

எத்துறையைச் சேர்ந்த சாதனையாளருக்கும் கலைத்துறையினர் மீது மாளாக் காதல் உண்டு. அதிலும் பாட்டில் நெஞ்சைப் பறிகொடுக்காதார் யார்? திரைப்படக் கதாநாயகனையொத்த அழகும் மனது நினைத்ததை அப்படியே குற்றால அருவியாய்க் கொட்டும் பிருகா குரலும் கொண்ட ஜி.என். பாலசுப்பரமணியத்தைப் போலப் பாட விரும்பாத இசைக்கலைஞர்கள் யார் இருக்கிறார்?
ஆனால் மேடைகளில் மகாராஜாவாக வலம் வந்த ஜி.என்.பிக்கும், ஜி.என்.பி. என்ற மனிதருக்கும் இடையே பெரும் இடைவெளி இருந்தது. இசை உலகத்தை அவர் அடியோடு வெறுத்தார். தன்னுடைய கடைசிக் காலத்தில் திருவனந்தபுரத்துக்கு வசிக்கச் சென்ற அவர், தன்னுடைய மாணவியான எம்.எல். வசந்தகுமாரியிடம், தான் காலமானால், தன்னுடைய உடல்கூடச் சென்னைக்கு வரக் கூடாது என்று கட்டாயமாகக் கூறியிருக்கிறார். இசை குறித்து ஜி.என்.பி.யின் மனநிலை எப்படி இருந்தது என்பதை அவருடைய மூத்த மகன் பி. துரைசாமி விவரிக்கிறார்:
“எங்கள் குடும்பத்தில் யாரும் இசையை முழு நேரத் தொழிலாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இசை உலகம் ஒரு கானகம் என்றும் குடும்பத்தில் ஒருவர் அதில் நுழைந்திருப்பதே போதும் என்றும் சொன்னார். என்னுடைய சகோதரிகள் இசை பயின்றனர். ஆனால் அது திருமணத்துக்குத் தேவைப்படும் ஒரு கூடுதல் தகுதியாகவே கருதப்பட்டது. அப்பா வீட்டில் இல்லாதபோதும், பாட்டு வாத்தியார் சும்மா இருக்கும்போதும் மட்டுமே கற்றுக்கொண்டார்கள். நாங்கள் எல்லோருமே அப்பா இல்லாதபோதுதான் பாடுவோம்.” என்கிறார் அவர்.
இசை உலகில் இருந்த போட்டியும் பொறாமையும் ஜி.என்.பி.க்கு மிகவும் கசப்பான அனுபவங்களைத் தந்தன. ஒரு கட்டத்தில் எல்லோரையும் கட்டிப்போட்ட அவருடைய குரல் உடைந்துபோனதும், இன்னும் நொறுங்கிப் போனார்.
ஜி.என்.பி. மட்டுமல்ல. இசை உலகில் கொடிகட்டிப் பறந்த பெரும் கலைஞர்கள் எல்லோருமே, தொழில் ரீதியாக இசைத்துறையில் நுழைவதற்குத் தங்கள் குழந்தைகளை அனுமதிக்கவில்லை. நிச்சயமற்ற வருமானம், பொருளாதார நெருக்கடிகள் இவை ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு பெருங்கலைஞனின் குழந்தைகளுக்கு அவர்களுடைய தந்தையின் புகழே எதிரியாவதும் முக்கியக் காரணம்.. எப்படிப் பாடினாலும், நடித்தாலும், “அவர் அப்பா மாதிரி வருமா” என்ற வார்த்தைகள் வெளிப்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. ஆலமரத்தின் நிழலில் அரிதாகவே செடிகள் வளர்கின்றன.
மிருதங்க மேதை பாலக்காட்டு மணி ஐயரின் மகன்கள் ராஜாமணியும் ராஜாராமும் இசை பயின்றவர்களே. ராஜாராம் வயலின் கற்றவர். ராஜாமணியோ தன்னுடைய தகப்பனாரோடு சேர்ந்து இரட்டை மிருதங்கம் வாசித்துக் கச்சேரிகளைக் களைகட்ட வைத்த காலம் உண்டு. ஆனால் மிருதங்க வாசிப்பைத் தொழிலாக வைத்துக்கொள்ள அவர் தன் பிள்ளைகளை அனுமதிக்கவில்லை.
இசையைத் தொழிலாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளுணர்வும் கலைஞனின் உள்ளத்தில் எழ வேண்டும். அந்த உணர்வுகள் வராத வரைக்கும் அதில் வெற்றி பெற முடியாது என்பதைப் பாலக்காட்டு மணி ஐயர் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். இன்று ராஜாராமின் மகன் பாலக்காடு ராம்பிரசாத் கச்சேரி மேடைகளில் நம்பிக்கைக் கீற்றாக வலம் வருகிறார். அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற அவர், இசையை முழுநேரமாக ஏற்க முன்வந்தபோது அவரை ஊக்கப்படுத்தவில்லை என்கிறார் ராஜாராம்.
“இசைக்கலைஞனாய்ப் பரிணமிப்பது சாதாரணக் காரியமல்ல என்பதை எல்லாப் பெருங்கலைஞர்களும் உணர்ந்திருந்தார்கள். அதன் காரணமாகவே அவர்கள் தங்கள் குழந்தைகள் அத்துறையில் நுழைவதை ஊக்குவிக்கவில்லை,” என்கிறார் கர்நாடக இசை வரலாற்றாசிரியரும் செம்மங்குடி சீனிவாசய்யரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவருமான வி. ராம்.
“எனக்குத் தெரிந்து இதை மாற்றியமைத்தவர் மகாராஜபுரம் சந்தானம் மட்டுமே. மகராஜபுரம் விஸ்வநாதய்யர் என்ற ஆளுமையைத் தாண்டி, தனக்கென ஒரு பாட்டையை வகுத்துக் கொண்டு, கர்நாடக இசை உலகை ஆட்டிப்படைத்தவர் சந்தானம்,” என்று கூறுகிறார் ராம்.
ஆனால் சந்தானம் போன்றவர்கள் வெகுசிலரே. ஆலத்தூர் சகோதரர்கள் குடும்பத்தில் யாரும் இசையை முழுநேரமாக ஏற்கவில்லை. பாலமுரளிகிருஷ்ணாவின் மகன் வம்சி ஒரு மருத்துவர்.
“நாங்கள் இசை பயிலக் கூடாது என்று எங்கள் தந்தை விரும்பினார். அவருடைய அடிமணதில் ஒரு கசப்புணர்வு இருந்தது. எனக்கும் என்னுடைய சகோதரிகளுக்கும் இசையில் ஆழ்ந்த அறிவு உண்டு என்றும் எங்களால் பாட முடியும் என்பதும் கூட அவருக்குத் தெரியாது,” என்றார் வயலின் வித்வான் திருவாலங்காடு சுந்தரேசய்யரின் மகனான எஸ். நீலகண்டன்.
கல்லூரிப் படிப்பை முடித்த நீலகண்டனை, இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கஸ்தூரி சீனிவாசனிடம் அழைத்துச் சென்றார் சுந்தரேசய்யர். அவருடைய முயற்சியின் காரணமாக வங்கிப் பணியில் சேர்ந்தார் நீலகண்டன். இசையின் மீது அளவற்ற ஆவல் கொண்ட நீலகண்டன், எந்தக் கலைஞர் பாடியதையும் வாசித்ததையும் அப்படியே பாடிக்காட்டுவதில் வல்லவர்.
ஒரு காலத்தில் சுந்தரேசய்யரும் இராமநாதபுரம் கிருஷ்ணனும் சேர்ந்து கச்சேரிகள் செய்துவந்தனர். அவர்களுடைய பியாகடை, சஹானா, பைரவி, முகாரி இராகத்தைப் போல் இன்னொருவர் வாசிக்கவோ பாடவோ முடியுமா என்ற அளவுக்கு அதில் தங்களுடைய முத்திரையைப் பதித்தனர். அந்த இராமநாதபுரம் கிருஷ்ணனும் தன்னுடைய இரண்டு மகன்களையும் இசைத்துறைக்கு அழைத்து வரவில்லை.
“எங்கள் தந்தையைப் பொறுத்தவரை உச்சக்கட்டத் தனித்துவத்தை எதிர்பார்த்தவர். அதை எட்ட முடியவில்லையெனில் பாடுவதில் பொருளில்லை என்பது அவரது வாதம். மேலும் இத்துறையில் நிலவிய நிச்சயமற்ற வருமானமும் அவர் எங்களை ஊக்குவிக்காததற்குக் காரணம்,” என்று விளக்கினார் கிருஷ்ணனின் மகன் ஆர்.கே. ராமநாதன். உலகப் புகழ் பெற்ற அமெரிக்கன் ரெமிடீஸ் என்ற மருந்துத் தொழிற்சாலையை உருவாக்கிய ராமநாதன், தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் தங்களால் சாதிக்க முடிந்தது என்றால் அதற்குத் தந்தை தங்களுக்குள் ஊட்டிய உலக அறிவும் வழிகாட்டுதலும்தான் என்றார்.
“எனக்கு மிருதங்கம் வாசிக்கத் தெரியும். சபரிமலைக்குச் செல்லும்போது எங்கள் குழுவினர் செய்யும் பஜனைக்கு நான்தான் மிருதங்கம்,” என்று கூறிச் சிரிக்கிறார் ராமநாதன்.
இவர்களுடைய கதை இப்படி இருந்தாலும், லால்குடி ஜெயராமனின் மகனான கிருஷ்ணனும் மகள் விஜயலட்சுமியும் தந்தையின் பாணியை உயர்த்திப் பிடிக்கின்றனர். டி.என். கிருஷ்ணனின் குழந்தைகளும். இன்று உயர் கல்வியைக் கற்று இசையை முழு நேரமாகத் தொழிலாக ஏற்றுக்கொண்டுள்ள இளைஞர்கள் மிகப் பலர். கடந்த காலத்தில் இது சாத்தியப்படவில்லை. நிகழ்காலம் இதைச் சாத்தியமாக்கியிருக்கிறது.