

கர்னாடக இசைப் பாரம்பரியத்தில் ஒரு சமயம் தீவிரமாகப் பின்பற்றப்பட்டுவந்த குருகுல வாசம் கால மாற்றங்களால் காலாவதியான கரன்சி நோட்டாக ஆகிவிட்டது. ஆனால் அதன் அடிப்படையாக இருந்த குரு சிஷ்ய உறவு அழியவில்லை. என்றும் அழியவும் முடியாது.
தங்கள் சிஷ்யர்களைத் தங்கள் வீடுகளில் தங்க வைத்துக்கொண்டு எல்லாச் சமயத்திலும் அவர்களுக்குப் பாடிக்காட்ட இயலாமல் போனபொழுது தாங்கள் பாடும் அனைத்துக் கச்சேரிகளிலும் தங்கள் சிஷ்யர்களைப் பங்கு பெறச்செய்தும் நடு நடுவில் அவர்களைப் பாடச்செய்தும் இந்த உறவைக் கர்னாடக இசைப் பாடகர்கள் சிறிது காலம் தொடர்ந்துகொண்டிருந்தார்கள்.
ஆனால், இதுவும் நெடு நாட்கள் நடைபெற முடியாத சூழ்நிலை தோன்றியது.
முன்பு போல நிகழ்ச்சிகள் மூன்று அல்லது நான்கு மணி நேரம் நடப்பதில்லை. பல இன்னல்களுக்கிடையில்வந்து, தேர்ந்த இசையை ரசிக்க எண்ணும் இசை விழாவின் குறைவான கால அவகாசத்தில் தங்களுக்குப் பிடித்த பாடகர்களின் கச்சேரியின் மத்தியில் ரசிகர்கள் இந்தச் டியூஷன் வகுப்பை விரும்பவில்லை. கால மாற்றத்தால் ஏற்பட்ட இந்த சூழ்நிலைக்கேற்ப பிரபலங்களின் சிஷ்யர்களுக்கும் புதியதாக இசைக் களத்தில் இறங்கும் ஆர்வலர்களுக்கும் பயன்படும் விதமாக இசை விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் மத்தியானக் கச்சேரி.
இப்படிப் பிறந்த இந்தப் பழக்கம் இன்று இசை விழாவின் முக்கிய ஒரு அம்சமாக விளங்குகிறது.
தொடக்கத்தில் விழாவில் வாய்ப்புக் கிடைக்காதவர்களின் புகலிடமாக இருந்த மத்தியானக் கச்சேரிகள் இப்போது வளரும் கலைஞர்கள் அறிமுகமாகும் ஒரு நல்ல களமாகத் திகழ்கின்றது.
அனுமதி இலவசம் என்ற சிறப்பு அம்சம் உள்ள இந்த நிகழ்வுகள், இசை விழாவுக்கென்றே சென்னைக்கு வரும் ரசிகர்களுக்கு மதியத்திலும் இசை விருந்து படைக்கின்றன.
சென்ற ஆண்டின் சீசனில் 12 மணிக்குப் பாடிய இன்னார் இந்தச் சீசனில் 4 மணிக்கு வந்துவிட்டார். பாருங்கள் இன்னும் இரண்டு வருடத்தில் 7 மணிதான் என்று தங்கள் அபிமான இளம் கலைஞர் பாடும் நேரம் மத்தியானத்திலிருந்து மாலைவரை போவதன் மூலம் அவர் வளர்ச்சியைக் கணிக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த மத்தியானக் கச்சேரிகள் முக்கியத்துவம் பெற்றுவிட்டன.