Published : 04 Jan 2014 00:00 am

Updated : 06 Jun 2017 17:33 pm

 

Published : 04 Jan 2014 12:00 AM
Last Updated : 06 Jun 2017 05:33 PM

இதயத்தையும் கண்களையும் திறந்து வைத்திருக்க வேண்டும் - பாப்லோ பார்த்தலோமவ் நேர்காணல்

போபால் விஷவாயு பயங்கரத்தின் துயரங்களைப் புகைப்படங்களாக எடுத்து, மறக்க முடியாத நினைவுப் பதிவுகளாக மாற்றியவர் பாப்லோ பார்த்தலோமவ். தி இந்து நடத்தும் லிட் ஃபார் லைப் இலக்கியத் திரு விழாவில் பங்கேற்றுத் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளார்.

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் போபால் பயங்கரம் குறித்த உணர்வுகள் பீதியுட்டுவதாக உள்ளன? உங்கள் புகைப்படங்களும் அதற்கு ஒரு காரணம் இல்லையா?


நிர்வாக முறைகேடுகளும், தனிப்பட்ட சிலரின் சுயநலங்களும் சேர்ந்து உருவாக்கிய பயங்கரம் அது. சில மனிதர்களைப் பொறுத்தவரை அந்தத் துயரம் மறக்கடிக்கப் படுவது சௌகரியமானது. ஆனால் அது மறக்கடிக்கப்படாது.

என்னைப் பொருத்தவரையில், நல்ல மாற்றம் எதையும் ஏற்படுத்தாத நிலையில் புகைப்படக்கலையின் தோல்வி என்றே கருதுகிறேன். புகைப்பட இதழியலே போபால் பிரச்னையில் தோல்வி அடைந்து விட்டதென்று நினைக்கிறேன். ஒரு மாற்றத்தை உருவாக்க முடியாத அளவுக்கு நாம் தடித்த தோல் கொண்டவர்களாகி விட்டோம். அங்கிருந்துதான் அந்தத் தோல்வி தொடங்குகிறது.

போபால் போன்ற சம்பவங்களில் புகைப்பட இதழியலாளர்கள் எப்படியான பங்கை வகிக்க வேண்டும்?

நான் மற்றவர் பற்றி கருத்து கூற முடியாது. எனது இருபதுகளில் நான் செஞ்சிலுவை சங்கத்தினருக்காகப் பணிபுரிந் தேன். மருந்துப் பொட்டலங்களைச் சுமந்து சென்ற நாட்கள் என் இன்னும் ஞாபகத்தில் உள்ளன. வெள்ளம் பாதித்த மாநிலங்களான ஒடிஷா, ஆந்திரப் பிரதேசத்தில் முதலுதவி மருத்துவராக அடிப்படை மருத்துவ உதவிகளை செய்தேன். இதை யெல்லாம் மீறி, நான் புகைப்படங்களை எடுக்க வேண்டும்… நல்ல புகைப்படங்களை.

புகைப்படங்களை எடுக்கும்போதோ, எடுத்த பிறகோ அதன் உள்ளடக்கத்தை நமது விருப்பத்திற்கு மாற்றுவது குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன?

புகைப்படம் எடுக்கும்போதே நாம் எடிட் செய்கிறோம். புகைப்படம் எடுப்பதின் இன்றியமையாத அங்கம் அது. எதை எடுக்கப்போகிறோம்; எதை சேர்க்கப்போகிறோம் ; எதை விலக்கப் போகிறோம் என்பதையெல்லாம் தீர்மானிக் கிறோம். இந்த விஷயங்கள் எல்லாம் அவரவருடைய முடிவைச் சார்ந்ததே. புகைப்படம் எடுப்பவர் தனக்கு உண்மையாக இருத்தல் வேண்டும். மற்றதெல்லாம் தானாகவே இயல்பாக நடந்துவிடும்.

பத்திரிகைக்குப் போன பிறகு, புகைப்படங்களின் மீதான கட்டுப்பாடு நம் கையைவிட்டுப் போய்விடும். அதைப் பயன்படுத்துவதில், வெட்டுவதில், தலைப்பிடு வதில் அந்த நிறுவனம் என்ன சொல்ல நினைக்கிறதோ, அதன் சாய்வு எதுவோ அதைப் பொறுத்ததே. பெரும்பாலும் புகைப்படங்கள் ஏஜன்சிகளாலேயே விநியோகிக்கப்படுகின்றன. பத்திரிக்கை நிறுவனங்களின் தேவைகளுக்கேற்ப அவை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் கணிப்பொறியில் டிஜிட்டலாகப் படங்களை மாற்றுவது முற்றிலும் வேறு பிரச்சினை. சில அம்சங்களைத் தனியே எடுத்துப் பெரிதுபடுத்துவது, சில அம்சங்களைச் சேர்ப்பது போன்ற தலையீடுகள் ஏற்க முடியாதவை.

தொழில்முறை புகைப்பட இதழியலாளர் அல்லாதவர்கள் அன்றாடக் காட்சிகளைப் புகைப்படமாக எடுத்து, சமூக ஊடகங்களில் கொத்துகொத்தாக வெளியிடும் நிலையில் புகைப்பட இதழியலாளனின் வேலை என்பது என்ன?

பெருமளவு ஒதுக்கப்பட்டுள்ளனர். கொடுக்கப்படும் பணம் மிகவும் குறைவு. செய்திக் கட்டுரைகளுக்குப் படம் எடுக்க அவர்களுக்கு அவகாசமும் அதிகம் கொடுக்கப்படுவதில்லை. ஒருவேளை இதுதான் புகைப்பட இதழியலின் புதிய முகமாகக்கூட இருக்கலாம். முன்பெல்லாம் பத்திரிகைகளும், புகைப்பட ஏஜன்சிகளும் புகைப்பட இதழியலுக்கு நிதி ஆதாரமாக இருந்தன. தற்போது அந்த இடம் காலியாகிவிட்டது. புகைப்பட இதழியலாளரும், ஆவணப் புகைப்படக் கலைஞர்களும் தங்கள் வேலைகளுக்கான செலவுகளுக்கு, வேறு வழிகளைத் தேடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புகைப்பட இதழியல் என்பது புகைப்படக் கலைஞரும், பத்திரிக்கை நிறுவனம் அல்லது ஏஜன்சியும் சேர்ந்து ஈடுபடும் பணியாகும். இப்படியான கூட்டு இல்லாத நிலையில் செய்தியின் தன்மையும் மாறிவிடுகிறது. பல பத்திரிகைகளின் பக்கங்கள் சுருங்கிவிட்டதால் நீளமான செய்திக் கட்டுரைகளுக்கான இடமும் குறைந்துவிட்டது. கதைசொல்லும் வகைமையே அபாயத்தில் உள்ளது. இ-புக் முதல் ஆப்ஸ் வரை பல புதிய ஊடகங்கள் வந்துள்ளன. ஆனால் கௌரவமிக்கதாகக் கருதப்படும் பத்திரிக்கை நிறுவனங்களிடம் இருக்கும் ஊக்கம், புதிய ஊடகங்களை நடத்துபவர்களுக்கு இருக்கிறதா? உள்ளடக்கத்தை முடிவு செய்து வெளியிடும் எடிட்டோரியல் செயல்முறையில் பல பரிசீலனைகள் உண்டு. அதுதான் அதை நம்பகத்தன்மை கொண்டதாக்குகிறது.

இந்திய ஊடக நிறுவனங்கள் புகைப்பட இதழியலாளர்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுக்கிறதா?

சுதந்திரம் குறித்த பிரச்சினை அல்ல அது. ஆனால் புகைப்படத்திற்கு அவசியமான இடம் வேண்டும். விளம்பரத்திற்குத்தான் அதிக இடம் அளிக்கப்படுகிறது. அதனால் இனி புகைப்படங்களுக்கு அதிக இடமளிப்பது நடக்கவே நடக்காது.

ஒரு புகைப்பட இதழியலாளராக ஆவதற்கான சிறப்புத்தகுதி என்ன?

ஒரு நல்ல புகைப்படக்காரர் இதயத்தை யும், கண்களையும் திறந்து வைத்திருக்க வேண்டும். அத்துடன் கடுமையான விரக்தி யையும், அவமதிப்பையும் தாங்கும் திறன் இருக்க வேண்டும். ஏனெனில் ஊடக நிறு வனங்களில் கடைபிடிக்கப்படும் வேலை நடைமுறைகள் மோசமானவை.

தமிழில்: ஷங்கர்.
பாப்லோ பார்த்தலோமவ்புகைப்பட இதழியலாளர்இந்திய ஊடக நிறுவனம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x