Last Updated : 21 Oct, 2013 05:50 PM

 

Published : 21 Oct 2013 05:50 PM
Last Updated : 21 Oct 2013 05:50 PM

அமெரிக்காவில் பொன்னியின் செல்வன்

எம்.ஜி.ஆர். முதல் கமல், மணிரத்னம் வரை பலரும் கனவு கண்ட ஒரு விஷயத்தைச் சத்தமில்லாமல் நடைமுறைப்படுத்தியிருக்கிறார் ஒரு பெண். கடந்த நூற்றாண்டில் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நாவல்களில் ஒன்றான பொன்னியின் செல்வனை மேடையேற்றியிருக்கிறார் அமெரிக்காவில் வசிக்கும் பாகீரதி சேஷப்பன். கல்கியின் வரலாற்றுப் புதினத்திற்கு ரத்தமும் சதையுமாக வடிவம் கொடுத்திருக்கிறார் இவர்.

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு இதைச் செய்வதே கடினம். அமெரிக்காவில் செய்வதென்றால்? அவ்வளவு பெரிய கதையை மூன்று மணிநேர நாடகப் பிரதியாகச் சுருக்க வேண்டும், பொருத்தமான நடிகர்கள் கிடைக்க வேண்டும், அவர்களுக்குத் தமிழ் பேசத் தெரிந்திருக்க வேண்டும், அதிலும் செந்தமிழ் பேசத் தெரிந்திருக்க வெண்டும், அரங்க வடிவமைப்பில் கம்பீரமும் அழகும் இருக்க வேண்டும்... இப்படிப் பல்வேறு சவால்களையும் ஏற்றுக்கொண்டு வெற்றிகரமாகப் பொன்னியின் செல்வன் நாவலுக்கு மேடை வடிவம் கொடுத்திருக்கிறார் பாகீரதி.

பகீரதப் பிரயத்னம் என்று சொல்லத்தக்க விதத்தில் விடாமுயற்சியுடன் இதைச் சாதித்திருக்கும் அபிராமி அஸோஸியேட்ஸ் நிறுவனர் பாகீரதி சென்னை வந்திருந்தபோது அவரைச் சந்திக்க முடிந்தது.

இந்த நாவலை நாடகமாக்க உங்களைத் தூண்டியது எது?

சிறு வயதில் இருந்தே பொன்னியின் செல்வன் ரொம்பப் பிடிக்கும். வாரா வாரம் கல்கியில் தொடராக வந்தபோதே கல்கியின் கதாபாத்திரங்கள், ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரங்களை விஞ்சும் விதத்தில் இருப்பதைக் கவனித்து இருக்கிறேன் . உதாரணமாகக் குந்தவையை எடுத்துக்கொண்டால் சமூகத்தில் மிக வலிமை உள்ள பெண்ணாக சித்தரிக்கப்பட்டு இருப்பாள். அவள் தன் தந்தையிடம் கொண்ட பாசமும், தன் சகோதரனிடம் கொண்ட அன்பும் துல்லியமாக வெளிபடும். குந்தவை தன் சொத்தை எல்லாம், வைத்திய சாலை அமைத்து பொது மக்களின் நலன் காப்பாள். வாழ்க்கையில் நிதர்சனமாக பார்க்கின்ற ஒருவர்தான் வந்தியத்தேவன். தோல்வியில் துவள்வதும், வெற்றியில் உவப்பதும் மனித இயல்பு. இதனைச் சமாளிப்பது எப்படி என்று இந்தக் கதாபாத்திரத்தினை சுற்றியுள்ளவர்கள் மூலம் கல்கி சொல்லி இருப்பார். அந்நாளில் இது வாசகர்களுக்கு ஆகப்பெரிய சக்தியாக இருந்தது. இப்படி எனக்குக் கிடைத்த சக்தியே பொன்னியின் செல்வனை நாடக வடிவாக்கும் துணிவைத் தந்தது.

இந்தியாவில் இல்லாமல் அமெரிக்க அரங்கில் இந்த நாடகத்தை மேடை ஏற்றிய காரணம் என்ன?

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே நாடகம் எழுதி இயக்குவது வழக்கம். அப்பொழுதே பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்கள் மேடையில் உலவினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பேன். மிகுந்த பொருட்செலவு ஏற்படும் என்பதால் இந்தியாவில் சாத்தியப்படவில்லை. அமெரிக்காவிற்குச் சென்ற பின்னரும் இந்த என் ஆர்வம் உயிர்ப்புடன் இருந்தது. அங்குள்ள தமிழ்ச் சங்கங்களில் ஆண்டுதோறும் நாடகம் போடுவது வழக்கம். இதற்குப் பல நாடக ஸ்க்ரிப்ட்கள் வரும். இவற்றை ஒரு குழுவாக விவாதித்துதான் தேர்ந்தெடுப்பார்கள். பொன்னியின் செல்வன் நாடகம் போட வாய்ப்புக் கேட்டு அணுகினேன். பொன்னியின் செல்வனைவிட பெரிய ஸ்கிரிப்ட் எதுவாக இருக்க முடியும் என்று சொல்லி அப்பொழுது சான்ஃப்ரான்சிஸ்கோ தமிழ் மன்றத் தலைவராக இருந்த லேனா கண்ணப்பன் உடனடியாக அனுமதி அளித்தார், ஸ்பான்ஸரும் கிடைத்தது.

அரங்கேற்றுவதில் சவால்கள்?

எக்கசக்கமான பிரச்சினைகள். முதலில் இங்கு யாருக்கும் தூய தமிழில் பேசத் தெரியாது. தமிழகத்திலேயே ஆங்கிலம் கலந்த தமிழாகத்தானே இருக்கிறது. ஒரு அந்தணர் வருகிறார் என்றால், அவர் இப்படிதான் நிற்பார், இப்படிதான் நடப்பார். இப்படிதான் பேசுவார் என்ற வரைமுறையைக் கல்கி காட்டி இருப்பார். அமெரிக்காவில் செட்டில் ஆன ஆண்களிடமும் பெண்களிடமும் அந்தக் கால நளினத்தையும், கம்பீரத்தையும் கொண்டுவர வேண்டும்.

இவர்களுக்கு எப்படிப் பயிற்சி கொடுத்தீர்கள்?

தேர்வு செய்யப்பட்டவர்கள் தொழில்முறை நாடக நடிகர்கள் அல்ல. நடை முதல் உடை வரை ஒவ்வொன்றிற்கும் பயிற்சி கொடுக்க வேண்டும். நன்கு தமிழ் தெரிந்த என்னைப் போன்ற இரண்டு, மூன்று பேர் வசனங்களைப் பேசி, பதிவுசெய்து, அவர்களிடம் கொடுத்து மனப்பாடம் செய்ய வைத்தோம். பேசவைத்துத் திருத்தினோம். இதற்கு மட்டும் இரண்டு மாதமானது. மொத்த நாடகமும் தயாராக ஒரு வருடம் ஆனது.

வரவேற்பு எப்படி இருந்தது?

சான்ஃப்ரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய இரண்டு நகரங்களிலுமே அரங்கம் நிரம்பி வழிந்தது. நாடகத்தைப் பார்த்தவர்களைவிடவும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றவர்கள் அதிகம். மூன்றரை மணிநேரம் ஓடிய நாடகம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

ஒரு காட்சியில் குந்தவை படகில் செல்வாள். படகு மேடையில் இந்த மூலையில் இருந்து அந்த மூலை வரை செல்லும். மேடையில் தண்ணீருக்கு எங்கே போவது? கம்ப்யூட்டர் மூலம் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கொடுத்தோம். இந்தக் காட்சியிலும் கைதட்டல் விண்ணைப் பிளந்தது.

இந்தக் காலத்தில் எதற்கு இப்படியொரு முயற்சி?

ராஜராஜ சோழனின் தியாக வரலாறுதான் முக்கிய காரணம். எத்தனையோ மன்னர்கள் தந்தையைக் கொன்று அரசாட்சியைப் பிடித்திருக்கிறார்கள். ஆனால் இவரோ ஆட்சியைத் தியாகம் செய்து இருக்கிறார். இந்த வரலாற்றுச் செய்தி இளைஞர்களிடையே பரவ வேண்டும். அந்த காலத்தில் தியாகமே வீரம். இப்போது தியாகம் செய்தால் கிறுக்கன் என்பார்கள். அடிதடிதான் ஹீரோயிஸம். நம் தியாக வரலாற்றின் பாரம்பரிய பெருமை பொன்னியின் செல்வன் மூலம் இளைய சமுதாயத்தை அடைய வேண்டும். இனிவரும் காலம், இளைஞர்களின் காலம்தானே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x