Last Updated : 28 Oct, 2013 12:12 PM

 

Published : 28 Oct 2013 12:12 PM
Last Updated : 28 Oct 2013 12:12 PM

தேசிய கீதம் பாடச் சொல்லிக் குடுக்கணும் - தேசத்தை நேசிக்கும் தேவார ஆசிரியர்

சினிமா பாட்டுக்களை அட்சரம் பிசகாமல் பாடத் தெரிந்த இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் எட்டிக்காயாய் கசக்கிறது. அர்த்தம் புரியாமல் கும்பலோடு ‘கோவிந்தா’ போடுகிறார்கள். “தேசிய கீதம் பாடத் தெரியாதது தேசத்துக்கே அவமானம்” என ஆதங்கப்படுகிறார் முனைவர் சுரேஷ்..

ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் முனைவர் சுரேஷ், தமிழிசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவரது தமிழிசைப் பணியைப் பாராட்டி 2010-ல் தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்தது. 2009-10ம் ஆண்டு மத்திய அரசின் செம்மொழி இளம் அறிஞர் விருதும் இவருக்குக் கிடைத்தது. அவரிடம் பேசியபோது, “மதுரையில எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் மீனாட்சி அம்மன் கோயில். தினமும் கோயிலுக்குப் போவேன். அங்கே வாசிக்கற நாகஸ்வரம், தவில் இசையில் மயங்கிடுவேன். அதைக் கேக்குறதுக்காகவே கோயில் மண்ட பத்துல கொஞ்ச நேரம் கண்ணை மூடி உக்காந்துட்டு வருவேன். எனக்குள்ள இசை ஞானம் வளர்றதுக்கு அதுதான் மூலகாரணம்” என ஆரம்பித்து, தொடர்ந்து பேசினார்…

தமிழ் இசை குறித்த தகவல்கள் எங்கெல்லாம் இருக்கும்னு 19 வயசுலயிருந்து தேட ஆரம்பிச்சேன். அதுக்கேத்த மாதிரி, என்னோடப் படிப்பையும் தமிழ்ச் சார்ந்த படிப்பாக தேர்ந்தெடுத்தேன். தமிழில் எம்.ஏ., எம்.ஃபில். முடிச்சேன். முறைப் படி கர்நாடக சங்கீதமும் படிச்சு, இசை யில் எம்.ஏ., பி.ஹெச்டி பட்டம் வாங்கி னேன். கர்நாடக சங்கீதம் மாதிரி தமிழிசை இருக்காது. அதன் அர்த்தம் பாமரருக்கும் புரியும்.

தமிழிசையின் சிறப்பு குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு ஆய்வுக் கட்டுரை, புத்தகங்கள் எழுதினேன். தேவார ஆசிரியராக பணியில் இருந்து கொண்டே தமிழகம் முழுவதும் தமிழ் இசைக் கச்சேரிகளையும் ஆய்வரங்கங்களையும் நடத்தினேன்.

பள்ளி, கல்லூரிகளில் மாணவ களுக்கான தேவார ஒப்பித்தல் போட்டிகளுக்கு சென்றபோது, பெரும்பாலான மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தேசிய கீதத்தையும் பாடத் தெரியாமல் திக்கிக் திணறிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனேன். இது தேசிய அவமானம் இல்லையா?

எல்லா மாணவர்களுக்குள்ளும் இசை ஞானம் நிச்சயம் இருக்கும். ஆனால், முறைப்படி பயிற்சி கொடுத்தால் மட்டுமே அதை வெளிக்கொண்டுவர முடியும். அந்தப் பயிற்சி இல்லாததால்தான் மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தே பாடத் தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களை திருத்துவதுதான் இப்போது என் வேலை.

நான் பணியாற்றும் ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமாரைச் சந்திச்சு, விருப்பத்தைச் சொன்னேன். அவரும் ஏத்துக்கிட்டாரு. முதல்படியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தில் உள்ள வரிகளின் அர்த்தங்களைச் சொல்லி முறையாக பாடக் கற்றுக் கொடுத்துட்டு வர்றேன். இதுவரை ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 25 பள்ளிகளில் எனது பயிற்சி வகுப்புகளை முடித்து விட்டேன்.

தமிழகம் முழுவதும் இசைக் கச்சேரிகளுக்கு போன இடங்களில் சுமார் 15 ஆயிரம் மாணவர்களுக்கு எனது சொந்த முயற்சியில் இந்தப் பயிற்சியை கொடுத்திருக்கிறேன்.

இதைக் கற்றுக்கொள்ள 3 மணி நேரம் போதுமானது. எந்தப் பள்ளிக்காவது எனது பயிற்சி வகுப்புகள் தேவைப்பட்டால், தாராளமாக என்னை (அலை பேசி எண் 94439 30540) தொடர்பு கொள்ளலாம். தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் பயிற்சி வகுப்புக்களை நடத்திவிட வேண்டும் என்பதுதான் எனக்குள் உள்ள தாகம்… உருக்கமாக பேசி முடித்தார் தேசத்தை நேசிக்கும் இந்த தேவார ஆசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x