழி மாதத்தில் நடை பெறுவதற்குப் பல காரணங்கள் இருந்தன.

பார்த்தசாரதி சபா போன்ற சில சபாக்கள் மியூசிக் அகாடமிக்கு முன்பே தொடங்கப்பட்டு (தொடங்கப்பட்ட ஆண்டு 1900) இருந்தாலும் அவற்றின் நிகழ்ச்சிகளுக்குரிய கால அட்டவணை வரையறுக்கப்படாமல் இருந்தது.

மியூசிக் அகாடமியின் ஆதரவளர்களாக இருந்த வழக்கறிஞர்களுக்கு விடுமுறையாக அமைந்த டிசம்பர் மாதக் கடைசி வாரம் வருடாந்தர நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கும் கலந்துகொள்வதற்கும் வசதியாக இருந்ததுதான் முதல் காரணமாக அமைந்தது.

கடுமையான வெய்யிலும் கடுப்பேற்றும் மழையும் இல்லாத மிதமான பருவ நிலை நிலவும் அச்சமயத்தில் மனதிற்கு இதமான கர்நாடக இசையைக் கேட்பது சுகமான அனுபவமாக மாறியது.

மெல்ல மெல்ல இசை விழாவின் ஒரு அம்சமாக இருக்கத்தொடங்கிய கேண்டீன்களும் டிசம்பரில் விழா நடை பெறுவதை வலுப்படுத்தின. சமையல் கலைஞர்களுக்கு மார்கழி மாதம் திருமண காண்டிராட்கள் கிடைக்காத சமயமாக இருந்ததால் போட்டி போட்டுக்கொண்டு இசை விழா சமயத்தில் தங்கள் திறமைகளை அங்கு ஏற்று நடத்தும் கேண்டீன்களில் அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

இப்படித் தொடங்கிய இசை விழா இன்று சென்னையின் ஒரு முக்கிய கலாச்சார அடையாளமாகத் திகழ்கின்றது. சுமார் 100 சபாக்களில் 500க்கும் அதிகமான கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்று 5000க்கும் மேற்பட்ட கச்சேரிகளை நேரில் கேட்டு ரசிப்பதற்காக இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பல வெளி நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் சென்னை வருகிறார்கள்.

முன்கூட்டியே திட்டமிடாமல் வெளி நாடுகளிலிருந்து இம்மாதம் சென்னை வருபவர்கள் விமானப் பயணச்சீட்டு கிடைக்காமல் 600 முதல் 700 டாலர் வரை கொடுக்க வேண்டியதாக இருக்குமளவிற்கு உலகம் முழுவதும் புகழ் பெற்றுள்ள இசை நிகழ்வாகச் சென்னை இசை விழா விளங்குகிறது. ஆனால் இதன் கசப்பான மறு பக்கமாக இருக்கும் ஒரு உண்மையையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

கர்நாடக இசையின் மையமாகச் சென்னை திகழ்வது பற்றியும் அங்கு நடைபெறும் இசை விழா பற்றியும் இந்தியாவின் பெரும்பான்மையான இசை ரசிகர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை. தென் இந்தியா எனப்படும் நான்கு மாநிலங்களைத் தாண்டி அறிமுகம் இல்லாத அவல நிலைக்கு இந்திய அரசும் ஒரு காரணம். இந்தியாவின் முக்கியமான பாராம்பரிய இசை விழா என்று விளமபரப்படுத்தப்படும் அதிகாராப்பூர்வ மற்றும் கூகுள் பட்டியல்களில் சென்னை விழாவிற்கு உரிய இடம் இல்லை.

இந்தியாவின் மிகப்பெரிய பாரம்பரிய இசை விழாக்களாக அறியப்படும் தான்சேன் இசை விழா, ஹரி வல்லப விழா, கந்தர்வ விழா ஆகிய எல்லாம் ஒரு குறிபிட்ட இடத்தில் சில தினங்களுக்கு மட்டுமே நடைபெறும் இந்துஸ்தானி இசை நிகழ்ச்சிகள். இந்துஸ்தானி இசையின் ஒரு குறிப்பிட்ட {கரானா என்ற} இசை வடிவத்தை மட்டும் முன்னிறுத்தி நடைபெறும் இந்த விழாக்கள் போல் அல்ல சென்னை இசை விழா.

ஒரே சமயத்தில் சென்னையின் பல இடங்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை இடைவிடாது இலவசமாகவும் கட்டணத்துடனும் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் வாய்ப்பாடு, வாத்தியம், ஹரிகதை, பரத கதக் மற்றும் மோகினி நடனங்கள் ஆகிய கர்நாடக இசையின் அனைத்து இசை வடிவங்கள் மட்டுமின்றி ஹிந்துஸ்தானி இசை நிகழ்வுகளுக்கும் இடம் உண்டு. அதிசயமானதும் அபூர்வமானதும் ஆகத் திகழும் சென்னையின் இந்த அற்புத கலை நிகழ்வைப் போற்றிக் காப்பது சென்னையின் கலாச்சாரப் பதிவுகளைப் போற்றுவதற்கு இணையானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x