Published : 01 Mar 2014 12:00 AM
Last Updated : 01 Mar 2014 12:00 AM

சிரிக்கும் புத்தரை வரைய ஆசை- ஓவியர் நடேஷ் சிறப்புப் பேட்டி

ஓவியர் நடேஷ், தமிழ்நாட்டில் இன்ஸ்டாலேஷன் ஆர்ட் எனப்படும் நிர்மாணக் கலைப் படைப்புகளை உருவாக்கியதில் முன்னோடி. நவீன நாடகங்களுக்கு ஒளி இயக்கம் செய்பவர், எழுத்தாளர். 25 ஆண்டுகளாக நவீன ஓவியப் பரப்பில் தீவிரமாக இயங்கிவருகிறார். கூத்துப் பட்டறை நிறுவனரும், தமிழின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவருமான ந.முத்துசாமியின் புதல்வர்.

நீங்கள் எப்போது ஓவியம் வரையத் தொடங்கினீர்கள்?

நான் மூணுவயதில் படம் போட ஆரம்பிச்சேன். என்னோட அம்மா இல்லையில்லைன்னு சொல்றாங்க. ஐந்துவயதுன்னு சொல்றாங்க. அம்மா சொல்றதுதான் சரியாக இருக்கும்.

அந்தக் காலத்துல சாக்பீஸ் கொடுக்க மாட்டாங்க. மாக்கல் சட்டி உடைந்த சில்லை எடுத்துட்டு தரை, சுவர் எல்லாத்திலேயும் கிறுக்கிக் கொண்டே இருப்பேன். சுத்தமா இருக்கிற சுவர் எனக்கு அந்த வயசுல பிடிச்சதே இல்லை. சிதிலமா, உடைஞ்சு கிடக்கிற சுவர்கள் எனக்குப் பிடிக்கும். அதில் உள்ள வடிவங்கள் என்னை ஏதேதோ செய்துகொண்டிருக்கும்.

உங்களுக்கு ஆசிரியர்கள் என்று யாரைச் சொல்வீர்கள்?

எனக்கு ரத்தமும் சதையுமாகத்தான் குருக்கள் இருக்க வேண்டும். என்னுடைய இயல்புக்கேற்ற குரு என்றால் அவன் லியானர்டோ டாவின்சி தான். அவன் என்னைப் போல எல்லா வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறான். ஓவியம் மட்டும் இல்லாம அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் அவன் ஈடுபட்டிருக்கிறான். பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் ஐரோப்பிய ஓவிய முறைகள், நீர்வண்ண ஓவியங்களை வரைவது எல்லாவற்றையும் படிச்சிருக்கேன். இங்கே என்னுடைய குருமார்னு சொன்னால் ஆர்.பி.பாஸ்கரன், ஆதிமூலம் போன்றவங்கதான். ஆர்.பி.பாஸ்கரன் தான் கோடை எங்கே உடைக்கணும்னு கற்றுத்தந்தார். ஸ்டில் லைஃப் ஓவியத்தில் ஒரு தட்டை வரையும்போது, கோடை எங்கே தூக்கணும்னு அவர்தான் சொன்னார். தட்டோட வடிவத்தை உணர்த்துகிற கோடு எங்கே இருக்குது என்பதை அவர் சொல்லிக் கொடுத்தாரு. அதுவரை புத்தகக் கட்டோட அலைஞ்சுகிட்டிருந்த என்னை, பாக்கெட்ல ஒரு கரித்துண்டை போட்டுட்டு சுதந்திரமாக நடந்துவருவேன். பள்ளிக்கூடத்தில் என் கையில் இருந்த ஓவிய வேகத்தை திரும்ப மீட்டுக்கொடுத்தார். ஆதிமூலம் ஒரு நல்ல கலரிஸ்ட்; நன்றாக கலர் வைப்பார். அவர் மூலமாகத்தானே நானும் வளர்ந்தேன். ஓவியர் சந்ரு என்னைத் திருப்பிவிட்ட மனுஷன்களில் ஒருவர். அச்சுதன் கூடலூரும் ரொம்ப முக்கியம். வசுதா தொழூர், டக்ளஸ் என்று எனக்கு பல குருமார்கள் இருக்காங்க. எழுத்தாளர் கி.அ.சச்சிதானந்தமும் எனக்கு குருதான். அவர் எழுதவே வேண்டாம். நடமாடும் சிறுகதை அவர்.



தமிழ் சிறுபத்திரிக்கைகளில் நவீன ஓவியர்களின் பங்களிப்பு தொடர்ந்து இருக்கிறது..அந்த உறவு உங்களது படைப்பை செழுமைப்படுத்தியிருக்கிறதா?



தமிழ் சிறுபத்திரிக்கைக்காரர்கள் அவர்கள் எழுதுகிற எழுத்துக்கு கோடு போடுற ஆள்தான் ஓவியன்னு நினைக்கிறாங்க. நான் கதையைப் படிச்சுட்டு கோடு போடவே மாட்டேன். நான் ஏற்கெனவே வரைந்த கோட்டோவியத்தைத் தான் கொடுப்பேன். ஒவ்வொரு கலைஞனும் எழுத்தாளன் மாதிரிதான் வாழுகிறான். நான் எழுத்தாளனுக்கு பொம்மை போடறவன் மட்டும் இல்லை. நானும் கவிதையெல்லாம் எழுதுவேன். அதை வெளியிட்டது இல்லை.

ஐயோ இந்த வார்த்தை கொலை பண்ணுதே, அந்த வார்த்தைக்கிட்ட இருந்து எப்படித் தப்பிப்பேன் என்று நினைத்த நேரம் எல்லாம் உண்டு. மரணாவஸ்தை கொடுக்கும்.



நவீன ஓவியங்களுக்கு அர்த்தம் இருக்கிறதா?



இயற்கை, எந்த அர்த்தத்தையும் உருவாக்குவதில்லை. சும்மா இருக்கிறது. நாம் வாழும் கலாச்சாரம் தான் எல்லாத்திலயும் அர்த்தத்தை உருவாக்கிப் பார்க்குது.

இயற்கை இரண்டாக இருக்கு. படுபயங்கரமான குளிர், படுபயங்கர வெப்பமாக இருக்கு. ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கு. இரவும் பகலுமாக இருக்கு. இதை எப்போது மனிதன் இரண்டாகப் பார்க்காமல் ஒன்றாகப் பார்க்கத் தொடங்குகிறானோ அப்போதுதான் நமக்கு ஞானம் வரும். இயற்கையை விட்டுவிட்டு மனிதன் கலாச்சாரத்துக்குள் இறங்கும்போது தகராறும் முரண்பாடும் தொடங்கிவிடுகிறது. எப்போ பார்த்தாலும் அதனால்தான் சண்டை இந்த உலகத்தில் நடந்துகொண்டே இருக்கிறது.

என்னோட ஓவியங்களைப் பொறுத்தவரை இந்த இரண்டு முரண்களையும் நான் வைக்கிறேன். ஆனால் இரண்டும் அடிச்சுக்காம முட்டிக்காம மோதாம இருக்கணும். பிரச்னையில்லாம வாழணும். உதாரணத்துக்குச் சொல்கிறேன். பச்சையையும் சிவப்பையும் பிரதான வண்ணங்கள்னு சொல்வாங்க. பச்சையையும் சிவப்பையும் பக்கத்துல பக்கத்துல வைக்கும்போது கடுமையாக அடிக்கும், தொந்தரவு செய்யும். அதைப் பக்கத்திலேயே வைத்து அதை வாழவிடணும்னு நினைக்கிறேன். ஆண், பெண் இரண்டுபேரும் சண்டைபோட்டா எப்படி குழந்தை பெறும். இரண்டுபேரும் இணைந்தால்தானே குழந்தை பிறக்குது. ஆனால் மனுஷனுக்கு இரண்டு முரண்கள் தகராறு பண்ணிகிட்டே இருக்கணுங்கறது விருப்பமாக இருக்கு. அவனுடைய அவசியமாகவும் இருக்குது.

முரண்களற்ற ஆனந்தமான நிலைதான் உங்கள் படைப்புகளோட லட்சியம்னு சொல்றீங்களா?

ஆமாம். ஆனால் சந்தோஷமான நிலையில் படைப்பு வரும்னு சொல்ல முடியாது. நல்ல மனநிலையைக் கண்டுபிடித்தால் தான் நல்ல சந்தோஷத்தை படைப்பில் கொண்டுவர முடியும். ஆனால் சந்தோஷமான மனநிலையில் ஒரு படைப்பு வெளிப்பாடு சாத்தியமான்னும் தெரியவில்லை. நகைச்சுவை உணர்வுக்குள் அடக்கப்பட்ட வன்முறை இருக்கிற மாதிரியே, பிரச்னைகள் நீடிப்பதில் மனிதனுக்கு சந்தோஷம் இருக்கத்தான் செய்யுது. விழுந்து விழுந்து ஒருவன் சிரிக்கிறான் எனில் அதற்குப் பின் பதப்படுத்தப்பட்ட வன்முறை உள்ளது.

நல்ல சந்தோஷமான மனநிலையில் ஒருவன் சிரிக்கவேண்டும் என்ற அவசியமே கிடையாது.

படைப்பு என்பது இயற்கையின் ஒழுங்கைப் புரிந்துகொள்வதற்கான வழிமுறை என்று நீங்கள் பார்க்கிறீர்களா?



சில அனுபவங்கள் ஞாபகத்துக்கு வருது. நான் ஒருமுறை பழைய மகாபலிபுரம் சாலையில் ஏதோ ஒன்றை நினைச்சுக்கிட்டு வேகமாகப் போய்க்கிட்டிருக்கேன். கன்னாபின்னான்னு வண்டி போகுது. ஒரு நூறு மாடு என்னை நோக்கி வந்துக்கிட்டிருக்குது. நான் வேகத்தைக் கட்டுப்படுத்தறேன். ஆனால் மோதறதைத் தவிர வேறு வழியே இல்லைன்னு தெரியுது. ஆகா செத்தேன் என்றே நினைத்துக் கொண்டேன். ப்ரேக் போட்டாலும் அடிச்சுக் கீழே தான் விழணும். ஆனால் மாடுகளை மோதுறதுக்கு பத்து அங்குலம் இருக்கும்போது, மோசஸூக்கு வழிவிட்டு கடல் பிரிஞ்சமாதிரி எல்லா மாடுகளும் பிரிஞ்சு எனக்கு வழிவிட்டுது. நான் உள்ளே போயிட்டேன். எப்படித் தப்பிச்சேன்னே எனக்குத் தெரியவில்லை. இயற்கையில் அந்த மாடுகளுக்குள் அர்த்தம் இல்லாத ஒரு தொடர்பு நடக்கிறது. என் பைக் அடிச்சா அதுக்கும் வலிக்கும். எனக்கும் வலிக்கும். ஏன் அந்த மாடுகள் வழிவிட்டன. தப்பிச்சுட்டேன். அதுபோன்ற அனுபவங்கள் வழியாகத் தான் படைப்பு வெளியே வரும்.



உங்களுக்கு சிறுவயதிலேயே கூத்துக்கலைகளைப் பார்க்கும் பின்னணி இருந்திருக்குது.. நவீன நாடகங்களுக்கு நீங்கள் ஒளியமைப்பு செய்கிறீர்கள்…இன்ஸ்டாலேசன் என்னும் நிர்மாணக் கலையிலும் நீங்கள் முன்னோடியாக இருந்திருக்கிறீர்கள்…இப்படிப்பட்ட பின்னணியில் உங்களை என்னவிதமான கலைஞர்னு வகைப்படுத்துவீர்கள்?



கூத்துதான் என்னோட நிறங்களை அப்பட்டமாக வைத்திருக்கிறது. கூத்துக்கலைஞர்கள் போடும் உடைகளிலிருந்து என்னோட வண்ணங்களை எடுத்துக்கிட்டேன். சோழர்கால, பல்லவர் சிற்பங்களும் என்னுடைய உருவங்களின் மீது தாக்கம் செலுத்தியுள்ளது.

இன்ஸ்டாலேசன் படைப்பைப் பொறுத்தவரைக்கும் எழுத்து, ஓவியம், புகைப்படம் எல்லாத்தையும் அதில் சேர்த்துப் போடமுடியும். பணமும் அதிகம் தேவைப்படும் வேலை அது. நான் சமீபத்தில் ஒரு இன்ஸ்டாலேசன் படைப்பு செய்துகொண்டிருக்கிறேன்.

என்னுடைய சாப்பாடுத் தட்டு ஒன்று இருக்கிறது. சின்னவயதிலிருந்தே அது வீட்டில் இருக்கிறது. அந்தத் தட்டில் பொம்மைத் துப்பாக்கியை வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்தேன். அதற்கு ‘‘ஃப்ரோசன் கன் ஆன் மை ஈட்டிங் ப்ளேட்’’ என்று அதற்குப் பெயர் வைத்தேன். என் சாப்பாட்டுத் தட்டில் உறைந்த துப்பாக்கி’ என்பது ஒரு படிமம். சாப்பாடுத் தட்டும் பளபளவென்று இருக்கவேண்டும். பனிக்கட்டியும் பார்த்தாலே சில்லென்று இருத்தல் வேண்டும். அதற்கு புகைப்படம் எடுப்பது அவசியம். அதை நான் புகைப்படம் எடுக்கப்போகிறேன். அந்தப் புகைப்படத்துக்குக் கீழே “TERRORISM” என்ற வார்த்தைக்கு வெப்ஸ்டர்ஸ் அகராதி கொடுத்திருக்கும் அர்த்தத்தை அச்சிடுகிறேன். அடுத்த பத்தியில் நடேஷின் அர்த்தம் இருக்கும். அதுதான் எனது சாப்பாடுத் தட்டில் துப்பாக்கி என்பது.

இன்னொரு உணவுத்தட்டில் பெட்ரோல் கன்னை வாங்கி உறையவைத்தேன். அது அடுத்த படம். இந்த இரண்டு புகைப்படங்களையும் வைத்து அதற்குக் கீழேயும் எது டெரரிசம் என்று கேள்வி இருக்கும்.

கனிம எரிபொருளுக்காக யுத்தம் செய்பவனைத்தான் பெரிய தீவிரவாதி என்று நினைக்கிறேன். ஓவியனாக என்னோட இந்தக் கேள்வி அரசியல் ரீதியானது, சுற்றுச்சூழியல் ரீதியான கேள்வி.

தமிழ்நாட்டில் நவீன ஓவியத்திற்கு ஒரு மரபு உருவாகி நூற்றாண்டுகளாகப் போகிறது. இந்தச் சூழ்நிலையில் புகைப்படங்களைப் போல தத்ரூப சித்திரங்களுக்குத் திரும்ப மதிப்பு வந்துள்ளதே?

பின்நவீனத்துவக் கலையைப் பொறுத்தவரை, வர்த்தக ஓவியங்கள் உட்பட எல்லாவற்றையும் கலையாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. இங்கே எது விற்கும் என்பதை ஓவியங்களாகப் போட்டு காசு பார்ப்பவர்களும் உண்டு. அதில் பெரிய தத்துவ உள்ளடக்கத்திற்கு எல்லாம் வேலையே இல்லை. இன்று பேஸ்புக் வந்துவிட்டது. இதற்கு என்ன அர்த்தம். கடைசியாக முகம்தான் புத்தகம் என்ற இடத்திற்கு மனிதகுலம் வந்திருக்கிறது. முகத்தைத் தவிர வேறு தனித்துவம் இல்லை என்ற தீர்மானத்திற்கு தள்ளிவிட்டார்கள்.

சென்னை ஓவியக் கல்லூரி முதலில் கைவினைத் தொழில்களுக்கு பயிற்சி கொடுக்கிற இடமாகத் தான் இருந்தது..பின்னால அது நவீன ஓவியர்களை உருவாக்கிய இடமாக அறியப்படுகிறது... இப்போது கைவினைக் கலைகள் மற்றும் தொழில்நுட்பம் அங்கே இல்லாமல் ஆகிவிட்டதே…

ஒரு அம்சம் பிரதானமாகத் தலைதூக்கிறப்போ, இன்னொரு விஷயம் நலிஞ்சு போயிடுது. நவீன ஓவியம் எவ்வளவு முக்கியமோ, கைவினைக் கலைஞர்களின் தொழில்நுட்பமும் அவசியம் என்ற நிலை வருவதற்கு 80 ஆண்டுகள் இங்கே தேவைப்பட்டுள்ளது. ஆனால் ஐரோப்பாவில் எல்லா கலைகளையும், கைவினைத் தொழில்களையும் தொடர்ந்து போஷிச்சு பாதுகாத்து வைத்திருக்கிறான். எதையும் அவன் அழியவிடுவதில்லை.

நுண்கலைகளை மதிப்பதில் இந்தியா போன்ற நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் பெரிய வித்தியாசம் இன்னும் தொடர்கிறது இல்லையா?

கடவுளை அவர்கள் வைத்திருந்த இடத்தில் கலைக்கு இடம் கொடுத்து விட்டார்கள். கோயிலுக்கு இருக்கும் மதிப்பை அருங்காட்சியகங்களுக்குக் கொடுத்துள்ளார்கள். அருங்காட்சியகங்களுக்குக் கட்டணமும் குறைவு.



ஓவியங்களில் பிராந்தியக் கூறுகளை அடையாளம் காணமுடியுமா? உதாரணத்திற்கு தமிழ் ஓவியர்னு ஒருவரை எப்படி சொல்லமுடிகிறது?

ஒரு சினிமாவை எப்படி தமிழ் சினிமா என்று அடையாளம் காண்கிறோம். நான் என்னுடைய ஓவியங்களில் அடர்த்தியாகத் தான் வண்ணங்களைப் பயன்படுத்துகிறேன். ஆதிமூலமும் அடர்த்தியாகத் தான் வைத்தார். எட்டு மாதங்கள் உஷ்ணம் தகிக்கும் இடம் இது. அந்த வெப்பம் நமது ஓவியங்களிலும் பிரதிபலிக்கும். எனது ஓவியத்தில் ஏன் பச்சை நிறம் ஆதிக்கமாக இருக்குதுன்னு, வடநாட்டு ஓவியர் ஒருவர் கேட்டாரு. நான் பார்க்கும் இடமெல்லாம் பச்சையாக, மரங்களாக இருக்கு.

உங்கள் ஓவியங்களில் பறவைகளும், குருவிகளும் வருகின்றன. அவை காணாமல் போவது தொடர்பான துயரங்களை ஓவியமாக்குகிறீர்களா?

மனிதனும் பறவைகளைத் துரத்தியடிப்பது போலத்தான் துரத்தியடிக்கப்படுகிறான். அந்த ஓவியங்களில் ஒரு ஒப்பாரி இருக்கிறது என்று நண்பர் பன்னீர்செல்வம் சொன்னார். அது என்னுடைய ஒப்பாரியாக கூட இருக்கலாம். சில பேர் அதை இரைச்சல் என்பார்கள். நம்முடைய கலாச்சாரமே இரைச்சலானதுதானே.

உங்கள் ஓவியங்களில் தொடர்வரிசையாக புலிகளின் உருவத்தை பல்வேறு பண்புகளில் சித்திரமாக்கியுள்ளீர்கள் . அதைப்பற்றி சொல்லுங்கள்…

இயற்கை ஒரு ஒழுங்கில் இருக்கு. அதற்கான பெரிய அடையாளமாக புலியைப் பார்க்கிறேன். வரிக்குதிரையின் உடலில் உள்ள கோடுகள் கோணல்மாணலாகப் போடப்பட்டிருப்பது போலத் தெரிந்தாலும் படுபயங்கர ஒழுங்கு வடிவில் இருக்கும். வேப்பமரத்தின் கீழே படுத்துக் கொண்டு மரத்தைப் பார்த்தீர்கள் என்றால், இலைக்கூட்டம் அத்தனையும் ஒரு சீரொழுங்கில், வடிவத்தில் இருக்கும். புலி நடக்கும்போது, பார்த்தீர்கள் என்றால் அதன் கோடுகள் சேர்ந்து பிரிவதைப் பார்ப்பது அற்புதமான நிகழ்வாக இருக்கும். ஒரு போதையே வரும். அதன் அழகில் மயங்கிதான் தொடர்ந்து புலியைப் போட்டுக்கொண்டே இருந்தேன். புலிவாலைப் பிடித்தது போலத்தான். இப்போது புலி போடுவதை நிறுத்திவிட்டேன்.

சிரிக்கும் புத்தரை ஒரு ஓவியமாகப் போட்டேன். அதைத் தொடரவேண்டும் என்று ஆசை உள்ளது.

அழகுதான் படைப்பாளிகளை கடைசிவரை ஈர்த்துக்கொண்டிருக்கிறதா?

எனக்கு நிறைய அழகான பெண்கள் தோழிகள். எப்போதும் அவர்களை மனரீதியாக காதலித்துக் கொண்டே இருக்கவேண்டும். அழகுதான் காரணம். 20 வருஷம் இருக்கலாம். கோவாவில் நண்பர் ஒருத்தரின் வீட்டில் தங்கியிருந்தேன். அற்புதமான இடம் அது. மழை கொட்டிமுடித்த ஒரு வாரத்திற்குப் பிறகு காலை நடை கிளம்புகிறேன். மழையின் காரணமாக பச்சைப் பசேலென்று புல் எல்லா இடத்திலும் கிளம்பி நிற்கிறது. சூரிய வெளிச்சம் அது மேல் அடிக்கும்போது நிலமே ஒளிருது. மூணு, நாலு மாசம் ஈரமாக இருக்கும் இடம் அது. அப்போதுதான் அட்டகாசமான காட்சி ஒன்றைப் பார்த்தேன். கருப்பு மரம் ஒண்ணு. அந்த மரத்தில் ஒரு கொடி அப்போதான் படரத்தொடங்குது. மரத்தின் இரண்டுபக்கமும் அது சமச்சீராக படர்ந்திருப்பதைப் பார்த்தேன். அந்தக்காட்சியைப் பார்த்தபிறகு எல்லா விஷயங்கள் மீதும் மதிப்பு போயிடுச்சு. நவீன ஓவியம் சார்ந்த என்னோட கருத்துகள் அனைத்தையும் குப்பையில் போட்டுவிட்டேன். அந்தக் கொடியின் சமச்சீர்மையை, அதன் மொழமொழப்பை நான் ஓவியத்தில் கொண்டுவரவேண்டும். ஒரு பக்கம் பெரிய இலை. இன்னொரு பக்க நுனியில் சிறிய இலை. கருப்பு மரத்தில் அழகாக அது ஏறிக்கொண்டிருக்கிறது. அந்தப் பச்சை நிறத்தை நான் இன்னும் கண்டுபிடிக்க ட்ரை பண்ணிக்கிட்டுதான் இருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x