Last Updated : 08 Mar, 2014 12:00 AM

 

Published : 08 Mar 2014 12:00 AM
Last Updated : 08 Mar 2014 12:00 AM

பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு- கி.பி.9-ம் நூற்றாண்டை சேர்ந்தது

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அரசடிக்குப்பம் எனும் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோயிலை, சிதம்பரம் அண்ணாமலைப் பல் கலைக்கழக வரலாற்றுத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

சிற்பம் மற்றும் கட்டிடக் கலைகளில் புதுமை படைத்தவர்கள் பல்லவ மன்னர்கள். அதைப்போலவே உன்னதமான கலைப் படைப்புகளை தமிழகத்துக்கு வழங்கியவர்கள் சோழ மன்னர்கள். அவர்கள் தங்கள் அரசாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல கோயில்களை எழுப்பியுள்ளனர். அந்தக் கோயில்கள் எல்லாம் காலப் போக்கில் சிதிலமடைந்து இன்று கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அரசடிக்குப்பத்தில் அண்ணா மலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் சிவராம கிருஷ்ணன், ஆய்வு மாணவர் சுசீந்திரன் மற்றும் மாணவர்கள் சிலர் கடந்த இரு மாதங்களாக ஆய்வு மேற்கொண்டபோது பெருங்கற்காலம் முதல் பல்லவர், சோழர் வரையிலான பல வரலாற்றுத் தடயங்களைக் கண்டறிந்துள்ளனர்.

அரசடிக்குப்பத்தில் சிதிலமடைந்து கிடக்கும் சிவாலயத்தில் பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் ஆறு கால பூஜைகள் சிறப்புடன் நடத்தப்பட்டு வந்துள்ளதை, அக்கோயிலின் அமைப்பை வைத்து கண்டறிந்துள் ளனர். ஆனால், அந்த இடம் புதர் மண்டி நச்சு உயிரினங்களின் வாழ்விடமாக இன்று காட்சியளிக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் அகழாய்வு மேற்கொண்டுவரும் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் அரசடிக்குப் பத்தின் வரலாற்றுத் தடயங்கள் குறித்து கூறியதாவது:

பல்லவர் கால சண்டிகேசுவரர்

அரசடிக்குப்பம் ஏரியிலிருந்து கிழக்கே 1 கி.மீ. தொலைவில் வயல்வெளியில் சிவலிங்கமும், அதன் அருகில் அர்த்த பத்மாசன நிலையில் சண்டிகேசுவரர் சிற்பமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரு கரங்களுடன் விளங்கும் சண்டிகேசுவரர் சிற்பத்தில் மூன்று வளைவுகளுடன் கூடிய முப்புரி நூல் தென்படுகிறது. சிலைகளில் முப்புரி நூலை முதன்முதலில் அறி முகப்படுத்தியவர்கள் சோழர்களே. மேலும் இச்சிற்பத்தில் இடம்பெற்ற குண்டலம், ஆரம், கால் காப்பு, கச்சை போன்றவற்றில் பல்லவர் காலத்திய தாக்கம் காணப்படுகிறது. ஆகவே இதன் காலம் கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது உறுதியாகிறது.

10-ம் நூற்றாண்டு சிவலிங்கம்

சண்டிகேசுவரரின் கிழக்கு பக்கத்தில் தெரியும் சிவலிங்கத்தின் பீடமானது பத்ம இதழ் வடிவத்தில் அமைக் கப்பட்டுள்ளதோடு, அதன் ருத்ர பாகத்தில் பிரம்ம சூத்திரமும் காட்டப் பட்டுள்ளது. இதில் சோழர்களின் கலை பாணி தென்படுவதால், இந்த லிங்கம் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனப் புலப்படுகிறது.

விஷ்ணு மற்றும் துர்க்கை

அரசடிக்குப்பம் சிங்கார ராஜன் குளத்தின் தெற்குப் பகுதியில் 130 செ.மீ உயரம் உடைய விஷ்ணு மற்றும் துர்க்கை அம்மன் சிற்பங்கள் உள்ளன. விஷ்ணு சிலையின் தலை கூம்பு வடிவிலும், துர்க்கை சிலை மகுடத்துடன் வடிவமைக் கப்பட்டுள்ளன. இவை 11-ம் நூற் றாண்டின் மத்தியில் படைக்கப் பட்டிருக்க வேண்டும் என்பது இந்த சிலைகளில் தென்படும் வரலாற்று தடயங்களிலிருந்து தெரிகிறது.

பெருங்கற்காலம்

அரசடிக்குப்பத்தின் தெற்குப் பகுதியிலுள்ள ஏரியில் பெருங்கற் காலத்தைச் சேர்ந்த 8 முதுமக்கள் தாழிகள் அதன் மூடுகற்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதி யில் கிடைக்கக்கூடிய லாட்ரைட் கற்களிலிருந்து இரும்பைப் பிரித் தெடுக்க பயன்படும் ஊதுலையின் பாகங்கள் ஏரிக்கரைகளில் கண் டெடுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து பல நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த பெருங்கற்கால மனிதர்கள் இரும்பின் பயனை அறிந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.

சரித்திரம் பேசும் கல் மணிகள்

இவை தவிர, ஏரியின் கிழக்குப் பகுதியில் மேற்கொண்ட ஆய்வின் போது கருப்பு, பச்சை, ஊதா நிறங் களிலான கல் மணிகளும் சிவப்பு நிற மண்பாண்ட ஓடுகளும் கிடைத் துள்ளன.

அரசடிக்குப்பத்தில் கண்டறியப் பட்டுள்ள சிவன் கோயிலைப் போலவே இன்னும் பல இடங்களில் உள்ள சிதிலமடைந்த பழமையான கோயில்களை மீட்டெடுக்கும்போது தான் தமிழர்களின் தொன்மைக் கால வரலாற்றை வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியும்’’ என்றார் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x