Last Updated : 13 Nov, 2013 04:15 PM

 

Published : 13 Nov 2013 04:15 PM
Last Updated : 13 Nov 2013 04:15 PM

மன்னவன் ஆனாலும்...

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்காவிலிருந்து முப்பது கி.மீ தொலைவில் இருக்கிறது நாட்டேரி என்ற அழகான கிராமம். நாட்டேரிக்குப் பக்கத்தில் பிரம்மதேசம் என்னும் ஊர். இந்த ஊரின் வெளிப்புறத்தில் பசுமையான வயல்வெளிக்கு மத்தியில் ஒரு செங்கல் கோபுர நுழைவாயிலின் எதிரில் இரண்டடுக்குக் கோபுரம் கொண்ட ஒரு பழங்காலக் கோயில் இருக்கிறது. பல நூற்றாண்டுகளைக் கடந்த அந்தக் கோயில் கட்டடம் கவனிப்பின்றிக் கிடக்கிறது. கைவிடப்பட்ட அநாதையைப் போல் நின்றுகொண்டிருக்கிறது. அந்தக் கோயில் கட்டடம் சாதாரணமான ஒன்றல்ல. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சோழப் பேரரசன் ராஜராஜ சோழனின் மகன், ‘கங்கை கொண்ட சோழன்’ ‘கடாரம் கொண்டான்’ என்றெல்லாம் புகழப்பட்ட ராஜேந்திரனின் கல்லறைதான் அந்தக் கட்டடம். தற்போது அந்த இடத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கண்டறிந்துள்ள இந்தியத் தொல்பொருள் துறை சுற்றுச்சுவர் அமைக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறது.

ராஜேந்திர சோழன் கல்லறை குறித்து நாட்டேரி கிராம மக்கள் பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் அதை ‘மடவலத்துக் கோயில்’ என்றுதான் சொல்கிறார்கள். சிலர் “கலெக்டர் எல்லாம் வந்து பார்த்துட்டுப் போனாங்களே அந்தக் கோயிலா?” என்று அடையாளப்படுத்துகிறார்கள். சிலர் இதைச் சந்திர மௌலீஸ்வரர் கோயில் என்கிறார்கள். மிக அரிதாக யாரேனும் ஒருவர்தான் ராஜேந்திர சோழனின் சமாதி என்று சொல்கிறார்கள்.

ராஜேந்திர சோழன் தன்னுடைய எண்பதாவது வயதில் நாட்டைச் சுற்றிப் பார்க்க வந்தபோது இங்கே இறந்துவிட்டதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். இந்த இடத்தைத் தொல்பொருள் துறை கையகப்படுத்தியிருந்தாலும் அதைப் பாதுகாப்பதற்கான முறையான ஏற்பாடுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றே தெரிகிறது. தொல்பொருள் பாதுகாப்புத் துறையிடம் கேட்கலாம் என்று சென்றால், இங்குள்ள தொல்பொருள் பாதுகாப்புத் துறை அலுவலகம் பெரும்பாலும் மூடியே கிடக்கிறது.

ராஜராஜ சோழனுக்குப் பிறகு சோழப் பேரரசை ஆண்டவன். தன் தந்தையுடன் பல களங்களில் பங்கேற்றவன். பல போர்களில் வெற்றி வாகை சூடியவன். ‘பண்டித சோழன்’ என்றெல்லாம் வரலாற்றில் புகழப்பட்டவன். இத்தனை பெருமைகள் பெற்ற ராஜேந்திரனின் கல்லறையை, அதைச் சுற்றி வாழும் கிராமத்து மக்களாலேயே அடையாளம் காண முடியாமல் அநாதையாகக் கிடக்கிறது. இதைப் பார்க்கும்போது “மன்னவன் ஆனாலும் மாடோட்டும் சின்னவன் ஆனாலும் மண்ணில் பிறந்தால் ஒரு நாள் மண்ணுக்கிரைதானே...” என்னும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

எவ்வளவு சிறப்பான வாழ்க்கை என்றாலும் தனிமனித வாழ்வு என்பது எல்லைக்குட்பட்டது. ஆனால் வரலாறு அப்படி அல்ல. ராஜேந்திர சோழன் வரலாற்றில் தடம் பதித்தவன். அவன் நினைவைப் போற்றுவது வரலாற்றை நினைவுகொள்வதாகவே அமையும். அரசு நிர்வாகமும் சமூகமும் இதை மனதில் கொள்ள வேண்டும்.









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x