

ஜனவரி 5ஆம் தேதி அன்று மாலை சங்கீத வித்வத் சபையின் ஆதரவில் நடன மாமணி சுதாராணியின் ஸ்ரீ பரதாலயா குழுவினரின் ‘த்ரிபாதம்’ என்ற அற்புதமான நாட்டிய நாடகம் நடைபெற்றது.
‘த்ரிபாதம்’, என்றால் மூன்று பாதங்கள். மஹாவிஷ்ணு மாபலிச் சக்ரவர்த்தியிடம் மூன்று அடி நிலங்களைக் கேட்கும் நிகழ்வினை விளக்கும் நாட்டிய நாடகம் இது. இந்த நிகழ்வில் பல சிறப்புக்களை நாம் காண முடிந்தது. நிகழ்வினைத் துவக்கத்திலிருந்து இறுதிவரை கட்டியக்காரனின் பாத்திரத்தினைக்கொண்டு விளக்கி யிருந்தார்கள். மிக அழகாகப் ‘பாலும் தெளிதேனும்’ என்ற வேழமுகனின் வணக்கத்திலிருந்து துவங்கியிருந்தார்கள்.
நிகழ்வுகளை விளக்கும்போது புரந்தரதாசரின் தேவர்நாமா, மண்ணிசைப் பாடல்கள், புருஷசூக்தம், விஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீமன் நாராயணீயம், அஷ்டபதி, கம்ப ராமாயணம், தசாவதார ஸ்தோத்ரம், ரிக்வேதம், ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றிலிருந்து நாட்டிய நாடகத்திற்குப் பொருத்தமான பகுதிகளைத் தெரிவு செய்து அவற்றிற்கு இசை அமைத்து வழங்கினார்கள்.
இவை தவிர ஹுசேனி ஸ்வரஜதியின் சுரப் பகுதி மிகவும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. நாம் பொதுவாகக் குழந்தைகளைக் கொஞ்சுவதற்குப் பயன்படுத்தும் ‘சங்கு சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம்’ என்ற பாட்டினைப் பயன்படுத்தியிருந்த விதம் கொள்ளை அழகு. நாட்டிய நாடகத்தின் முடிவில் ‘ஸ்ரீராம் ராம ராமேதி ரமே ராமே மனோரமே’, என்ற விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்லோகத்தினைக் கூறி திவ்யமாக முடித்தார்கள்.
இந்த நாட்டிய நாடகத்தில் ‘ஆஹார்ய அபிநயம்’, என்று பரதரின் நாட்டிய சாஸ்திரத்தில் கூறப்படும் ஆடை அணிகலன்களை வெகு நேர்த்தியாக வடிவமைத் திருந்தனர். நடனமாடிய அனைவரும் மிக நல்ல உடல் அமைப்பினைப் பெற்றிருந்தது சிறப்பு. ஒரு இடத்தில்கூட ஒருவருக்கும் தாளமோ ஜதியோ தப்பவில்லை.
வண்டாக நடனமாடியவர் உண்மையிலேயே வண்டு போல் வளைந்து வளைந்து ஆடினார். அவருக்கு கருப்பு நிற உடை மிகவும் நன்றாக இருந்தது. சுக்ரனுக்கு வெள்ளை உடை, கட்டியக்காரனுக்கு நாட்டுப்புற உடை என்று இப்படிப் பார்த்துப் பார்த்துச் செய்திருந்தார்கள். ஒவ்வொரு பாத்திரத்தையும் அவர்கள் செதுக்கியிருந்த விதம் நெஞ்சை உருக்கியது. மிக அற்புதமான இசை. சாவேரி, கதன குதூகலம் போன்ற ராகங்களைப் பயன்படுத்தியிருந்தார்கள். நல்ல இசைப்பதிவு. மாவலி அரசனின் அரசவையை நமது கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருந்தார்கள். அற்புதமான கலைப்படைப்பு.
தமிழகத்தின் கலை மற்றும் பண்பாட்டினைப் போற்றி வளர்ப்பதில் சுதாராணி போன்ற கலைஞர்களின் பங்கு நிகரற்றது. இத்தகைய தலைசிறந்த கலைஞர்களைக் கொண்டு நமது அரசு கிராமப்புற மக்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். சுதாராணியிடம் ஒரு கேள்வி. என்றும் பதினாறாகத் திகழ்கிறீர்களே! எப்படி?