

இதமான குரல் வளம், முத்துஸ்வாமி தீட்சிதரின் பிருந்தாவன ஸாரங்கா ராகத்தில் அமைந்த ‘சௌந்தரராஜம்’ போன்ற கிருதியை விளம்ப காலத்தில் நிர்வகித்துப் பாடும் திறன், ரசிகர்களை எளிதாய்ச் சென்றடையுமாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கீர்த்தனைப் பட்டியல், பக்க வாத்தியக்காரர்களை உற்சாகப்படுத்திப் பாடும் திறன் எல்லாமே தீக்ஷிதாவிடம் அபரிமிதம். குரு ராஜி கோபாலகிருஷ்ணனின் உழைப்பு வீண் போகவில்லை.
பந்துவராளி ராகம் மதிய வேளைக்கு ஏற்றதாய் இருந்தது. கச்சிதமான ஆலாபனை. தீட்சிதரின் வழியில் இது காசிராமக்ரியா என்று அழைக்கப்படுகிறது. ‘விசாலாட்சீம் விஸ்வேச்வரிம்’ என்ற தீட்சிதரின் கிருதியில் ‘காசிம் ராக்னிம் கபாலினிம்’ என்ற வரியில் பொருத்தமாய் நிரவல் செய்தார். இரண்டு காலத்திலும் கோர்வையாய் கல்பனா ஸ்வரங்கள் கைகூடி வந்தன.
நவரஸகானட ராகத்தில் தியாகய்யரின் ‘பலுக கண்ட சக்கெரெனு’ கிருதி; பிருந்தாவன சாரங்கா ராகத்தில் ‘சௌந்தராஜம்’ கிருதிக்குப் பிறகு, விவாதி ராகமான நீதிமதியில் அம்புஜம் கிருஷ்ணாவின் ‘அரவிந்த லோசனனே’. காம்போஜி ராகத்தை அழகாய் முதிர்ச்சியுடன் கையாண்டார். ‘மரகதவல்லி’ கிருதியைப் பாடி கல்பனா ஸ்வரங்களை அரை ஆவர்த்தனத்திலிருந்து ஆரம்பித்து விரிவாய் விவரமாய்ப் பாடினார்.
நேரமின்மையால் சிட்டையாய் தனி ஆவர்த்தனம் வாசித்தார் மிருதங்க வித்வான் கே.ஆர். கணேஷின் சிஷ்யன் ஜே. அரவிந்த். வயலினில் கோவைசந்திரன் பக்கபலமாய் வாசித்தார். இந்தத் தரத்தையும் நிதானத்தையும் தீக்ஷிதா தொடர்ந்து கைப்பிடித்தால் நிரந்தரமான இடத்தைப் பிடிக்கலாம்.
பாட்டு: தீக்ஷிதா, வயலின்: கோவை சந்திரன், மிருதங்கம்: ஜே. அரவிந்த், சபா: பார்த்தசாரதி, ஸ்வாமி சபா, நாள்: ஜன.1, மதியம் 12.30