Last Updated : 01 Dec, 2013 12:00 AM

 

Published : 01 Dec 2013 12:00 AM
Last Updated : 01 Dec 2013 12:00 AM

இசைப் பயணம் என்பது முடிவற்ற வேட்கை - நிஷா ராஜகோபாலன்

இசைத் துறையில் முக்கியமான விருதுகளில் ஒன்றான "இசைப் பேரொளி" எனும் விருதைப் பெறும் நிஷா ராஜகோபாலன் (அரவிந்த்), பரவசத்தில் இருக்கிறார்.

"செய்தியைக் கேள்விப்பட்ட உடன் என்னுள் ஒரு வித சிலிர்ப்பும் எழுச்சியும் உண்டானது. பெயர் பெற்ற பாடகர்கள் பலர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். அந்த வரிசையில் நானும் இருப்பது எனக்கு மிகுந்த உவகையைத் தந்தது" என்று கூறும் நிஷா, 2011ஆம் ஆண்டின் ‘எம். எஸ். சுப்புலக்ஷ்மி நினைவு விரு’தையும் பெற்றுள்ளார். இசைப் பேரொளி விருதை இன்று (டிசம்பர் 1) பெறும் நிஷாவிடம் பேசியதிலிருந்து....

இசைப் பேரொளி விருதைக் கொடுத்து என்னை கௌரவித்த கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு எனது நன்றி. மற்ற சபாக்களைப் போலவே எல்லா வருடமும் எனக்கும் எனது தாயாருக்கும் பாட வாய்ப்பளித்துள்ளது, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ்.

குருநாதர்கள் பற்றி....

இசையைப் பொறுத்தவரையில் எனது முதல் அத்தியாயத்தைத் துவக்கியவர் டி.ஆர்.சுப்ரமணியம் (டி.ஆர்.எஸ்.) அவர்கள்தான். எங்களது குடும்பம் கனடா நாட்டில் இருந்தபோது அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் ஆலயத்திற்கு அடிக்கடி செல்வோம். ஒரு நாள் அங்கு அவரைச் சந்தித்தோம். நான் பாடுவதைக் கேட்ட அவர், இன்னும் மூன்று மாதங்கள் தான் அங்கிருப்பதாகவும், கற்றுக்கொள்ளத் தயாரா என்றும் கேட்டார். ஏற்றுக்கொண்டு, வாரத்தின் கடைசி இரு நாட்களில், 6 மணி நேரம் காரில் பயணம் செய்து அவரிடம் பாடம் கற்றேன். இது நடந்தது 1991இல்.

என்னை ஊக்குவித்த சக்தியே அவர்தான். "கொடி கட்டிட்ட போ" என்று வாயார வாழ்த்துவார். அவரது பரிந்துரையின் பேரில்தான் நாங்கள் இந்தியாவிற்கு இடம் மாறினோம்.

இங்குள்ள சங்கீத உலகத்தில் மூழ்கும் பேறு பெற்றோம். முதலில் புது டெல்லி. பின்பு 1995 முதல் சென்னைவாசிகளானோம். டி.ஆர்.எஸ். டெல்லி பல்கலைக்கழகத்தில் பணி புரிந்துகொண்டிருந்ததால் சென்னை வர இயலவில்லை. டி.ஆர்.எஸ்.ஸின் ஆசி பெற்று, வித்வான் பி.எஸ். நாராயணசாமியிடமும், விதுஷி சுகுணா வரதாச்சாரியிடமும் கற்றுக்கொண்டுவருகிறேன்.

இந்த விருது பெறும் நேரத்தில் டி.ஆர்.எஸ். சார் ஆசீர்வாதம் அளிக்க இங்கில்லையே என்பதில் எனக்கு சற்று வருத்தமே. எனது முதல் குரு என்றால் அது எனது தாயார், திருமதி வசுந்தரா ராஜகோபாலன். இவர் முதலில் கற்றது கோபால ஐயரிடம். கோபால ஐயர் கோடீஸ்வர ஐயரின் நெருங்கிய உறவினர்.

ஒரு முறை ஸர்வாணி சங்கீத சபாவிற்காக குமார எட்டேந்திராவின் பாடல்களைப் பாடினீர்கள். அந்த அனுபவம்....

நான் இந்த தீமை எடுத்துக்கொண்டதால் நிறையக் கற்றுக்கொண்டேன். எட்டேந்திராவைப் பற்றி யாரைக் கேட்டாலும் அதிகம் பரிச்சயமில்லை என்ற பதிலே வந்தது. நொட்டேஷனும் கிடைக்கவில்லை. சங்கீத சம்பிரதாயப் பிரதர்சினியில் இருந்தது.

ஆனால் அதைப் புரிந்துகொண்டு பாடும் நிலைக்குக் கொண்டுவருவது அசுர வேலையாக இருந்தது. இது போல ஒரு குறிப்பிட்ட பாடலாசிரியர் அல்லது ஒரு கருத்து பற்றிப் பாடுவதால், கச்சேரியின் தன்மை குறுக்கப்படலாம். இருப்பினும் பரவலான ரசிகத்தன்மை உடையவர்கள் புதியவற்றை எங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். அதை வழங்குவது எங்கள் கடமையல்லவா? இது போலவே ஒலி சேம்பர் கச்சேரிகள் நடத்தப்பட்டபோது கௌரி ராம்நாராயண், தாமரை எனும் பொருளைக் கொடுத்துப் பாடப் பணித்தார்.

பொதுவான பாடல்களாக அல்லாமல் ஜி.என்.பி.யின் என் மனத் தாமரை (ரீதிகௌளை) போன்றவற்றைக் கற்றுப் பாட இது ஒரு வாய்ப்பாகிவிட்டது. சௌந்தரராஜம் (பிருந்தாவன சாரங்கா) எனும் தீக்ஷிதர் க்ருதியில் அவர் தாமரையையும் கடவுளரையும் எந்த அளவிற்கு இணைத்துப் பாடியுள்ளார் என்பதையும் அறிய முடிந்தது. முடிவில் சரியாக வெளிவந்து ரசிகர்களுக்கும் பிடித்துப் போய்விட்டது. இன்னும் வேறென்ன வேண்டும்?

குடும்பத்துடன் இசை பற்றிக் கலந்துரையாடுவீர்களா?

நான் இந்த அளவிற்கு இசையில் ஆர்வம்கொண்டு இப்பொழுதுள்ள நிலையை அடைந்ததற்கு முழு காரணம் எனது பெற்றோர்களே.

என் அக்கா தீபா, நடனமாடுவாள். முழுத் தேர்ச்சி பெற்றவர். தங்கையும் பி.எஸ்.என். சாரிடம் இசை பயின்றுள்ளாள். டி, ருக்மிணியிடம் வயலின் பாடம். மூன்றும் பெண்களாக இருந்தும், எனது பெற்றோர் எங்கள் மனதிற்குப் பிடித்ததையே நாங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணினார்கள். நிரந்தர மாதச் சம்பளத் தேவை என்ற நிர்ப்பந்தத்திற்கு எங்களை உள்ளாக்கவில்லை. தவிர இதற்கு முன் குறிப்பிட்டதுபோல எங்கள் குடும்பத்தினர் எல்லோரிடமும் ஒரு கலைத்தன்மை குடிகொண்டிருந்தது. விவாதம் என்றால் அது இப்படி அமையும். என்னுடைய ஒரு கச்சேரி முடிந்த பின்னர் அதை ஒரு நடுநிலைத் தன்மையுடன் சார்பற்ற வகையில் அலசிப் பார்த்துவிடுவோம். இன்று ஷண்முகப்ரியா சரியாக அமையவில்லை என்றால், அதை நான் ஒப்புக் கொள்வேன். எனது பெற்றோரும் சரி, என் புகுந்த வீட்டில் உள்ளவர்களும் சரி, என்னை ஊக்குவிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துவார்கள். சென்னையில் இருக்கும் வேளைகளில் எனது கணவர் அரவிந்த் (ஜெட் ஏர்வேஸில் விமான ஓட்டுநர்) உடனிருப்பார், மற்ற நேரங்களில் என் தாயார்.

எப்படிப் பயிற்சி செய்கிறீர்கள்? குரலை வளப்படுத்துவதற்காக வாய்ஸ் கல்சர் போன்ற பயிற்சிகள் உண்டா?

(சிரித்துவிட்டு) பாடிக்கொண்டே இருப்பேன். விடியற்காலையில் பாடுவதெல்லாம் இல்லை. கச்சேரி இருக்கும் நாட்களில் குரலை வருத்துவதில்லை. தினம் பிராணாயாமம் பயிற்சி செய்வதுண்டு. இந்த வாய்ஸ் கல்சர் நமது கர்நாடக இசையிலேயே நமக்குத் தெரியாமலேயே நிலைபெற்றுள்ளது. எல்லா வரிசைகளையும், ஜண்டை, தாட்டு, எச்சுஸ்தாயி, அலங்காரங்கள், ஆகியவற்றை எல்லா ராகங்களிலும் பாடிப் பாருங்கள், இது புரியும். குரல் பக்குவப்படும். இதைப் பற்றி டி.ஆர்.எஸ். சார் அடிக்கடி பேசுவார். நான் லிவர்பூலில் (இங்கிலாந்து) நடத்திய ஒரு பயிலரங்கத்தில் இதைக் குறிப்பிட்டிருந்தேன். ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

பாடும் விருத்தங்கள் பற்றி...

விருத்தங்களின் விற்பன்னர் செதலபதி பாலசுப்பிரமணியனைப் பற்றித்தான் சொல்ல வேண்டும். இப்படியும் பாட முடியுமா என்று எண்ண வைப்பவர். அவர் பாடுவதைத்தான் நான் பின்பற்றுகிறேன். அவரைப் போல எப்பொழுது என்னால் பாட முடியும் என்று என்னையே நான் அடிக்கடி கேட்டுக்கொள்வேன். யாருக்கும் எதையும் சொல்லிக் கொடுக்கும் தன்மை, கள்ளங்கபடமற்ற மனது, எதையுமே எதிர்பார்க்கத் தெரியாத எளிமை ஆகிய குணங்கள் கொண்டவர்.

இன்று நான் கொஞ்சம் வளர்ந்த இந்த நிலையில் அவரது அள்ள அள்ளக் குறையாத பாடல்களையும் விருத்தங்களையும் முன்னைக் காட்டிலும் இன்னும் பெரிதளவு அனுபவிக்கிறேன். அன்சங் ஹீரோ (unsung hero) என்பார்களே, அதுதான் அவர்.

நீங்களும் இளைமையானவர்தான். இருந்தாலும் இளைஞர்களுக்கென்று

ஓரிரு வார்த்தைகள்...

இசைப் பயணம் என்பது ஒரு முடிவற்ற வேட்கை. நாளைக்கு அமைவது இன்று பாடியதைவிடவும் இன்னும் சிறப்பாக அமைய வேண்டும். இதுவே என் ஆவல்.

கச்சேரி செய்யும் பொழுது கேட்பவர்களை மனதில் கொள்ளுங்கள். அவர்களது அடிப்படை உணர்ச்சிகளுடன் உங்களுக்கு நேரடித் தொடர்பு இருப்பதை நீங்கள் தவறாமல் உணர வேண்டும். எங்கு பாடினாலும் உண்மைத்தன்மையுடன் பாடுங்கள். பெரிய சபாவாக இருந்தாலும் சரி, கல்யாணக் கச்சேரியாக இருந்தாலும் சரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x