Published : 01 Feb 2014 01:39 PM
Last Updated : 01 Feb 2014 01:39 PM

தீராத துயரேதும் உண்டோ? ‘இசை முரசு’ அபூ பக்கருடன் ஒரு சந்திப்பு

கோடி பெறுமதிகள் கூடும்

ஒரு மதி போல்

வாடி அம்மானே பெம்மானே மனோன்மணியே

கூந்தலுக்கு நெய் துவைத்து

குளிர் மஞ்சள் நீராட்டி

வாழ்ந்து சிங்காரித்து வைப்பேன்

மனோன்மணியே

காலில் பனி நீர் விட்டு

கழுவி மடி மீது வைப்பேன்

மேலில் அத்தரும் பூசிவிடுவேன்

மனோன்மணியே

மனோன்மணியே

என்று அவர் பெருங்குரலெடுத்துப் பாடும்போது அரங்கத்தின் ஆரவாரங்கள் உடைந்து நிசப்தத்தில் கரைகிறது. கடவுளைக் காதலனாக வரித்துப் பெண் கவிஞர்கள் பாடியதுபோல மனைவியாகப் பாவித்து அவரது அன்புக்கு இறைஞ்சும் குணங்குடி மஸ்தான் சாகிபின் பாடலைத் துயரம் தோயப் பாடும் அபூ பக்கரின் குரலில் தமிழ் இஸ்லாமிய இசையின் வளமையும் மகத்துவமும் இழையோடுகின்றன.

“படிப்பை மூன்றாவதோடு நிறுத்திவிட்டேன். இசை மீதான நாட்டம் அதிகமிருந்தது. பத்து வருடங்கள் கர்நாடக இசை படித்தேன். பல வருடங்களாக ஊர் ஊராகச் சென்று இஸ்லாமியப் பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கிறேன்” என்று சொல்லும் அபூ பக்கருக்கு வயது 77. கன்னியாகுமரியில் உள்ள சிறு கிராமமான காஞ்சன்புரத்தில் பிறந்த அபூ பக்கரின் வீட்டிலேயே இசை குடிகொண்டிருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து புலவருக்குரிய அரச படிகளைப் பெற்ற குடும்பம் அது.

“வீட்டில் கிட்டத்தட்ட எல்லோருக்குமே இசைமீது ஆர்வம் இருந்தது. எங்கள் குடும்பத்திலேயே இருந்த வாப்புக்கண் ஆசானிடம்தான் நான் இசை பயின்றேன்” என்கிறார். கர்நாடக இசைப் பயிற்சி காரணமாக தியாகராஜர் கீர்த்தனைகளையும் அழகாகப் பாடுகிறார் அபூ பக்கர். “எனது மகன் சமஸ்கிருதக் கல்லூரியில் படித்தவர். அதில் சிறந்த மாணவராகத் தேர்ச்சி பெற்றவர். இந்து மத சம்பிரதாயத்தில் உள்ள பல சிக்கலான சங்கதிகள் அவருக்கு நன்றாக வரும்” என்று பெருமையாகச் சொல்கிறார்.

பத்து வருடப் பயிற்சி என்பது ஒப்பீட்டளவில் குறைவானதே. ஆனால் அபூ பக்கரின் ஆர்வமும் முயற்சியும் தேடலும் அவரை பல இடங்களுக்குக் கொண்டுசென்றது. அப்படித் தொடங்கிய இசைப் பயணம் இன்றுவரை நிற்கவில்லை. அருணகிரிநாதரின் திருப்புகழை அடியொற்றி ,காசிம் புலவர் எழுதிய நபிகள் மீதான திருப்புகழை அபூ பக்கர் மூச்சைப் பிடித்துப் பாடும்போது அரங்கம் மீண்டும் அதிர்கிறது.

“இஸ்லாத்திற்கு என்று வளமான இலக்கிய மரபு உள்ளது. அருணகிரிநாதரைப் போல திருப்புகழ் இயற்றுவது கடினம் என்று அவரது ஆசிரியர் சொன்னபோதுதான் அதை சவாலாக ஏற்று பகுருமுருவிலி அருவிலி வெருவிலி என்னும் சீரை முதலாகக் கொண்டு காசிம் புலவர் 141 பாடல்களை இயற்றினார். உமறுப் புலவர் பாடிய சீறாப்புராணம் இன்றளவும் தலைசிறந்த தமிழிலக்கியமாக விளங்குகிறது. நபிகளின் வாழ்கை வரலாற்றைச் சொல்லும் அதில் தமிழின் பல சிறப்புகளையும் உமறுப் புலவர் எழுதியிருப்பார்” என்று சொல்லும் அபூ பக்கர் வருடத்தில் சில நாட்களாவது சீறாப் புராணத்தைக் கதா காலட்சேப பாணியில் பல இடங்களில் பாடிக்கொண்டிருக்கிறார்.

1970களில் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்த அபூ பக்கருக்குத் திருப்புமுனையாக அமைந்தது கவி கா.மு. ஷெரீஃபுடனான நட்பு. கவி காமு ஷெரீஃபுடன் இணைந்து சீறாப்புராணக் கச்சேரிகள், இஸ்லாமியப் பாடல் கச்சேரிகள் என்று சுற்றித் திரிந்திருக்கிறார். “ஒரு முறை அவரிடம் யேசுதாஸ் பாடிய ஹரிவராசனம் என்கிற பாடலை சிலாகித்துப் பாடிக்கொண்டிருந்தேன். அப்போது அதே மெட்டில் காமு ஷெரிஃப் உருவமற்றவன் என்று தொடங்கும் பாடலை எழுதினார்” என்று சொல்லிக்கொண்டே மெல்லக் கண் மூடி தீராத துயரேதும் உண்டோ என்று பாடத் தொடங்குகிறார்.

ஆனால் தீராத துயரமொன்று அபூ பக்கரிடமும் இருக்கக்கூடும். தமிழ் இஸ்லாமிய இசை மரபின் உதிரியாக இருக்கும் அபூ பக்கர் அதன் கடைசித் தலைமுறையாகவும் இருக்கக் கூடும் என்பதுதான் அது. “இந்தக் கலைக்குத் தனியாக பயிற்சி பெற வேண்டும், தனியாகச் செலவு செய்ய வேண்டும். தணியாத ஆர்வம் வேண்டும். இப்போது என்னிடம் ஆர்வத்தோடு கற்க வரும் சிலருக்கு நான் முடிந்தவரை சொல்லித் தருகிறேன். ஆனால் அதற்குப் பயன் இருக்குமா என்று தெரியவில்லை” என்கிறார்.

நொடிப்பொழுதில் அவரது கலக்கம் மறைகிறது. “ எனக்கோ, கா.மு.ஷெரீஃபுக்கோ எங்களுக்கு முன்பு வாழ்ந்த இஸ்லாமியக் கலைஞர்களுக்கோ நோக்கம், இறைவன் மட்டுமே. எங்களது கலையின் நோக்கம் அவனைச் சென்றடைய வேண்டும் என்பது மட்டுமே. இறைவன் நினைத்தால் எங்களைப் போலப் பலரை உருவாக்குவான். “இறைவன் மிகப் பெரியவன்” என்கிறு அபூ பக்கர் மெய்சிலிர்க்கிறார். அரங்கில் அனைவரையும் கரையவைத்த ‘ரகுமானே’ என்று தொடங்கும் குணங்குடியின் உருக்கமான பாடல் காதுகளில் எதிரொலிக்கிறது.

தொடர்புக்கு: kavitha.m@kslmedia.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x